search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி தேரோட்டம்

    திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    புதுக்கோட்டை திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி தேரோட்டம் பூச்சொரிதல் விழா, கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் (பிப்ரவரி) 25-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 4-ந் தேதி மாசி தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் திருவப்பூர் முத்துமாரியம்மன் காலையிலும், மாலையிலும் காட்டுமாரியம்மன் கோவிலில் எழுந்தருளி, புஷ்ப மின்அலங்காரத்தில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி திருவப்பூர் முத்துமாரியம்மனை, காட்டுமாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மனை தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து மாலை 5 மணிக்கு மேள, தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.


    சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன்.

    தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று தேங்காய், பூ, பழம் வைத்து முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 6.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தையொட்டி சிறுமிகள் கோலாட்டம் ஆடியவாறு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மேலும் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை சிவன், முருகன், அம்மன் ஆகிய சாமி வேடங்களில் கோவிலுக்கு வந்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு பால்குடம் மற்றும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.


    அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி.

    தேரோட்டத்தையொட்டி கோவிலுக்கு வந்த பக்தர் களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் வழியெங்கும், தண்ணீர் பந்தல்கள் அமைத்து நீர்மோர், தண்ணீர், அன்னதானம் போன்றவை வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் விழா கமிட்டியினர் மற்றும் திருவப்பூர் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் கோவிலை சுற்றி திருக்கோகர்ணம் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் கோவிலை சுற்றி பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கூட்டத்தை கண்காணித்தனர்.

    தொடர்ந்து வருகிற 20-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் முத்துமாரியம்மன், திருவப்பூர் காட்டுமாரியம்மன் கோவிலில் எழுந்தருளி அங்கிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்ததும், அம்மனுக்கு காப்பு கலைக்கப்பட்டு, மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
    Next Story
    ×