search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தனே உலகத்தில் உயர்ந்தவர்கள்
    X

    பக்தனே உலகத்தில் உயர்ந்தவர்கள்

    உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் இயக்கிக் கொண்டிருக்கும் இறைவனையே, பக்தியால் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் பக்தர்களே உலகத்தில் உயர்ந்தவர்கள்.
    எங்கெல்லாம் ஆணவமும், அகங்காரமும் இருக்கிறதோ, அங்கெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தி நன்மைகளை உண்டாக்குபவர் நாரத முனிவர். அப்படிப்பட்ட நாரதருக்கே ஒரு சமயம் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. ‘இந்த உலகத்திலேயே எல்லோரையும் விடப் பெரியவர் யார்?’ என்பதே அவரது குழப்பத்திற்கு காரணம். மூவுலகிலும் தடையின்றி சஞ்சரித்து வரும் நாரத மகரிஷிக்கு திடீரென்று ஏற்பட்ட இந்த சந்தேகத்தால், எந்த செயலையும் சரியாக செய்ய இயலவில்லை. அவரால் இறைவனை தியானிப்பதில் கூட சிந்தனை வயப்பட முடியவில்லை.

    கலகத்திற்கு பெயர் போன நாரதரை, இப்போது கலக்கம் தொற்றிக்கொண்டது. நாரதர் என்ற பெயரைக் கேட்டவுடன் அவருடைய கலகம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் தொடங்கும் கலகம் பிரசித்திப் பெற்றவை. ஆனால் அவர் தொடங்கி வைக்கும் கலகங்கள் யாவும் பிறர் நன்மையைக் கருதியே அமைந்திருக்கும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்படிப்பட்ட நாரதரை குழப்பத்தில் ஆழ்த்தியது அந்தக் கேள்வி.

    அவர் மனதில் எழுந்த அந்த வினாவிற்கு, உரிய விடை கிடைக்கும் வரை நாரதரின் உள்ளம் அமைதி அடையாது. அது அவருக்கும் தெரியும். அதனால்தான் இந்த விஷயத்தை பற்றி பகவான் நாராயணரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது என்ற முடிவுக்கு நாரதர் வந்தார். அவர்தான் இந்த கேள்விக்கான பதிலைக் கூற முடியும் என்பது நாரதரின் திடமான எண்ணம்.

    ‘நாராயணா! நாராயணா!’ என்று பகவானின் நாமத்தை உச்சரித்தபடி வைகுண்டம் நோக்கிச் சென்றார் நாரத முனிவர். வைகுண்டம் வந்து பரந்தாமனை தரிசனம் செய்து தமது சந்தேகத்தையும் அவர் முன்பாக வைத்தார். நாரதரின் சந்தேகத்தை அறிந்ததும், அதற்கு பதில் சொல்ல முன்வந்தார் ஸ்ரீமன் நாராயணர்.

    ‘நாரதா! இந்த உலகம் தான் எல்லாவற்றையும் விட மிகவும் பெரியதாகக் காணப்படுகிறது. ஆனால் இந்த உலகமோ கடலால் சூழப்பட்டிருக்கிறது. எனவே உலகம்தான் எல்லாவற்றையும் விட பெரியது என்று சொல்லி விட முடியாது.

    அப்படியானால் சமுத்திரம் தான் பெரியது என்றும் எடுத்துக் கொள்ள இயலாது. ஏனெனில் உலகத்தையே சமுத்திரம் சூழ்ந்திருந்தாலும் கூட, ஒரு முறை குறு முனிவரான அகத்தியர் கடல் நீரை முழுவதுமாக குடித்து விட்டார். அப்படி இருக்கும்போது சமுத்திரமும் பெரியதாக இருக்க வாய்ப்பில்லை.

    சரி! கடல் நீரை குடித்து விட்ட குறு முனி தான் பெரியவர் என்று சொன்னால், எல்லையற்று அகன்று பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்துடன் அகத்தியரை ஒப்பிட்டால், அவர் அதில் தோன்றும் நட்சத்திரத்திற்கு கூட ஒப்பாக மாட்டார். அதனால் அகத்தியரையும் பெரியவர் என்று கூறுவதற்கில்லை.

    ஆகாயம் தான் பெரியது என்று ஒரு முடிவுக்கு வரலாம் என்றால், அதுவும் முடியாது. ஏனென்றால், வாமன அவதாரத்தின் போது ஆகாயத்தை ஒரே அடியில் அல்லவா, பகவான் அளந்து முடித்து விட்டார். பிறகு எப்படி ஆகாயத்தைப் பெரியது என்று கூறுவது? இவ்வாறு பார்த்துக் கொண்டே வந்தால், எல்லோரையும் விட பகவான் மகாவிஷ்ணுவே பெரியவராக காணப்படுகிறார். ஆனால் அவரையும் கூட உலகிலேயே மிகப் பெரியவர் என்று கூறுவது சரியாக இருக்காது’ என்று கூறியதும், நாரதர் மிகவும் குழம்பிப் போனார்.

    ஏற்கனவே குழப்பத்தில் இருந்த அவருக்கு, இப்போது ‘யார் பெரியவர்?’ என்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டு விட்டது. ‘எப்படி இருப்பினும் பகவான் விஷ்ணுதான் உலகில் பெரியவராக இருப்பார்’ என்ற எண்ணம் நாரதரின் உள்ளத்தில் இருந்தது. இப்போது அவரும் பெரியவர் இல்லை என்று பகவானே கூறும்போது என்ன சொல்வது.

    மகாவிஷ்ணு தொடர்ந்தார். ‘பகவானும் பெரியவர் இல்லை. ஏனெனில் அவரோ, எப்போதும் உன் போன்ற பக்தர்களின் இதயத்தில் கட்டைவிரல் அளவு நீளமான இடத்தில் காணப்படுகிறார். ஆகையால் நாரதா! எல்லோரையும் விட இந்த உலகத்தில் உயர்ந்தது உன்னைப் போல் பக்தியால் இறைவனை கட்டிப்போடும் பக்தர்களே!’ என்று கூறி முடித்தார்.

    ஆம்! உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் இயக்கிக் கொண்டிருக்கும் இறைவனையே, பக்தியால் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் பக்தர்களே உலகத்தில் உயர்ந்தவர்கள்.
    Next Story
    ×