search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    27-ந்தேதி கும்பாபிஷேகம்: நெல்லையப்பர் கோவிலில் யாக சாலை பூஜை தொடங்கியது
    X

    27-ந்தேதி கும்பாபிஷேகம்: நெல்லையப்பர் கோவிலில் யாக சாலை பூஜை தொடங்கியது

    நெல்லையப்பர் கோவிலில் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்கான யாகசாலை பூஜை தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்கான நிகழ்ச்சிகள் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அன்று விக்னேசுவர பூஜை, புண்யாகவாசனம், தனபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. தினந்தோறும் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கும்பாபிஷேகத்துக்காக கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் அரங்கம் முன்பு யாகசாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 84 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு அங்கு வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    கும்பாபிஷேகத்தையொட்டி சென்னை, பாண்டிச்சேரி, மதுரை, தஞ்சாவூர், திருத்தனி, கோவை, திருச்சி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரிகள் நெல்லை வந்துள்ளனர்.

    இதுதவிர பல்வேறு ஊர்களில் இருந்து அச்சகர்களும் வந்து இருக்கிறார்கள். அவர்கள், யாககுண்டங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வருகிறார்கள்.

    நேற்று காலையில் மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. மாலையில் விக்னேசுவர பூஜை, புண்யாக வாசனம், கலாகர்ஷணம், கடம்யாகசாலை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜை தொடங்கியது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, உதவி ஆணையளர் சாத்தையா, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (புதன்கிழமை) காலை இரண்டாம் கால பூஜையும், மாலையில் மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை நான்காம் காலை யாகசாலை பூஜையும், மாலையில் ஐந்தாம் கால பூஜையும் நடக்கிறது.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் அன்று அதிகாலை 6-ம் கால பூஜை நடக்கிறது. பின்னர் காலை 9.30 மணிக்கு புனிதநீர் ராஜகோபுரம், விமானங்கள், நெல்லையப்பர், காந்திமதி அம்மாள், வேணுவன நாதர் ஆகியவர்களுக்கு தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பிஷேகத்தை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நெல்லை டவுன் நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடலில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லையப்பர் கோவிலில் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 
    Next Story
    ×