search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது
    X

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 19-ந்தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை தாயுமானசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது.

    பின்னர் இரவு சுவாமி அம்பாள் கேடயத்தில் புறப்பாடு நடைபெற்றது. 2-ம் நாளான இன்று(சனிக்கிழமை)இரவு சுவாமி கற்பகத்தரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து 22-ந் தேதி மற்றும் 23-ந்தேதி சுவாமி வாகங்களில் புறப்பாடு நடைபெறுகிறது.

    24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காலை நூற்றுக்கால் மண்டபத்தில் 10.30 மணிக்கு மேல் சிவ பக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராய் வந்து மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலை விழா அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ ரிஷபவாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    வருகிற 25-ந்தேதி(புதன்கிழமை) காலை 10 மணிக்கு மேல் சுவாமி அம்பாளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கு வாகனத்திலும் புறப்பாடு செய்யப்படுகிறது.

    7-ம் நாள் சுவாமி நந்திகேசர் வாகனத்திலும், அம்பாள் யாளி வாகனத்திலும் புறப்பாடாகிறார்கள்.

    8-ம் நாளில் சுவாமி தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    9-ம் நாள் (28-ந்தேதி) காலை 5.15 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 29-ந்தேதி காலை நடராஜர் தரிசனமும், பிற்பகலில் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், அன்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் காட்சியளித்தல் நிகழ்ச்சியும், இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    11-ம் நாளான 30-ந்தேதி காலை திருக்குறிப்பு தொண்டர் உள் புறப்பாடும், அன்று இரவு சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கு வாகனத்திலும் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து மே 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 15-ம் நாளான 4-ந்தேதி பிரயாசித்தல் அபிஷேகம் ஆகியவற்றுடன் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×