search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் வெள்ளத்தில் கல்கருட பகவான் வாகன மண்டபத்துக்கு எழுந்தருளிய காட்சி.
    X
    பக்தர்கள் வெள்ளத்தில் கல்கருட பகவான் வாகன மண்டபத்துக்கு எழுந்தருளிய காட்சி.

    நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை

    நாச்சியார்கோவிலில் உள்ள சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள், வஞ்சுளவல்லி தாயாருடன் அருள்பாலித்து வருகிறார். 108 வைணவ தலங்களில் ஒன்றான இங்கு மூலவராகவும், உற்சவராகவும் கல்கருடபகவான் அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும். இக்கோவிலில் நடைபெறும் கல்கருட சேவை நிகழ்ச்சியின்போது கல்கருட பகவானின் வாகனம் எடை அதிகரித்து கொண்டே இருப்பது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தும் சிறப்பம்சம் ஆகும்.

    கல்கருட வாகன புறப்பாட்டின்போது முதலில் 4 பேர் மட்டுமே வாகனத்தை தூக்குவர். அதன் பின்னர் 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என வாகனத்தை தூக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்லும். மேலும் பக்தர்கள் வெள்ளத்தில் கல்கருட பகவான் எழுந்தருளி உலா வரும்போது கல்கருட பகவான் நீந்தி வருவது போல காட்சி அளிப்பார். இத்தகையை பிரசித்திப்பெற்ற கல்கருட சேவை நிகழ்ச்சி ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவின்போது நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாலை 6.45 மணியளவில் கருடபகவான் சிறப்பு அலங்காரத்துடன் சன்னதியில் இருந்து புறப்பட்டார். பின்னர் கருடபகவான் வாகன மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கல்கருட பகவானை தரிசனம் செய்தனர்.

    பங்குனி உத்திர திருவிழாவில் வருகிற 31-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×