search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி திறந்து வைத்த போது எடுத்த படம்.
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி திறந்து வைத்த போது எடுத்த படம்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: 21-ந்தேதி ஆராட்டு திருவிழா

    பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. கோவிலின் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல-மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றவை. இதுதவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜை-வழிபாடுகள் நடைபெறும்.

    அதன்படி பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். நேற்று மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.

    இன்று (வியாழக்கிழமை) முதல் தினமும் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்டவை நடைபெறும்.


    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதையொட்டி நேற்று சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதையொட்டி நேற்று சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள்.

    வருகிற 19-ந் தேதி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகமும் நடைபெறுகிறது. 19-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, அன்று இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    மறுநாள் (20-ந் தேதி) ஐயப்பன் கோவில் நடையானது, பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 21-ந் தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கொடியேற்றி வைத்து விழாவை தொடங்கி வைப்பார்.

    விழா நாட்களில் தினமும் மதியம் உற்சவ பலி சிறப்பு பூஜை நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு, 29-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 30-ந் தேதி பம்பை ஆற்றில் பகல் 11 மணிக்கு ஐயப்பனுக்கு ஆராட்டு வைபவம் நடைபெறுகிறது.

    பங்குனி மாத பூஜை மற்றும் கோவில் திருவிழா தொடர்ச்சியாக வருவதால் வருகிற 30-ந் தேதி வரை கோவில் நடை திறந்து பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×