search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய காட்சி.
    X
    புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய காட்சி.

    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு

    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றது. 10 நாள் நடைபெற்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
    பக்தர்களால் மகா உற்சவம், பிரமோற்சவம் என்று வர்ணிக்கப்படும் பங்குனி உத்திர திருவிழா, பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலில் கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் தினசரி காலை முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திருஉலா காட்சியும், இரவு 8 மணிக்கு மேல் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி யானை, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருஉலா காட்சியும் நடைபெற்றது.

    விழாவில் 6-ம் திருநாளான 29-ந் தேதி இரவு திருக்கல்யாணமும், தொடர்ந்து திருமணக்கோலத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வெள்ளிரத உலாவும் நடைபெற்றது.

    விழாவில் 7-ம் திருநாளான 30-ந்தேதி மாலை 4.45 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. 9-ம் திருநாளன்று இரவு 7.30 மணிக்கு வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். பின்னர் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் சன்னதி வீதி, கிரிவீதியில் உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 7.20 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் செய்து புதுச்சேரி சப்பரத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து காலை 10.30 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முத்துக்குமாரசுவாமி வள்ளியை திருமணம் செய்ததால் கோபம் கொண்ட தெய்வானை கோவிலுக்குள் சென்று கதவுகளை சாத்திக்கொண்டார். அதன் பின்னர் முருகனின் தூதுவர்கள் தெய்வானையிடம் சென்று ஊடல் பாடல் பாடி சேர்த்துவைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திரு ஊடல் பாடல்களை சிவநாகராஜன் பாடினார். அதன் பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

    இரவு 7 மணிக்கு முத்துக்குமாரசுவாமி தங்கக் குதிரை வாகனத்திலும் வள்ளி, தெய்வானை சப்பரத்திலும் எழுந்தருளி திருஉலா காட்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் திருஉலாவும், இரவு 11 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் விழா நிறைவாக கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, பெரியநாயகியம்மன் கோவிலில் எழுந்தருளினார். விழா ஏற்பாடுகள் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

    நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வள்ளி-தெய்வானை நாட்டிய நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து பொம்மலாட்டமும் நடைபெற்றது. முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் பங்குனி உத்திரத் திருவிழாவில் பங்கேற்ற கலைஞர்கள், நிகழ்ச்சி உபயதாரர்கள், மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையினர், போக்குவரத்து துறையினர், நகராட்சி நிர்வாகம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும், உபயதாரர்களுக்கு பாராட்டும் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோவில் துணை ஆணையர் செந்தில்குமார் தலைமை தாங்கி உபயதாரர்களுக்கு பாராட்டு தெரிவித்து பொன்னாடை போர்த்தி கோவில் பிரசாதம் வழங்கினார். நிகழ்ச்சியில் சித்தனாதன் விபூதி நிறுவனத்தின் சார்பில் சதீஸ், கந்தவிலாஸ் நவீன்குமார், கண்பத் கிராண்ட் செந்தில்குமார், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×