search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேகவிழா இன்று தொடங்குவதை முன்னிட்டு யாகசாலைக்கு சிவாச்சாரியார்கள் பிடிமண் எடுத்து வந்தபோது எடுத்தபடம்.
    X
    கும்பாபிஷேகவிழா இன்று தொடங்குவதை முன்னிட்டு யாகசாலைக்கு சிவாச்சாரியார்கள் பிடிமண் எடுத்து வந்தபோது எடுத்தபடம்.

    நெல்லையப்பர் கோவில் யாகசாலை பூஜை இன்று தொடக்கம்

    நெல்லையப்பர் கோவில் யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது. இதையொட்டி சிவாச்சாரியார்கள் தெப்பக்குளத்தில் இருந்து பிடிமண் எடுத்து வந்தனர்.
    நெல்லையப்பர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து வருகிறது.

    இதையொட்டி கடந்த 20-ந்தேதி முதல் ஹோம பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை 7 மணிக்கு சாந்தி ஹோமம், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி உள்ளிட்ட ஹோம பூஜைகளும் நடந்தன. இரவு யாகசாலையில் பயன்படுத்துவதற்கு வெளி தெப்பக்குளம் அருகில் உள்ள அங்கூர விநாயகர் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. யானை முன்னே செல்ல சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக அருகில் உள்ள தெப்பக்குளத்துக்கு சென்றனர். அங்கு பிடிமண்ணை சேகரித்து எடுத்து கொண்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக யாகசாலைக்கு அவர்கள் கொண்டு வந்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 3 மணிக்கு 6-வது கால யாகசாலை பூஜை தொடங்கி, 7.15 மணிக்கு கடம் எழுந்தருளுதல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 9.30 மணி முதல் 10.25 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதுதவிர தேரடி திடலில் தினமும் மாலை 6 மணி முதல் 9 மணிவரை பக்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு வாசுகி மனோகரின் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. இன்று 24-ந்தேதி மஹதி குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும், நாளை 25-ந்தேதி சுகிசிவம் பக்தி சொற்பொழிவு, 26-ந்தேதி சீர்காழி சிவசிதம்பரம் குழுவினரின் பக்தி இசை கச்சேரி, 27-ந்தேதி திருச்செங்கோடு ஜெயக்குமார் குழுவினரின் சாக்சாபோன் இசை கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
    Next Story
    ×