search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி நடந்தபோது எடுத்தபடம்.
    X
    நெல்லையப்பர் கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி நடந்தபோது எடுத்தபடம்.

    நெல்லையப்பர் கோவிலில் யாகசாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது

    நெல்லையப்பர் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது.
    நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் 14.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு தனித்தனியே கோவில் அமையப்பெற்று சங்கிலி மண்டபத்தால் இணைக்கப்பட்டு, நெல்லை டவுன் மையப்பகுதியில் அழகுபெற அமைந்துள்ள பழமையான கோவில் ஆகும்.

    இந்த கோவில் கி.பி. 7-வது நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. 5 அழகிய கோபுரங்களுடன் அமைந்துள்ள இந்த கோவிலில் சுவாமியாக நெல்லையப்பரும், அம்பாளாக காந்திமதி அம்பாளும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் பாலாலயம் செய்யப்பட்டு ரூ.4.92 கோடியில் திருப்பணிகள் செய்யப்பட்டன.

    மேலும் கோவிலில் அம்பாள் சன்னதி 2-வது பிரகாரம் தென்மேற்கு திசையில் உள்ள கல் மண்டபம் ரூ.71 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு உள்ளது. கோபுரங்கள், விமானங்கள், மரச்சிற்ப வேலைகள், கல்தூண்களை சுத்தம் செய்யும் பணிகளும் முடிவடைந்தன. ஒருசில இடங்களில் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி கோவிலில் யாகசாலை பூஜைகள் செய்வதற்கு தேவையான யாகசாலைகள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. கட்டுமான பணிகள் முடிவடைந்து அதன் மீது வர்ணங்கள் பூசி, பூஜை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அதை தொடர்ந்து கோவில் கோபுர கலசங்கள் மற்றும் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றுவதற்கு மரம், பலகையால் ஏணி அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×