search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரமிக்க வைக்கும் அண்ணாமலையாரின் தங்க நகைகள்
    X

    பிரமிக்க வைக்கும் அண்ணாமலையாரின் தங்க நகைகள்

    கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களைப் பார்த்தால், “அடேங்கப்பா... அண்ணாமலையாருக்கு இவ்வளவு தங்க நகைகள் உள்ளதா?” என்ற ஆச்சரியமும், மலைப்பும் ஏற்படும்.
    திருவண்ணாமலையில் செய்யப்படும் தானங்கள், யாகங்கள், தியானத்துக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் மகிமை உண்டு. அதனால் தானோ... என்னவோ அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் அந்த காலத்து அரசர்கள் போட்டிப் போட்டு தங்க ஆபரணங்களை தயாரித்து அள்ளி, அள்ளி தானமாகக் கொடுத்தனர்.

    அதுபோல திருவண்ணாமலை ஆலயத்தில் ஆய்வு செய்யப்பட்ட 119 கல்வெட்டுகளில் சில கல்வெட்டுக்களில் எந்தெந்த மன்னர்கள், எப்போது, என்னென்ன ஆபரணங்களை கொடுத்துள்ளனர் என்ற விபரம் உள்ளது. அந்த கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களைப் பார்த்தால், “அடேங்கப்பா... அண்ணாமலையாருக்கு இவ்வளவு தங்க நகைகள் உள்ளதா?” என்ற ஆச்சரியமும், மலைப்பும் ஏற்படும்.

    துரதிர்ஷ்டவசமாக அந்த நகைகளில் பெரும்பாலானவற்றை முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் சூறையாடி, கொள்ளையடித்துச் சென்று விட்டனர். அந்த அபூர்வ ஆபரணங்கள் மட்டும் இப்போது இருந்திருந்தால் அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் இருக்கும் நகைகள் மதிப்பு மட்டும் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு இருந்திருக்கும்.

    இப்போது அந்த நகைகள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுக்களில் மட்டுமே உள்ளன. 13&ம் நூற்றாண்டில் இருந்து 16-ம் நூற்றாண்டு வரை அந்த அபூர்வ ஆபரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அரசர்கள் மட்டுமின்றி அவர்களின் அரசிகள், இளவரசர்கள், படைத் தலைவர்கள், வள்ளல்கள், போர் வீரர்கள், விவசாயிகள், சாதாரண குடிமக்கள், பணிப்பெண்கள் கூட திருவண்ணாமலை ஆலயத்துக்கு ஆபரணங்கள் செய்து கொடுத்துள்ளனர். இதனால் திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள எல்லா சன்னதிகளும் ஏதாவது ஒரு ஆபரணத்தைப் பெற்றுள்ளது.

    அண்ணாமலையாருக்கு திருப்பணிகள் செய்ததோடு மட்டுமின்றி வியக்கத்தக்க அளவில் நன்கொடைகள் வழங்கியவர்கள் யார்&யார்? என்று ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர், பல்லவ மன்னர் கோப்பெருஞ்சிங்கர், ஹொய்சள மன்னர் வீரவல்லாள மகாராஜா, தஞ்சை சேவப்ப நாயகர் ஆகியோர் முதன்மை இடத்தில் உள்ளனர்.

    ஆயிரம் கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், சிவகங்கைக் குளம் உருவாக்கிய விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் திருவண்ணாமலை ஆலயத்துக்கு செய்துள்ள திருப்பணிகள், தானங்கள் ஏராளம். அண்ணாமலையாரை போற்றிப் பாடுவதற்கு 10 ஓதுவார்களையும், ஆலயத்தை சுத்தப்படுத்த 60 பெண்களையும் அவர் நியமனம் செய்தார்.

    திருமலைத் தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை அமைத்துக் கொடுத்தார். இவை மட்டுமின்றி திருவண்ணாமலை ஆலயத்துக்கு தங்கத்தை வாரி, வாரி கிருஷ்ணதேவராயர்  வழங்கினார். சன்னதியில் உள்ள இரண்டு கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசினார். கொடுங்கைத் தகடுகளுக்கு தங்கமுலாம் பூசினார்.

    உண்ணாமுலை அம்மன் சன்னதி வாயில்கால்கள், கதவுகளுக்கும் அவர் தங்கமுலாம் பூசினார். அண்ணாமலை யாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் “கிருஷ்ணராய பதக்கம்” என்றொரு பதக்கம் செய்து கொடுத்தார். நாகாபரணம், பொற்சிலை செய்து வழங்கினார். நிறைய வெள்ளிக் குடங்களையும் செய்து கொடுத்தார்.

    கிருஷ்ணதேவராயர் இப்படி தங்கத்திலும், வெள்ளியிலும் செய்த திருப்பணிகள் கணக்கிட முடியாத அளவுக்கு இருந்தன. அதுபோல திருவண்ணாமலை ஆலயத்துக்கு முதலாம் கோப்பெருஞ்சிங்க மன்னனும், அவரது மகன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனும் அளித்த கொடைகள், தானங்கள் ஏராளம்......

    உண்ணாமுலை அம்மனுக்கு தோடு, கிரீடம், அங்கக் கவசம், பாதக் கவசம், கழுத்துக் கவசம், சிங்க வடிவ அரியணை செய்து கொடுத்தனர். தங்கத்தால் கற்பக மரம் செய்து வழங்கினார்கள்.



    இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் தங்கத்திலேயே பள்ளியறைக் கட்டிக் கொடுத்தார். தேர்கள் செய்து கொடுத்தார்.

    முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் மகள் மிட்டாண்டார் நாச்சியார், உண்ணாமுலை அம்மனுக்கு தங்கத்தில் செய்யப்பட்ட கிண்ணத்தையும் ஒரு கரண்டியையும் தானமாகக் கொடுத்தார். தீபம் காட்ட வெள்ளியால் செய்யப்பட்ட தட்டு வழங்கினார்.

    அரச நாராயணன் என்பவரின் மகன் வீரசேகர காடவராயன் என்பவர் மிக அழகிய தங்கச் சங்கிலி ஒன்று செய்து அண்ணாமலையாருக்குத் தானமாக வழங்கினார். அந்த தங்கச் சங்கிலிக்கு, “ஏகாவளி வடம்” என்றும் ஒரு பெயர் உண்டு. இந்த தங்கச் சங்கிலியில் 100 தங்க உருண்டைகள் சேர்க்கப்பட்டிருந்தது.

    குறுநில மன்னர்களில் ஒருவரான வான கோவரையன் என்பவர், கர்ப்பக்கிரகத்தின் மீதுள்ள விமானத்துக்கு தங்க முலாம் பூசினார். மேலும் திருவண்ணாமலை ஆலயத்தை புதுப்பிக்க, ராஜராஜநல்லூர், பொன்பரப்பின நல்லூர், புண்ணியவாடி நல்லூர் ஆகிய  3 கிராமங்களைத் தானமாக வழங்கினார்.

    முதலாம் ராஜேந்திர சோழன், திருவண்ணாமலை ஆலயத்தில் பூஜைகள் தங்கு, தடையின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக நெல் தானம் செய்தான். ஒரு ஆண்டுக்கு 160 கலம் நெல் அளக்க ஏற்பாடு செய்தான். அவனால் உருவாக்கப்பட்ட மரக்காலுக்கு “திருவண்ணாமலை மரக்கல்” என்று பெயர் ஏற்பட்டது.

    மன்னர்கள் செய்து கொடுத்த இத்தகைய தானங்கள் ஆபரணங்களில் 99 சதவீதம் பறிபோய் விட்ட நிலையில் அந்த குறையை நகரத்தார்கள் நிவர்த்தி செய்தனர். கடந்த மூன்று நூற்றாண்டுகளில் நகரத்தார்கள் செய்து கொடுத்த ஆபரணங்கள் பிரமிக்க வைக்கின்றன.

    தற்போது திருவண்ணாமலை ஆலயத்து நகைகள் அனைத்தும் “பொக்கிஷ மேடை” எனும் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இது உள் பொக்கிஷ அறை, வெளி பொக்கிஷ அறை என இரு அறைகள் கொண்டது. தினமும் சுவாமி சிலைகளுக்கு அணிவிக்கப்படும் நகைகள் வெளிப்பொக்கிஷ அறையில் வைக்கப்பட்டுள்ளது. திருவிழாக்காலங்களில் மட்டும் அணிவிக்கப்படும் நகைகள், ஆபரணங்கள் உள்பொக்கிஷ அறையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த பொக்கிஷ அறைக்கு 7 சாவிகள் உண்டு. அதில் 4 சாவிகள் சிவாச்சாரியார்களிடமும், 2 சாவிகள் அறங்காவலர்களிடமும், ஒரு சாவி நிர்வாக அதிகாரியிடமும் இருக்கும். இவர்கள் அனைவரும் வந்துதான் விசேஷ நாட்களில் உள்பொக்கிஷ அறையைத் திறந்து ஆபரணங்களை எடுத்து அலங்காரம் செய்பவர்களிடம் கொடுப்பார்கள்.

    இந்த பொக்கிஷ அறைக்குள் கண்களுக்கு விருந்து படைக்கும் கிரீடங்கள், ஆபரணங்கள் விதம், விதமாக உள்ளன. அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் 6 அழகான கிரீடங்கள், நிறைய ஆபரணங்கள் உள்ளன. சுவாமிக்கும், அம்மனுக்கும் தனித்தனி தங்கக் கவசங்கள், வெள்ளிக் கவசங்கள் உள்ளன.
    பரிவாரத் தெய்வங்களான விநாயகர், முருகன், வேணுகோபாலர், ருக்மணி, சத்யபாமா, தெட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியவற்றுக்கு வெள்ளிக் கவசங்கள் உள்ளன. உற்சவ விநாயகருக்கு தங்கக் கவசம் உள்ளது.

    தங்க நகைகளில் “பிரம்ம சிரக்கபால மாலை” வித்தியாசமானது. 96 தலைகள் கொண்டு இந்த மாலை உருவாக்கப்பட்டுள்ளது.காசு மாலை என்ற பெயரில் பல மாலைகள் உள்ளன. 130 பவுன்களைக் கொண்ட மாலை ஒன்று உள்ளது. விக்டோரியா மகாராணியின் ஆட்சியில் 1871, 1872-ம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட காசுகளால் அந்த காசு மாலை உருவாக்கப்பட்டுள்ளது.



    அரைப் பவுன்களைக் கொண்ட காசுமாலை மூன்று, கால் பவுன்களைக் கொண்ட சரடு மூன்று உள்ளன. இவை தூய தங்கத்தால் செய்யப்பட்டவை.
    உண்ணாமுலை அம்மனுக்கும், உற்சவருக்கும் தங்க தாலிகள் பல உள்ளன. வைரத்தால் செய்யப்பட்ட ஒரு தாலியும் இருக்கிறது. தங்க புரிநூல்களும் இருக்கின்றன.

    அம்மனுக்கு அழகழகான கம்மல்களும் உள்ளன. தங்கத்தில் வைரக்கற்கள் பதித்த கம்மல்களும் இருக்கின்றன. வைர நெற்றிப் பட்டையும் உள்ளன.
    அண்ணாமலையாருக்கு தங்க நாகாபரணம், வெள்ளி நாகாபரணம் உள்ளது. 5 தலைப்பாம்புடன், மூன்று சுற்றுக்கள் கொண்ட தங்க நாகாபரணம் சுமார் 12 கிலோ எடை கொண்டது.

    விசேஷ நாட்களில் அந்த தங்க நாகாபரணத்தை பயன்படுத்து வார்கள். அப்போது செய்யப்படும் அலங்காரம் பார்ப்பதற்கு கண் கொள்ளாக்காட்சியாக இருக்கும். இந்த நாகாபரணத்தில் 1500 பவுன் தங்கம் உள்ளது. இரட்டை தங்கத் தகடுகளால் தங்க நாகாபரணம் செய்யப்பட்டுள்ளது.பவுன் விலை 13 ரூபாயாக இருந்தபோது அந்த தங்க நாகாபரணம் தயாரிக்கப்பட்டது. அப்போது அதில் சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பயன்படுத்தப்பட்டது. இன்றைய அதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடி.

    அண்ணாமலையாருக்கு சாத்தப்படும் விபூதிப்பட்டத்தின் நடுவில் ஒரு வைரக்கல் உள்ளது. பளீரென மின்னும் அந்த வைரக்கல் தற்போதைய சர்வதேச சந்தை கணக்கீட்டின்படி பல கோடி ரூபாய் மதிப்புடையது.

    உண்ணாமுலை அம்மனுக்கும் தங்கத்தாலான ‘ஜடாநாகம்‘ உளளது. அது முத்தும், மணியாலும் இழைக்கப்பட்டது. அம்மனுக் குள்ள தங்க கிரீடங்களில் வைரங்கள் இழைக்கப்பட்டுள்ளன. சோமாஸ்கந்தருக்கு வைரத்தில் அபய ஹஸ்தமும், அதன் கீழ் டாலரும் உள்ளது.

    பல்வேறு மூர்த்தங்களுக்கு பலவிதமான மாலைகள், டாலர் செயின்கள் ஏராளம் உள்ளன. வைர முடிகளும் பல இருக்கின்றன. தங்கத்தில் பதிக்கப்பட்ட ருத்ராட்ச மாலைகள், மணி மாலைகளும் உள்ளன.

    பூசைப் பொருட்கள் அனைத்தும் வெள்ளியால் செய்யப்பட்டவை. அதுபோல வாகனங்கள் அனைத்தும் வெள்ளியால் தயாரிக்கப்பட்டுள்ளன. வெள்ளி யானை, வெள்ளி மூஷீகம், வெள்ளி மயில், வெள்ளி பிரபைகள், வெள்ளிக் காமதேனு ஆகியவை கண்கவர் வகையில் உள்ளன.

    இந்த ஆபரணங்கள், வாகனங்களின் மதிப்பு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.12 லட்சமாக இருந்தது. தற்போது அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய்.
    சிறப்பு விழா நாட்கள் மற்றும் பஞ்ச பருவ விழா நாட்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்துக்கு சென்றால் பிரமிக்க வைக்கும் கிரீடங்கள் மற்றும் நகைகள் அணிவிக்கப் படுவதை நாம் கண்டு களிக்க முடியும்.

    சாதாரண நாளில் சென்றால், அந்த பாக்கியம் கிடைக்காதா? என்று நினைக்கலாம். கவலையே வேண்டாம். கிருத்திகை நட்சத்திர நாளில் திருவண்ணாமலை ஆலயத்துக்குச் சென்றால் நீங்கள் நினைப்பதெல்லாம் வெற்றியாக முடியும்.
    Next Story
    ×