search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நற்பலன்கள் ஏற்பட பித்ரு கடன்களைச் செய்யுங்கள்
    X

    நற்பலன்கள் ஏற்பட பித்ரு கடன்களைச் செய்யுங்கள்

    ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும்.
    நமது குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கருடப் புராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

    ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும்.

    இறந்தவர் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். ஒருவர் இறந்ததும் அவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளைச் செய்தல் போன்றவற்றை செய்யாமல் இருக்கும் போது இறந்தவரின் ஆன்மா பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்படும். அப்படி அந்த ஆத்மா அவதிப்படும்போது, அந்த அவதியின் கொடூரங்கள் அவரது சந்ததியினரையும் விட்டு வைக்காமல் பாதிப்படைய வைக்கும். இதைத்தான் ‘பித்ரு தோஷம்’ என்று கூறுவார்கள்.

    ஒருவர் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாகவும் இருந்து இறந்தால், அந்த நபருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டாலும் இறந்தவரின் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் அந்த தோஷத்தின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். ஏனெனில் பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால், தோஷத்தின் தீவிரம் சற்று குறைவாக இருக்கும்.

    அதே நேரம் ஒருவன் மிக கொடூரமானவனாகவும், அடுத்தவர் மனைவி, அடுத்தவர் சொத்து போன்றவற்றை அபகரித்து, லஞ்சம், திருட்டு போன்ற கொடூரத்தில் ஈடுபட்டு இறந்திருக்கலாம். அவனுக்குரிய பித்ரு காரியங்களை, அவன் குடும்பம் செய்யாமல் விட்டுவிட்டால் இறந்தவனின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய தீங்கு விளையும். இறந்தவனுக்கு இறைவனின் ஆசி இல்லாமல், நரக வேதனையில், பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்பட்டு அல்லல் படுவான். அப்படிப்பட்டன் படும் வேதனையின் தாக்கம் மிகுந்த வீரியம் மிகுந்ததாக இருக்கும். அந்த தாக்கம் அவனது குடும்பம், மற்றும் சந்ததியினரையும் கொடூரமாகத் தாக்கும்.



    பித்ரு தோஷம் உள்ளவர் வீட்டில் அதிகம் நடைபெறும் செயல்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    செய்யும் காரியங்கள் அதிக பாவம் உண்டாக்கும் செயலாகவும், லஞ்சம், லாவணியம் போன்ற கெடுதல் தரக்கூடிய செயல்களாகவும் அதிகம் நடைபெறும்.

    குழந்தை பிறந்தவுடன் இறந்து போகும் நிகழ்வு நடைபெறக்கூடும்.

    சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல், மனம் வேறுபட்டு வாழ்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி இன்றி கடைசியில் வெறுமையே ஏற்படும்.

    நல்ல நண்பர்களோடு விரோதங்கள் உண்டாகும்.

    இறை பக்தியில் ஈடுபட முடியாமல், வாழ்நாள் வீணாகக்கூடும்.

    தந்தை தாயாரை இகல்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்களும் நடைபெறும்.

    பணம் மற்றும் சொத்து, பொன், பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும்.

    இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடும்.

    அதர்மங்களையே செய்யத் தூண்டும் எண்ணம், மனம் முழுவதும் எழும்.

    புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும்.

    மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்.

    இதுபோன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் உங்களது வீட்டில் அதிகம் நடைபெற்றால், உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்று கருடப் புராணம் கூறுகிறது.

    இதுபோன்ற பிரச்சினை நீங்க வேண்டுமானால், பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்யுங்கள்.

    பித்ரு கடன் என்ன என்பதை கேட்டறிந்து, அதன்படி உங்கள் பித்ருக்களை திருப்திப்படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக தப்பிக்கலாம்.

    அமாவாசை, பவுர்ணமி திதிகளில் விரதம் இருந்து, காலையில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்து வழிபடுங்கள். அதிகாலை முதல் இரவு 7 மணி வரை வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விடுங்கள். ஆதரவற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள், அன்று மாலை சிவன் அல்லது உங்களுக்கு பிடித்த தெய்வங்களின் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். எந்த தோஷமும் அண்டாது.
    Next Story
    ×