search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நன்மைகளை அளிக்கும் வாஸ்து குறிப்புகள்
    X

    நன்மைகளை அளிக்கும் வாஸ்து குறிப்புகள்

    வாஸ்து விதிகளின்படி அமைக்கப்படும் கட்டமைப்புகள் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து நற்பலன்கள் தரும் என்பது பரவலான நம்பிக்கையாக இருந்து வருகிறது.
    குறைவான பட்ஜெட் கொண்ட சிறிய வீடாக இருந்தாலும், பல அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடமாக இருந்தாலும் அவற்றின் கட்டுமான பணிகளின்போது வாஸ்து சாஸ்திர நிபுணர்களது ஆலோசனைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்த விதிகளின்படி அமைக்கப்படும் கட்டமைப்புகள் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து நற்பலன்கள் தரும் என்பது பரவலான நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    காலி இடம்

    வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, வடகிழக்கு, வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் கூடுதலான காலி இடமும், தெற்கு, மேற்கு பகுதிகளில் சற்று குறைவான காலி இடமும் விடப்பட்டு, வடகிழக்கு பாகத்தில் பிரதான ஹால், தென்கிழக்கு பாகமான ஆக்கினேயத்தில் சமையலறையும், அதனைச் சார்ந்த பகுதியில் டைனிங் ஹால் அமைப்பும், மேற்கு, தெற்கு, தென்மேற்கு பாகங்களில் படுக்கை அறைகளும், அக்னி பாகம், வாயு பாகம் ஆகியவற்றை சார்ந்து கழிவறைகள், விருந்தினர் அறைகள் மற்றும் இதர நபர்களுக்கான அறைகளும் அமைக்கப்படுவது மாறாத பொதுவான விதிகளாகும்.

    போர்டிகோ அமைப்பு

    குறிப்பிட்ட மனையில் கட்டமைக்கப்பட்ட வீட்டின் வடிவமைப்புக்கு தக்கபடி ‘போர்டிகோ’ அமைக்கும்பட்சத்தில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், வடகிழக்கு பகுதிகள், தெற்கு பார்த்த தலைவாசல் கொண்ட வீட்டுக்கு தெற்கு அக்னி பாகத்திலும், மேற்குப் பார்த்த தலைவாசல் கொண்ட வீட்டுக்கு மேற்கு வாயு பாகத்திலும் அமைப்பது வாஸ்து சாஸ்திரத்தின் சிறப்பு விதியாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    கிணறு மற்றும் ‘செப்டிக் டேங்க்’

    கட்டிடத்திற்கு வெளிப்புறத்தில், காம்பவுண்டு சுவருக்கு உள்புறத்தில் அமைக்கப்படும் ‘செப்டிக்’ தொட்டிகள், கிழக்கு அல்லது வடக்கு பகுதிகளிலும், ஆழ்குழாய்க் கிணறு மற்றும் கிணறு, கீழ்நிலைத் தண்ணீர்த் தொட்டி ஆகியவை வடகிழக்கு பகுதியை சார்ந்தும், மேல்நிலைத் தண்ணீர்த்தொட்டி மேல்மாடியின் தென்மேற்கு பகுதியை சார்ந்தும் அமைக்கப்படுவதும் சிறப்பு விதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    காந்த திசைகாட்டி

    மேலே குறிப்பிடப்பட்ட வாஸ்து சாஸ்திரத்தின் பொது விதிமுறைகள் அனைத்து வகையான மனை பிரிவுகளுக்கும் பொருந்துவதாக அமைவதில்லை. அதாவது, காந்த திசை காட்டியின் வடக்கு திசையை காட்டும் கோட்டுக்கும், மனையின் கிழக்குமேற்காக அமைந்த வடக்கு கோட்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை கவனிப்பது நுட்பமாக வாஸ்து கணிதமாகும்.

    அதாவது, காந்த திசை காட்டியின் வடக்கு திசை மையமும், வீட்டின் அளவுகளின்படி அமைந்த வடக்கு திசையின் மையமும் சரியாக ஒரே நேர் கோட்டில் அமைவது முதல் தரமான மனையாக குறிப்பிடப்படுகிறது. அந்த கோண அளவுகள் 10 டிகிரி அளவிற்குள் சற்று முன்பின்னாக அமைவதும் நிபுணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அந்த அளவிற்கும் மேற்பட்டு கிழக்கு அல்லது மேற்கு பகுதிகளில் காந்த திசை காட்டியின் வடக்கு கோடு சாய்மானமாக அமைவது அவ்வளவு சரியான அமைப்பு அல்ல என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

    நீச்ச பாக கட்டமைப்புகள்

    மனையின் தென்மேற்கு பகுதி சார்ந்த மேற்கு அல்லது தெற்கு பக்கத்தில் அமைந்த ‘செப்டிக் டேங்க்’ அல்லது கிணறு ஆகியவை எப்போதும் பாதிப்புகளை அளிக்கும் என்றும், அக்னி பாகத்தில் அமைந்த கிணறு அல்லது செப்டிக் டேங்க், வாயு பாகத்தில் அமைந்த கிணறு அல்லது செப்டிக் டேங்க் ஆகிய அமைப்புக்களும் நற்பலன்களை அளிப்பதில்லை என்றும் வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    மேலும், மனை அல்லது கட்டிட அமைப்புகளில் நீச்ச பாகங்கள் என்று குறிப்பிடப்படும் வடக்கு திசையின் மேற்கு சார்ந்த பகுதி, கிழக்கு திசையின் தெற்கு சார்ந்த பகுதி, தெற்கு திசையின் மேற்கு சார்ந்த பகுதி மற்றும் மேற்கு திசையின் தெற்கு சார்ந்த பகுதி ஆகியவை கூடுதல் அளவு கொண்டதாக இருப்பதும் நல்ல விளைவுகளை தராது என்றும் வாஸ்து வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
    Next Story
    ×