search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

    தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 26-ந் தேதி(வியாழக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
    மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் உலக பாரம் பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் சித்திரைத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேர் சிதிலமடைந்ததை தொடர்ந்து 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.

    இதையடுத்து தஞ்சை பெரியகோவிலுக்கு புதிதாக தேர் செய்யப்பட்டதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7.30 மணி முதல் 8 மணிக்குள் கொடிமரத்திற்கு பலவேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி கொடிமரத்தை வந்தடைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மாதவன், இந்திய தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு உதவியாளர் சந்திரசேகரன், கோவில் சூப்பிரண்டு ரெங்கநாதன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 26-ந் தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைவார்கள். அங்கு தியாகராஜர்-கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அதைத்தொடர்ந்து காலை 5.40 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    தஞ்சையில் உள்ள நான்கு ராஜவீதிகளிலும் தேர் வலம் வரும். நான்கு ராஜ வீதிகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது. 29-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    Next Story
    ×