search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாசி மாத வழிபாட்டு மகிமைகள்
    X

    மாசி மாத வழிபாட்டு மகிமைகள்

    மாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதமாகப் போற்றப்படுகிறது. மாசி மாத வழிபாடுகள் என்ன பலன்களை அளிக்கும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    மாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதமாகப் போற்றப்படுகிறது. திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில்தான் என்கிறது புராணம்.

    மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷம் என்பார்கள். அந்த நாளில் விரதம் இருப்பவர்கள் சகல தோஷங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்பது ஐதீகம்!

    சிவபெருமான் திருவிளையாடல்கள் பலவற்றை நிகழ்த்தியது மாசி மாதத்தில்தான் என்கிறது திருவிளையாடற் புராணம்!

    மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.

    மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது. அதனால்தான் பிரம்மோபதேசம் எனப்படும் உபநயனம் எனப்படும் பூணூல் கல்யாண வைபவத்தை சிறுவர்களுக்கு இந்த மாதத்தில் நடத்துவார்கள்.

    மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும். மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கலாம்.

    அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான். மேலும், மாசி மாத பூச நட்சத்திர தினத்தில்தான் முருகப்பெருமான் சுவாமிமலையில் தன் தந்தை சிவனாருக்கு பிரணவ உபதேசம் செய்தார்.



    பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

    காரடையான் நோன்பும் சாவித்திரி விரதமும் இந்த மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மக நாளில்தான் காமதகன விழா நடைபெறுகிறது.

    மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழலாம் என்பது நம்பிக்கை. எனவே இந்த மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.

    இந்த மாசி மாதத்தை மாங்கல்ய மாதம் என்று போற்றுகின்றனர். மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்புக்கு உரியது!

    மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியம் என்கிறது சாஸ்திரம்!

    மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோயில் பொற்றாமரை தீர்த்தக் குளத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்பத் திருவிழா நடத்துவது வழக்கம். இதை அப்பர் தெப்பம் என்பார்கள்!

    மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்த பின் துளசியால் ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்ட லோகத்தை அடையலாம் என்கிறது புராணம்!
    Next Story
    ×