search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம்

    நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 1-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து கோவில் முன்பு பொங்கல் வைத்து முத்துமாரியம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு பால், பழம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மனை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து நேற்று மாலை 3.15 மணிக்கு வாணவேடிக்கையுடன், செண்டைமேளம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


    சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன்.

    தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடியபடி வந்தது. அப்போது வழிநெடுகிலும் கூடிநின்ற பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு தேங்காய், பழத்தை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் மாலை 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

    இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் கணேஷ், கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், சிங்காரவேலு உள்பட புதுக்கோட்டை, நார்த்தாமலை, அன்னவாசல், இலுப்பூர், கீரனூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மற்றும் போலீசார் செய்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×