search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவானைக்காவல் கோவிலில் எட்டுத்திக்கு கொடியேற்று விழா நாளை நடக்கிறது
    X

    திருவானைக்காவல் கோவிலில் எட்டுத்திக்கு கொடியேற்று விழா நாளை நடக்கிறது

    திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவையொட்டி நாளை காலை எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
    பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா அடுத்த மாதம்(ஏப்ரல்) 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவையொட்டி நாளை(புதன்கிழமை) காலை 9 மணி முதல் 9.40 மணிக்குள் எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவில் சோமாஸ்கந்தர் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் வீதி உலா வருகிறார். விழாவின் 2-ம் நாளான 15-ந் தேதி இரவு சுவாமி சூரியபிரபை வாகனத்திலும், அம்மன் சந்திரபிரபை வாகனத்திலும், 16-ந் தேதி இரவு பூதவாகனம், காமதேனு வாகனத்திலும், 17-ந் தேதி கைலாச வாகனம், கிளி வாகனத்திலும், 18-ந் தேதி சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பங்குனி தேர்த்திருவிழா ஏப்ரல் 1-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. ஏப்ரல் 2-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 4-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×