search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கள்ளழகர்கோவில் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
    X
    கள்ளழகர்கோவில் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    கள்ளழகர் கோவில் சித்திரை பெருந்திருவிழா தொடங்கியது

    கள்ளழகர் கோவில் சித்திரை பெருந்திருவிழா மதுரையில் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. அழகரின் ஆயிரம்பொன் சப்பர யாழிக்கு நூபுரகங்கை தீர்த்தத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்று மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது சித்திரைப்பெருந்திருவிழா. இந்த விழா நேற்று சர்வ அமாவாசையையொட்டி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலின்முன் மண்டப வளாகத்தில் காலை 8.50 மணிக்கு மேளதாளம் முழங்க வர்ணம் பூசப்பட்ட மரங்களில் பூமாலை, மாவிலை, நாணல்புல் இணைக்கப்பட்டு கோவில் மற்றும் ராஜகோபுரம் முன்பு முகூர்த்தகால் நடுதலுடன் தொடங்கியது.

    முன்னதாக அழகரின் ஆயிரம்பொன் சப்பரத்தில் இணைக்கப்படும் யாழி திருமுகத்திற்கு நூபுரகங்கை தீர்த்தத்துடன் பட்டர்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்தனர். மாலையில் வண்டியூர், வைகை ஆறு, தேனூர் மண்டபத்தின் முன்பாக முகூர்த்தக்கால் நடப்பட்டது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முகூர்த்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து அழகர்கோவில் முதல் மதுரை வண்டியூர் வரை மண்டகப்படிதாரர்கள் கொட்டகை அமைக்கும் பணியை தொடங்கினர்.

    மேலும் அமாவாசையையொட்டி அழகர்மலை நூபுர கங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினர். அவர்கள் கழுத்தில் துளசிமாலை அணிந்து நெற்றியில் நாமம் இட்டு விரதம் தொடங்கினர். விரதம் இருக்கும் பக்தர்கள் தீப்பந்தம் பிடித்தும், திரி எடுத்து ஆடியும், தண்ணீர் பீய்ச்சுவது உள்ளிட்ட பல நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    இதையொட்டி அழகர்கோவிலில் சித்திரைத்திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. 28-ந்தேதி மாலை 4.45 மணிக்குமேல் 5.15 மணிக்குள் மதுரைக்கு தங்கப்பல்லக்கில் கள்ளழகர் புறப்படுகிறார். 29-ந்தேதி அதிகாலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. 30-ந்தேதி காலை 5.45 மணிக்குமேல் 6.15 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    அன்று இரவு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். மே மாதம் 1-ந்தேதி காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனூர் மண்டபத்தில் திருமஞ்சனமாகி, கருட வாகனத்தில் அலங்காரமாகி மண்டூக முனிவருக்கு அழகர் சாபவிமோசனம் தரும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ந்தேதி அனந்தராயர் பல்லக்கில் சாமி புறப்பாடாகி அன்று இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி பூப்பல்லக்கில் அலங்காரமாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 3-ந்தேதி இரவு அப்பன் திருப்பதி திருவிழாவும், 4-ந்தேதி காலை பெருமாள் அழகர்மலைக்கு திரும்பும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இத்துடன் சித்திரை பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×