search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவிழாவையொட்டி, கரிக்ககம் சாமுண்டி கோவில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்
    X
    திருவிழாவையொட்டி, கரிக்ககம் சாமுண்டி கோவில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்

    திருவனந்தபுரம் கரிக்ககம் சாமுண்டி கோவில் பொங்கல் வழிபாடு 28-ந்தேதி நடக்கிறது

    திருவனந்தபுரம் கரிக்ககம் சாமுண்டி கோவில் திருவிழா குருபூஜையுடன் தொடங்கியது. பிரசித்திபெற்ற பொங்கல் வழிபாடு வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
    கேரளாவில் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து தற்போது வரை, திருவனந்தபுரம் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி தேவி கோவிலில் பல வழக்குகள் சத்தியம் செய்வதன் மூலம் நிரூபிக்கப்பட்டு வருகிறது. குற்றம்சாட்டியவரும், குற்றவாளியும் கோவில் குளத்தில் நீராடி சாமுண்டி அம்மன் முன், காணிக்கை செலுத்தி விளக்கேற்றி தீபச் சுடரின்மேல் சத்தியம் செய்வார்கள். பொய் சத்தியம் செய்பவர்களுக்கு ஏதாவது தண்டனை கிடைக்கும் என பக்தர்கள் நம்புவதால் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அம்மனை 3 வடிவங்களில் கரிக்ககம் சாமுண்டி கோவிலில் வழபட முடியும். அழைத்தால் ஓடிவரும் தாய் சாமுண்டி, ரத்த சாமுண்டி, பால சாமுண்டி என 3 சன்னதிகளாக உள்ளன. இங்கு வந்து அம்மனை வழிபடுவதன் மூலம் நினைத்த நல்ல காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே இங்கு நடை திறந்து பிரார்த்தனை செய்ய வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை 5 மணிக்கு குரு பூஜையுடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று அதிகாலை 4.20 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 5.45 மணிக்கு அலங்கார தீபாராதனை, 6.15 மணிக்கு எதிர்த்த பூஜை, 8.30 மணிக்கு பந்தீரடி பூஜை, 11.30 மணிக்கு கலசாபிஷேகம், 12.30 மணிக்கு உச்சபூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 4.30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. 5 மணிக்கு நடைபெற்ற குருபூஜையுடன் விழா தொடங்கியது.

    அதை தெடர்ந்து புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜை, தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் கலாசார கலை விழா நடைபெற்றது. இதனை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.பி.கங்காதரனுக்கு இந்த ஆண்டுக்கான கரிக்ககத்தம்மா விருது வழங்கப்பட்டது. திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பிரசாந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவையொட்டி வருகிற 26, 27-ந் தேதிகளில் காலை 9 மணிக்கு மேளம், பஞ்சவாத்தியம், செண்டை மேளம் முழங்க, தாலப்பொலி, முத்துக்குடை ஏந்திய சிறுவர்களின் அலங்கார அணிவகுப்புடன் சாமுண்டி தேவியின் தங்க ரத ஊர்வலம் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு வருகிற 28-ந் தேதி நடைபெறும். அன்றைய தினம் காலை 10.15 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்கும். பிற்பகல் 2.15 மணிக்கு பொங்கல் நைவேத்தியம் செய்யப்படும். அன்றைய தினம் இரவு அத்தாள பூஜைக்கு பின் விழா நிறைவு பெறும்.

    விழா நாட்களில் தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    ஏற்பாடுகளை கோவில் தலைவர் ஜி.சுகுமாரன் நாயர், தலைவர் கே.முரளதரன் நாயர், செயலாளர் எம்.பார்கவன் நாயர், பொருளாளர் எம்.ஜனார்த்தனன் நாயர், துணை தலைவர் சி.என்.சாஜூ, இணை செயலாளர் ஜெ.சங்கரதாசன் நாயர் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×