search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தர்ப்பணம் கொடுக்கும் அண்ணாமலையார்
    X

    தர்ப்பணம் கொடுக்கும் அண்ணாமலையார்

    அண்ணாமலையார் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் தினத்தன்று பள்ளி கொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) கொடுத்து வருகிறார்.
    உலகத்துக்கே படியளப்பவர் சிவபெருமான். அவர் காலடி நிழலில் இளைப்பாறத்தான் ஆன்மீகத்தில் பக்குவப்பட்டவர்கள் ஆணவம், அகந்தையை விட்டு, விட்டு அலை மோதிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் அம்மையும், அப்பனுமாகத் திகழும் ஈசன், மன்னர் ஒருவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த அதிசயம் திருவண்ணாமலையில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

    பரம்பொருள் ஈசனால் தந்தையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈடு, இணையற்ற அந்த சிறப்பைப் பெற்ற பெருமைக்குரியவர் வீர வல்லாள மகாராஜா. யாகஅக்னி வம்சத்தில் உதித்த அவர் வட தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் ஒரு பகுதியை உள்ளடக்கிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக திகழ்ந்தார்.



    ஹோய்சாளப் பேரரசின் கடைசி மன்னரான அவர் தற்போது கர்நாடகாவில் உள்ள ஹளபேடு நகரை முதல் தலைநகரமாகவும், திருவண்ணாமலையை இரண்டாம் தலை நகரமாகவும் கொண்டு 1291-ம் ஆண்டு தொடங்கி 1343-ம் ஆண்டு வரை 52 ஆண்டுகள் ஆட்சி செய்தார். வீர வல்லாள மகாராஜா மிகச் சிறந்த சிவபக்தன். தினமும் ஈசனுக்கு பூஜை செய்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அண்ணாமலையார் மீது அவருக்கு அதிக பக்தி இருந்தது. இதனால் திருவண்ணாமலை ஆலயத்தில் அவர் செய்த திருப்பணிகள் ஏராளம்.

    5-ம் பிரகாரத்துக்கும் 4-ம் பிரகாரத்துக்கும் இடையே உள்ள கோபுரத்தைக் கட்டியது அவர்தான். 1328- ம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்ட அந்த கோபுரம் 1331-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அவர் நினைவாக அந்த கோபுரம் வல்லாள மகாராஜா கோபுரம் என்றழைக்கப்படுகிறது. அந்த கோபுரத்தைக் கட்டி முடித்த போது அவருக்குள் கர்வம் தலை தூக்கியது. ‘‘எவ்வளவு அழகான பெரிய கோபுரத்தைக் கட்டி இருக்கிறேன்’’ என்று தற்பெருமைக் கொண்டார்.

    இதைப் பார்த்த ஈசன், அவருக்கு அறிவுச் சூடுப் போட முடிவு செய்தார். அந்த கோபுர வாசல் வழியாக திருவீதி உலாவுக்கு வர மறுத்து விட்டார். திருவிழாவின் 10-வது நாள்தான் வல்லாள மகாராஜாவுக்கு தன் தவறு புரிந்தது. உடனே அண்ணாமலையார் முன்பு விழுந்து, வணங்கி மன்னிப்பு கேட்டார். அதன் பிறகே அண்ணாமலையார் 10-வது திருவிழா அன்று மட்டும் அந்த கோபுர வாசல் வழியாக வந்தார். இன்றும் அந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

    அண்ணாமலையார் அருளால், வல்லாள மகாராஜாவின் ஆட்சி மிகச் சிறப்பான ஆட்சியாக நடந்தது. இயற்கை வளங்களை நேர்த்தியாக பயன்படுத்தியதால் அவரது ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்தனர். எல்லா செல்வங்களும் அவர் காலடியில் கொட்டி கிடந்தன. என்ன இருந்து, என்ன பயன்? கொஞ்சி மகிழவும், நாட்டை வழி நடத்தவும் அவருக்கு வாரிசு இல்லை. குழந்தை இல்லாத ஏக்கம் அவரை மிகவும் தவிக்க வைத்தது.

    குழந்தைப் பேறுக்காகவே அவர் 2-வதாக சல்லமா தேவி என்ற பெண்ணை மணந்தார். அவளாலும் வல்லாள மகாராஜாவின் வாட்டத்தைப் போக்க இயலவில்லை. அண்ணாமலையாரிடம் கண்ணீர் விட்டு அடிக்கடி தன் தவிப்பை வெளிப்படுத்துவார். வல்லாள மகாராஜாவின் இந்த துயரத்தைப் போக்க அண்ணாமலையார் அருமையான ஒரு திருவிளையாடலை நடத்தினார். துறவி கோலம் பூண்டு அரசவைக்கு வந்து வல்லாள மகாராஜாவை சந்தித்தார்.

    தன்னை நாடி வரும் சிவனடியார்களை வரவேற்று நன்கு உபசரித்து அனுப்புவது வல்லாள மகாராஜாவின் வழக்கமாகும். சிவனடியார்கள் எது கேட்டாலும், மறுக்காமல் செய்து கொடுப்பார். துறவிக் கோலத்தில் வந்திருந்த ஈசனைக் கண்டதும் அவரது மனம் பரவசம் அடைந்தது. வரவேற்று உபசரித்தார். பிறகு, ‘‘சுவாமி தங்களுக்கு அடியேன் என்ன உதவி செய்யட்டும்?’’ என்று கேட்டார்.

    இந்த கேள்வியை எதிர் பார்த்துதானே ஈசன் வந்திருந்தார். துறவிக் கோலத்தில் இருந்த அவர், ‘‘என்னுடன் இன்று ஒரு நாள் மட்டும் தாம்பத்திய உறவுக்கு ஒரு பெண் வேண்டும்’’ என்றார். இதைக் கேட்டதும் வல்லாள மகாராஜாவுக்கும், அரசவையில் இருந்தவர்களுக்கும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. என்றாலும் கேட்பவர் சிவனடியார் அல்லவா? அவரது இந்த விருப்பத்தை பூர்த்தி செய்ய வல்லாள மகாராஜா உத்தரவிட்டார்.

    படை வீரர்கள் திருவண்ணாமலையில் தாசிப் பெண்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று அழைத்தனர். ஆனால் எந்த ஒரு தாசியும் கிடைக்கவில்லை.
    எல்லா தாசிப் பெண்களும் ஒவ்வொரு ஆடவருடன் இருந்தனர். இதுவும் சிவபெருமானின் திட்டப்படி நடந்ததாகும். தாசிப்பெண் கிடைக்காததால் படை வீரர்கள் வெறும் கையுடன் அரண்மனைக்கு திரும்பினார்கள்.

    இதையடுத்து தாசிப் பெண்ணை அழைத்து வர வல்லாள மகாராஜாவே புறப்பட்டு சென்றார். பொன், பொருள் உள்பட என்ன கேட்டாலும் அள்ளி, அள்ளித்தர தயாராக இருப்பதாக சொல்லியும் ஒரு தாசி கூட கிடைக்கவில்லை. மன்னர் கவலையோடு அரண்மனை திரும்பினார். அவரது மனவாட்டத்தை கண்ட இளையராணி சல்லமா தேவி, அந்த சிவனடியாரின் விருப்பத்தை தான் பூர்த்தி செய்து உதவுவதாக கூறினாள்.

    சிவனடியார் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்தாள். துறவியை வணங்கி, ‘‘சுவாமி என் கணவர் உமக்கு அளித்த வாக்குறுதி ஒரு போதும் தவறாது. அருணாசலமே நீயே துணை’’ என்றபடி சிவனடியாரை தொட்டாள். அடுத்த வினாடி துறவி வேடத்தில் இருந்த அண்ணாமலையார் ஒரு அழகான குழந்தையாக மாறினார். இதைக் கண்டு சல்லமா தேவி பிரமித்தாள். அந்த குழந்தையை வாரி எடுத்து உச்சி முகர்ந்தாள்.

    தகவல் அறிந்து வல்லாள மகாராஜா விரைந்து வந்தார். இது அண்ணாமலையாரின் திருவிளையாடல்தான் என்பதை புரிந்து கொண்டு கைக்கூப்பி வணங்கினார். அடுத்த வினாடி அந்த குழந்தை ஓளியாக மாறி மறைந்தது. அப்போது ஒரு அசரீரி கேட்டது. ‘‘குழந்தைப் பேறு வேண்டி மனத்துயரம் அடைந்துள்ள பக்தனே, நீ மனம் கலங்க வேண்டாம். இந்த பூலோகத்தில் உம் ஆயுள் முடியும் போது யாமே, உனக்கு மகனாக இருந்து உன் ஈம காரியங்களை செய்து முடிப்பேன். ஒவ்வொரு ஆண்டும் அந்த சடங்குகளை செய்வேன் என்றார்.

    இதனால் வல்லாள மகாராஜா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த அதிசயம் நிகழ்ந்த சில ஆண்டுகளில் மதுரை சுல்தான் படைகளுக்கும் வீர வல்லாள மகாராஜாவுக்கும் இடையே போர் ஏற்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்டிருந்த வல்லாள மகாராஜா படை முன்பு மதுரை சுல்தானால் தாக்குபிடிக்க முடியவில்லை. பள்ளி கொண்டாபட்டு பகுதியில் முகாம் அமைத்து தங்கி இருந்த போது வல்லாள மகாராஜாவை சுல்தான் நயவஞ்சகமாக ஏமாற்றி கொன்றான்.

    வல்லாள மகாராஜாவின் இறுதிச் சடங்குகளை பள்ளி கொண்டாபட்டு அருகே ஓடும் கவுதம நதிக்கரையில் அண்ணாமலையார் செய்து முடித்தார்.
    அன்று தொடங்கி இன்று வரை அண்ணாமலையார் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் தினத்தன்று பள்ளி கொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) கொடுத்து வருகிறார்.

    இந்த ஆண்டுக்கான இந்த வைபவம் மார்ச் 1-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த ஆண்டு (2018) 677-வது ஆண்டாக அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மையுடன் பள்ளிகொண்டாபட்டுக்கு சென்று திதி (தர்ப்பணம்) கொடுக்க உள்ளார். அன்றைய தினம் காலை அண்ணாமலையார், திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு பள்ளிகொண்டாபட்டு கவுதம நதிக்கரைக்கு வருவார். அங்கு திதி கொடுப்பார்.

    அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பள்ளிகொண்டாபட்டுக்கு திரண்டு வந்து தம் மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். ஈசன் திதி கொடுக்கும் போது, தாங்களும் அவ்வாறு செய்தால் தங்கள் மூதாதையர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

    இந்த நிகழ்ச்சியின் போது அண்ணாமலையாருக்கு சம்பந்தம் கட்டும் முறை நடைபெறும். அதாவது அண்ணாமலையாரை தங்கள் ஊர் சம்மந்தியாக ஏற்று பட்டாடை சாத்துவார்கள். பள்ளிகொண்டாபட்டு அருகில் உள்ள சம்மந்தனூரை சேர்ந்தவர்களே இதை ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறார்கள். இதனால்தான் அந்த ஊருக்கு ‘‘சம்மந்தனூர்’’ என்ற பெயர் ஏற்பட்டது.

    வல்லாள மகாராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுத்து முடிந்ததும், சம்மந்தி முறையில் உள்ளவர்கள் எல்லாரும் வாங்கப்பா... என்று அழைப்பார்கள். அதற்கு சம்மந்தனூர்காரர்கள், ‘‘மாப்பிள்ளையை (அண்ணாமலையாரை) கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்லுங்கள்’’ என்று உரிமையோடு சொல்வார்களாம்.
    இப்படி பலவிதமான சடங்குகளுடன் அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு வழி நெடுக மண்டக பூஜைகளை ஏற்றுக் கொண்டு அண்ணாமலையார் ஆலயத்துக்கு திரும்புவார்.

    அரசன் இறந்து விட்டால், அவனது மகனைத்தானே அடுத்த மன்னனாக முடிசூட்டுவார்கள். அந்த மரபின்படி மறுநாள் (இந்த ஆண்டு 2-3-18) அண்ணாமலையாருக்கு அரசராக முடிசூட்டும் விழா ஆலயத்தில் நடைபெறும். இதன் மூலம் அண்ணாமலையார் ஆண்டவனாகவும், அரசனாகவும் இருந்து தங்களை காப்பதாக திருவண்ணாமலை சுற்று வட்டாரப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

    உலகில் எந்த மன்னனுக்கும் இத்தனை ஆண்டுகளாக இறைவனே திதி (தர்ப்பணம்) கொடுக்கும் சிறப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வல்லாள மகாராஜா மிக, மிக கொடுத்து வைத்தவர். அவரது சேவையைப் போற்றும் வகையில் திருவண்ணாமலை ஆலயத்துக்குள் அவர் உருவச்சிலை உள்ளது. அதோடு கோபுரத்திலும் சிலை வடித்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் சிவபெருமான், யாருக்காகவும் இப்படி ஆலயத்தை விட்டு வெளியில் வந்து திதி கொடுப்பதில்லை. திருவண்ணாமலை ஆலயத்தில் மட்டுமே ஆண்டு தோறும் இந்த அதிசயம் நடக்கிறது.

    திருவண்ணாமலை ஆலயத்துக்குள் ராஜகோபுரத்தை கடந்து சென்றதும் வரும் வல்லாள மகாராஜன் கோபுரத்தை பார்க்கும் போதெல்லாம், இந்த அதிசயம்தான் ஆன்மிகவாதிகளுக்கு நினைவுக்கு வரும். வல்லாள மகாராஜன் கோபுரம் போன்று, அந்த ஆலயத்தின் ஒவ்வொரு அமைப்புமே அதிசயம்தான். தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் 142 தனி தனி சன்னதிகள் இருக்கின்றன. இதுவும் திருவண்ணாமலை ஆலயத்தின் அதிசயங்களில் ஒன்றாகும். 
    Next Story
    ×