search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலையடிவாரத்தில் தேர் வலம் வந்த காட்சியை படத்தில் காணலாம்.
    X
    மலையடிவாரத்தில் தேர் வலம் வந்த காட்சியை படத்தில் காணலாம்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க தரிசனம் செய்தனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 21-ந்தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி காலை மற்றும் இரவு வேளையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி களாக கடந்த 1-ந்தேதி பட்டாபிஷேகம், 2-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதனை யொட்டி கோவில் வாசல் முன்பு நிலை நிறுத்தப்பட்டிருந்த பெரிய தேர் வண்ணமயமான துணிகளால் 5 அடுக்குகளாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் தேரை இழுத்து செல்லுவதுபோல 4 மர குதிரைகள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த ஆண்டில் முதல்முறையாக தேரின் முகப்பில் தேர்வடம் பிடித்தல் என்று மலர்களால் எழுதப்பட்டிருந்தது.

    இதுதவிர தேரின் அடிபகுதியின் நாலாபுறமும் வண்ண மலர்கள் தோரணங்களாக தொங்கவிடப்பட்டு இருந்தது. சிறிய சட்டத்தேரும் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது. இந்தநிலையில் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து சர்வ அலங்காரத்துடன் தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு காவல் தெய்வமான கருப்பணசுவாமி சன்னதிக்கு வந்தார்.


    தேரோட்டத்தையொட்டி சர்வ அலங்காரத்தில் வீற்றிருந்த முருகப்பெருமான்-தெய்வானை.

    அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையடுத்து பெரிய தேரில் தெய்வானையுடன் முருகப் பெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறிய சட்டத்தேரில் விநாயகர் எழுந்தருளினார்.

    இதனையடுத்து கோவில் முதல் ஸ்தானிகர் சுவாமி நாதன் தேரில் ஏறி நின்றதும், அங்கு திரளாக கூடி இருந்த பக்தர்கள் குன்றத்து முருகப்பெருமானுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். காலை 6.23 மணிக்கு நிலையில் இருந்து தேர் புறப்பட்டது. விநாயகர் எழுந்தருளிய சிறிய சட்டத்தேர் முன்னே சென்றது.

    கிரிவலபாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்தபடி பெரிய தேர் வலம் வந்தது. சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மலையை தேர் சுற்றி வந்து பகல் 11.27 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் வாண வேடிக்கையும், பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷமும் மலை முழுவதுமாக எதிரொலித்தது. தேர் நிலைக்கு வந்ததும் பக்தர்கள் வாழை பழங்களை சூறை விட்டு தங்களது நேர்த்தியை செலுத்தினர்.

    திருவிழாவில் இன்று(புதன்கிழமை) தீர்த்த உற்சவம் நடக்கிறது.
    Next Story
    ×