search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை - தீர்வு தந்த தீர்த்தங்கள்
    X

    திருவண்ணாமலை - தீர்வு தந்த தீர்த்தங்கள்

    திருவண்ணாமலை ஸ்தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 360 தீர்த்தங்களில் தற்போது 90 சதவீதம் தீர்த்தங்கள் இல்லை. அவை அனைத்தும் மனைகளாக மாறி விட்டன.
    கோவில்களைக்கட்டும் போதே அருகில் குளம் ஒன்றை வெட்டும் பழக்கத்தை நமது மூதாதையர்கள் வைத்திருந்தனர். தொலை தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் அந்த குளத்தில் குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வழிபாடு செய்ய உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கோவில் அருகிலேயே திருக்குளங்கள் உருவாக்கப்பட்டன.

    நாளடைவில் அந்த குளத்தின் தண்ணீரை மூல விக்கிரகத்துக்கு அபிஷேகம் செய்யவும், இதர பயன்பாடுகளுக்கும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்த நிலையில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆலயங்கள் அருகில் மகிமை மிக்க தீர்த்தங்கள் இருப்பது நமது சாஸ்திரங்கள், புராணங்கள் மூலம் தெரிய வந்தது. முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள் இந்த தீர்த்தங்களை உருவாக்கி, அதில் நீராடி, வழிபட்டு உரிய பலன்களைப் பெற்று இருப்பதும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சில பழமையான ஆலயங்களில் தெய்வங்களே தீர்த்தங்களை உருவாக்கி, தினமும் அதில் நீராடி, அத்தலத்து இறைவனை வணங்கி, பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருப்பது புராணங்களில் சம்பவங்களாக இடம் பெற்றுள்ளன. சிறப்புமிக்க அந்த தீர்த்தங்கள் இன்றும் நம்மிடையே உள்ளன. அந்த தீர்த்தங்களில் கிடைக்கும் பலனைத் தெரிந்து கொண்டு பயன்படுத்தினால் நிச்சயம் நமக்கும் பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். அத்தகைய மகிமை வாய்ந்த சுமார் 360 தீர்த்தங்கள் திருவண்ணாமலையில் இருந்தன.

    திருவண்ணாமலை மலை மீதும் மற்றும் நகரைச் சுற்றி நாலாபுறமும் இந்த 360 தீர்த்தங்களும் இருந்தன. ஒரு நிமிடம் அந்த 360 தீர்த்தங்களும் திருவண்ணாமலையைச் சுற்றி அமைந்திருப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.... எவ்வளவு பசுமையாக இருந்திருக்கும்? நினைத்துப் பார்க்கவே பிரமாண்டமாக தோன்றுகிறது அல்லவா?

    ஆனால் புராணங்களில், தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 360 தீர்த்தங்களில் தற்போது 90 சதவீதம் தீர்த்தங்கள் இல்லை. அவை அனைத்தும் மனைகளாக மாறி விட்டன.

    ஆக்கிரமிப்பில் இருந்து தப்பி சில தீர்த்தங்கள் மட்டும் இப்போதும் பக்தர்களுக்கு பயன்பட்டு வருகின்றன. சில தீர்த்தங்கள் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தீர்த்தங்களின் மகிமையைத் தெரிந்து கொண்டால், அடுத்தத் தடவை நீங்கள் திருவண்ணாமலைக்கு செல்லும்போது பலன் பெற முடியும்.

    திருவண்ணாமலையில் உள்ள தீர்த்தங்களில் சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் இரண்டும் ஆலய வளாகத்துக்குள் உள்ளன. சிவகங்கை தீர்த்தத்தில் நீராடிய பிறகே அண்ணாமலையாரை வழிபட செல்ல வேண்டும் என்பது ஆலய விதியாகும்.

    சிவங்கை தீர்த்தம் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். நான்கு புறமும் சுற்று மண்டபத்துடன் இந்த திருக்குளம் அமைந்துள்ளது. குளத்துக்குள் இறங்கி செல்ல அழகான படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். இந்த குளத்தின் தீர்த்தத்தை தலையில் தெளித்து கொண்டாலே புண்ணியம் பெறலாம். ருத்திரர்கள் மாசி மாதம் இந்த குளத்தில் நீராடி தேவர்களையும் விட அதிக சக்தி பெற்றதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று சொல்வது போல இந்த தீர்த்தத்தை தினமும் காலையில் மனதில் நினைத்தாலே போதும் அந்த தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.
    இதையடுத்து அடுத்த பிரகாரத்தில் கால பைவரர் சன்னதி அருகே பிரம்ம தீர்த்தம் இருப்பதை காணலாம். இந்த தீர்த்த குளம் பிரம்மனால் அமைக்கப்பட்டதாகும். இந்த குளத்தில் நீராடினால் கடந்த பிறவிகளில் சேர்ந்த பாவங்கள் அனைத்தும் கரைந்து விடும்.

    பிரம்ம தீர்த்தத்தில் நீராடிய பிறகு ஒரு பொட்டு அளவாவது தங்கத்தை தானம் செய்ய வேண்டும் என்பது ஐதீகமாகும். அப்படி தங்கம் தானம் செய்தால் இந்த உலகத்தையே ஒரு ஏழைக்கு கொடுத்த மிகப்பெரிய புண்ணியத்தை பெறலாம்.பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சிவப்பு பசுவை தானம் செய்தால் வெள்ளை யானைகள் சூழ்ந்த தங்க விமானத்தில் ஏறி சொர்க்கம் போகலாம் என்பது ஐதீகமாகும். கருப்பு நிற பசுவை தானம் செய்தால் பூதகணங்கள் பாதுகாப்புடன் பின் தொடர்ந்து வர சிவபெருமானது காலடியை சென்று சேரலாம் என்று சொல்கிறார்கள். வெள்ளை நிற பசுவை தானம் செய்தால் தேவர்கள் வணங்க இறைவன் திருவடி அடையலாம்.

    பிரம்ம தீர்த்த கரையில் கன்னிகாதானம் செய்தவர்கள் தேவர் உலகத்திலும், சொர்க்க லோகத்திலும், குபேர லோகத்திலும், பிரம்ம லோகத்திலும் சென்று விரும்பியதை பெற்று அனுபவித்து சிவபதவி அடைவார்கள்.



    இனி திருவண்ணாமலையைச் சுற்றி உள்ள மற்ற தீர்த்தங்களை பார்க்கலாம்.

    திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் இருந்தாலும் விலகிவிடும். அங்கு நீராடி இந்திரன் தன் குற்றங்கள் நீங்கப் பெற்று தொடர்ந்து இந்திரப் பதவியை வகிக்கும் பேறு பெற்றான்.

    திருவண்ணாமலைக்கு தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் உள்ளது. அதில் பங்குனி மாதம் பவுர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும். அக்னி தேவன் தனக்கு ஏற்பட்ட பாவத்தை இந்த தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டான்.

    திருவண்ணாமலைக்கு தெற்கே எம தீர்த்தம் உள்ளது. அதில் நீராடினால் உடம்பு பொன்போல ஜொலிக்கும். எந்த நோய்களும் நம்மை அணுகாது. ஒரு தடவை பிரம்மன் அனுப்பிய ஆயுதம் காரணமாக சோர்வடைந்த எமன் இந்த தீர்த்தத்தை உருவாக்கி நீராடி சிவனை வழிபட்டு பலன் பெற்றான் என்பது வரலாறு ஆகும்.

    திருவண்ணாமலை நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நிருதியானவன் இத்தீர்த்தத்தில் மூழ்கியதன் பயனாக நெருப்பு போன்ற கண்களையும், பிளந்த வாயினையும் உடைய ஒரு ராட்சஷப் பேயை தன் வயமாக்கிக் கொண்டான். திருவண்ணாமலை மேற்கு திசையில் வருண தீர்த்தம் உள்ளது. அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் நவக்கிரகங்களும் நன்மையை செய்யும். அந்த நவக்கிரகங்களும் இந்த தீர்த்தத்தில் மூழ்கி வேண்டிய வரங்களைப் பெற்றனவாம்.

    திருவண்ணாமலையின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கிறது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல துன்பங்களும் தீரும். திருவண்ணாமலை வடதிசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உள்ளது. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேருவார்கள்.

    திருவண்ணாமலை ஈசன திசையில் அஸ்வினி தீர்த்தம் உள்ளது. அதில் நீராடியவர்கள் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்தாலும் மிக உயர்வாக போற்றப்படும் சிறப்பை அண்ணாமலையார் அருளால் பெறுவார்கள்.

    திருவண்ணாமலை எமதீர்த்தம் தெற்கே அகத்திய தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் புரட்டாசி மாதம் நீராடினால் பெரும் பலனை பெறலாம். சந்திரனை போன்ற முகம் ஜொலிப்பை அடையலாம். தமிழில் சிறந்த புலமை உண்டாகும். குபேர தீர்த்தம் அருகே வசிஷ்ட தீர்த்தம் உள்ளது. இதில் நீராடிதான் வசிஷ்ட முனிவர், முனிவர்களுக்கு எல்லாம் தலைவர் என்ற சிறப்பை பெற்றார். நாமும் இதில் நீராடினால் முதன்மையான நிலைக்கு வரலாம்.

    சிவகங்கை தீர்த்தத்துக்கு கிழக்கில் சக்கரத்தீர்த்தம் உள்ளது. இதில் புனித நீராடினால் சிவ பதத்தை அடையலாம். திருவண்ணாமலை வடக்கு பகுதியில் திருநதி என்று ஒரு நதி உள்ளது. அதில் நீராடி விஷ்ணுவின் மார்பை லட்சுமி சேர்ந்தாள் என்பார்கள். அதுபோல திருவண்ணாமலை தெற்கே சோணை நதி என்று ஒரு நதி உள்ளது. அதில் நீராடினால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.

    திருவண்ணாமலை மேற்கு பகுதியிலும் ஒரு நதி உள்ளது. அதில் நீராடினால் அழகான உடல் அமைப்பை பெறலாம். ஒரு பெண் அதில் மூழ்கி அழகான உருவத்தை பெற்றால் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை வடக்கே திருநதி அருகில் சேயாறு என்று ஒரு தீர்த்தம் உள்ளது. இங்கு முருக பெருமான் புனித நீராடி அசுரர்களை அழிக்கும் வரத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுபோன்று விநாயகர், சூரியன், பார்வதி, பைரவர், சரஸ்வதி, சப்தகன்னிகள் மற்றும் தேவாதி தேவர்கள் திருவண்ணாமலையை சுற்றி தீர்த்தங்களை உருவாக்கி அதில் நீராடி சிவனை வழிபட்டு பலன் பெற்றார்கள்.

    திருவண்ணாமலை ராஜகோபுர வடக்கு திசையில் சிவாஞ்சி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உள்ளது. சிவன் அணைந்த தீர்த்தம் என்ற பெயர்தான் நாளடைவில் சிவாஞ்சி தீர்த்தமாக மாறி விட்டது. இந்த தீர்த்த தண்ணீரை எடுத்து தலையில் தெளித்து கொண்டால் பாவங்கள் அனைத்தும் பனி போல் மறைந்து விடும். இந்த தீர்த்தத்திற்கு அடியில் ஒரு சிவன் கோவில் இருப்பதாக வரலாறு உள்ளது.

    இந்த தீர்த்தத்திற்கு சூரிய தீர்த்தம் என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த தீர்த்தத்தில் சூரிய பகவான் தினமும் நீராடி பூஜை செய்து சிவனை நோக்கி தவம் இருந்தார். 48 நாட்கள் கழித்து சிவபெருமான் சூரிய பகவானுக்கு காட்சி கொடுத்து சாப விமோசனம் அளித்தார்.

    இந்த தீர்த்தங்களில் முக்கிய விழா நாட்களில் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை சிந்து காவிரி உள்பட புண்ணிய நதிகள் அனைத்தும் வந்து கலந்து விடுவதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலை தலத்தில் உள்ள தீர்த்தங்கள் மேலும் மேன்மை பெறுவதாக சொல்வார்கள். ஆகையால் சாதாரண நாட்களை விட விழா நாட்களில் இந்த புண்ணிய தீர்த்தங்களை பயன்படுத்தினால் அதிக பலனை பெறலாம்.

    திருவண்ணாமலையை சுற்றி மட்டுமின்றி திருவண்ணாமலை மலை மீதும் தீர்த்தங்கள் உள்ளன. மலையில் முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாத தீர்த்தம், அல்லிசுனை, அரளிசுனை, வழுக்குபாறை சுனை, அரசன் சுனை, மயிலாடும் பாறை சுனை, ஊத்துக்குட்டை சுனை, பவழக்குன்று சுனை, சாரங்கன் சுனை, கரடி சுனை, புங்க மரத்து சுனை, கழுதை குறத்தி சுனை, நெல்லி மரத்து சுனை, ஆல மரத்து சுனை, குமார சுனை, கல்சுத்தி மரத்து சுனை, தொல்லாங்கன் சுனை, இடுக்குச் சுனை, ஓறட்டுக்கை சுனை, புகுந்து குடிச்சான் சுனை உள்பட ஏராளமான சுனைகள் உள்ளன.

    தமிழகத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் இந்த அளவுக்கு தீர்த்தங்கள் இல்லை. அதுபோல திருவண்ணாமலை தலத்தில் சித்திரா பவுர்ணமி தினத்தன்று நடக்கும் காமதகன விழா, தமிழகத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் நடப்பது இல்லை. அந்த வித்தியாசமான திருவிழா பற்றி அடுத்த வாரம் காணலாம்.
    Next Story
    ×