search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ணசாமிகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததையும், இதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்
    X
    கிருஷ்ணசாமிகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததையும், இதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்

    நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது

    நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கோவில்களில் வடசேரியில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதே போல இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 29-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் காலை 9.15 மணிக்கு திரளான பக்தர்களுக்கு மத்தியில் திருக்கொடியேற்றம் நடந்தது. அதன்பிறகு அன்னதானம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உணவு அருந்தினர். இரவில் பக்தி இன்னிசையை தொடர்ந்து புஷ்பக வாகனத்தில் சாமி எழுந்தருளினார்.

    திருவிழாவின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) ஆன்மிக சொற்பொழிவு, இசை பட்டிமன்றம், சிம்ம வாகனத்தில் சாமி எழுந்தருளல் போன்றவை நடக்கின்றன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனுமன் வாகனத்தில் சாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து விழா நாட்களில் காலையில் சாமி எழுந்தருளல், பகலில் அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்கின்றன.

    24-ந் தேதி நடைபெறும் 5-ம் நாள் திருவிழாவில் இரவு 8 மணிக்கு சாலமன் பாப்பையா தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடக்க உள்ளது. 25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்திரன் பங்கேற்கும் சுகமான ராகங்கள் நிகழ்ச்சியும், 27-ந் தேதி பாடகி ஜனனி ராஜன் குழுவினரின் பக்தி இன்னிசையும் நடைபெறுகிறது. 28-ந் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 29-ந் தேதி மாலை 4 மணிக்கு சாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், முத்துக்குடை யானை பவனி, 5 மணிக்கு ஆறாட்டு பூஜை, இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழா ஆகியவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×