search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா: தூக்க நேர்ச்சை இன்று நடக்கிறது
    X

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா: தூக்க நேர்ச்சை இன்று நடக்கிறது

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழாவில் 1,546 குழந்தைகளுக்கு இன்று தூக்க நேர்ச்சை வழங்கப்படுகிறது.
    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

    கடந்த 14-ந்தேதி தூக்ககாரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. 15-ந்தேதி தூக்க நேர்ச்சையில் கலந்துகொள்ளும் குழந்தைகளின் பெயர்பதிவு, குலுக்கல் முறையில் தூக்க நேர்ச்சையில் கலந்துகொள்ளும் குழந்தைகள் வரிசைப்படுத்துதல், காப்புகட்டுதல் போன்றவை நடந்தது.

    தொடர்ந்து தூக்க நேர்ச்சையின் போது குழந்தைகளை தாங்கி செல்லும் தூக்ககாரர்கள் கோவிலிலேயே தங்கியிருந்து காலை, மாலையில் கடலில் நீராடி சூரிய நமஸ்காரம், உடற்பயிற்சிகள் செய்து தங்களை தயார் செய்து வந்தனர். இவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஆகியவற்றை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    நேற்று மாலை தூக்ககாரர்களின் கடல் நீராட்டு, வண்டியோட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் இன்று(புதன்கிழமை) காலை 6 மணிமுதல் தூக்க நேர்ச்சை நிகழ்ச்சி நடக்கிறது. திருமணம் ஆகி குழந்தை வரம் பெறாதவர்கள் அம்மனிடம் வேண்டியதின் பயனாக குழந்தை வரம் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் கல்வி, செல்வங்களில் சிறந்து விளங்க பங்குனி மாதம் பரணி நாளில் நடைபெறும் தூக்க திருவிழாவில் தங்கள் குழந்தைகளை கலந்துகொள்ள செய்வார்கள்.

    இந்த தூக்க நேர்ச்சையில் 6 மாதம் முதல் 1 வயது வரை உள்ள குழந்தைகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. கோவில் முன்உள்ள தூக்க வில்லில் குழந்தைகள் ஒரு முறை சுற்றிவர நேர்த்திக்கடன் முடிந்ததாக கருதப்படும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 114 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது.

    பிரசித்தி பெற்ற இந்த தூக்க திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். இதற்காக தமிழக மற்றும் கேரள அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழு தலைவர் சதாசிவன்நாயர், துணைத்தலைவர் பிரேம்குமார், செயலாளர் மோகன்குமார், இணை செயலாளர் பிஜூ குமார், பொருளாளர் சூர்யதேவன்தம்பி ஆகியோர் தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×