search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சண்முகர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது எடுத்த படம்.
    X
    சண்முகர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூரில் மாசி திருவிழா: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தேரோட்டம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக பெருமை பெற்று விளங்கும் ‘திரச்சீரலைவாய்‘ என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    8-ம் திருநாளான நேற்று அதிகாலையில் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து, மேல கோவில் சேர்ந்தார். பின்னர் சுவாமி- அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

    மதியம் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து, பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    9-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேல கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் திருவீதி உலா நடக்கிறது. இரவு 8 மணிக்கு மேல கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் திருவீதி உலா நடக்கிறது. இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    10-ம் திருநாளான நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரும், 2-வதாக சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய பெரிய தேரும், 3-வதாக தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேரும் ரத வீதிகளில் வலம் வரும். விழாவில் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

    தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் நேர்த்திக்கடனாக அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் கோவிலுக்கு வருகின்றனர். ஒவ்வொரு ஊரில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் முருக பெருமானின் திருவுருவ படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு பாத யாத்திரையாக பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    11-ம் திருநாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 3-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி- அம்பாள் திருவீதி உலா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம் போன்றவை நடக்கிறது.

    விழாவையொட்டி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×