search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் சுவாமி கழுகாசலமூர்த்தி- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடந்தது. காலையில் கோ ரதத்தில் சண்டிகேசுவரர் பெருமானும், சட்ட ரதத்தில் விநாயகர் பெருமானும், வைர தேரில் சுவாமி கழுகாசலமூர்த்தி- வள்ளி, தெய்வானை அம்பாள்களும் எழுந்தருளினர். முதலில் சண்டிகேசுவரர் பெருமான் எழுந்தருளிய கோ ரதத்தையும், விநாயக பெருமான் எழுந்தருளிய சட்ட ரதத்தையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, நான்கு ரத வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவில் நிலையில் சேர்த்தனர்.

    தொடர்ந்து காலை 10.30 மணிக்கு சுவாமி கழுகாசலமூர்த்தி- வள்ளி, தெய்வானை அம்பாள்கள் எழுந்தருளிய வைர தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கியவாறு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். தெற்கு ரத வீதியில் இருந்து புறப்பட்ட தேரானது பஸ் நிலைய ரோடு வழியாக அரண்மனைவாசல் தெரு கீழ பஜார் சந்திப்பு பகுதிக்கு மதியம் வந்தது. தொடர்ந்து அங்கு தேரை நிறுத்தி விட்டு, பக்தர்கள் மதிய உணவு சாப்பிட சென்றனர். பின்னர் மாலையில் பக்தர்கள் அங்கிருந்து மீண்டும் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கீழ பஜார் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது.

    விழாவில் கோவில் நிர்வாக அலுவலர் கார்த்தீசுவரன், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து, சாமி தரிசனம் செய்தனர். தேரோட்ட விழாவையொட்டி ஏராளமான தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு குளிர்பானம், மோர், அன்னதானம் வழங்கினர்.

    10-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தபசு காட்சி நடக்கிறது. 11-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி- வள்ளி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

    12-ம் திருநாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு யானைத்தந்த பல்லக்கில் சுவாமி- வள்ளி, தெய்வானை அம்பாள்கள் பட்டினபிரவேசம் நடைபெறும். 13-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×