search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்க வைக்கும் மகா தேரோட்டம்
    X

    மலைக்க வைக்கும் மகா தேரோட்டம்

    திருப்பரங்குன்றம் கோவிலின் மகா தேரானது தென்றலாய் ஆடி, அசைந்து மெல்ல மெல்ல பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வருவது கண்கொள்ளாக்காட்சியாகும்.
    முருகப்பெருமான் அருள் ஆட்சி புரியும் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் மட்டுமே தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் திருமணக்கோலத்தில் அருள்புரிகிறார். ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெற்றாலும் இந்த கோவிலுக்கு உகந்த திருவிழா பங்குனி பெருவிழா 15 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணத்தன்று மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருள்கிறார். மேலும் பழ முதிர்சோலையில் இருந்து சீர்வரிசை கொண்டுவரப்படுகிறது. ஆகவே திருப்பரங்குன்றம், பழ முதிர்ச்சோலை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகியவை திருப்பரங்குன்றத்தில் சங்கமம் ஆகிறது.

    பங்குனி பெருவிழாவின் 14-வது நாள் மகா தேரோட்டம் நடக்கிறது. 3 கிலோ மீட்டர் சுற்றளவில் மகா தேரானது தென்றலாய் ஆடி, அசைந்து மெல்ல மெல்ல வலம் வரும். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வருவது கண்கொள்ளாக்காட்சியாகும். அரிச்சந்திர மகாராஜா தேரினை வழங்கியதாக செவிவழிச்செய்தி கூறுகிறது. பொதுவாக முருகப்பெருமானின் திருக்கோலத்தில் வேல் இருக்கும்.

    இங்கு உள்ள கோவிலின் பெரிய தேரில் ஆறுமுகப் பெருமானான முருகப்பெருமானின் திருக்கரத்தில் தராசு இருக்கிறது. இது நீதியை நேர்மையை நிலை நாட்டும் விதமாக உள்ளது என்று கூறுகிறார்கள். மேலும் திருப்பரங்குன்றமானது ‘தராசுகார பூமி’. அதை வெளிப்படுத்தும் முகமாக தேரில் உள்ள சிற்பம் உணர்த்துகிறது. திருப்பரங்குன்றம் முருகப்பெருமானிடம் தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது.

    முருகப்பெருமானின் நட்சத்திரத்தை குறிக்கும் விதமாகவும் தராசு உள்ளது என்று கூறுகிறார்கள். தேர்வலம் வரக்கூடிய மலைக்கு பின்புறம் திருப்பரங்குன்றத்தில் தான் (கல்வெட்டு குகை கோவிலில்) முன்னோர்கள் காலத்தில் முருகன் கோவிலில் இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் தற்போதுள்ள இடம் கோவிலாக மாறி உள்ளது. தென்பரங்குன்றம் பகுதியில் இருந்து திரும்பியதால் பரங்குன்றம் கோவில் என்ற பெயர் திருப்பரங்குன்றமாக ஊர் பெயர் போற்றப்படுகிறது. தெய்வீக புலவர் நக்கீரர் பாடிய திருமுருகாற்றுபடை மூலம் திருப்பரங்குன்றம் முதற்படையாக போற்றப்படுகிறது.

    இங்கு வாருங்கள். முருகப் பெருமானை வேண்டுங்கள். நினைத்த காரியம் கைகூடும்.
    Next Story
    ×