search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை நடக்கிறது
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை நடக்கிறது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசி தெப்பத்திருவிழா நாளை தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3-ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4-ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5-ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    6-ம் நாளான நேற்று யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வந்தார். 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார்.

    பின்னர் அங்கிருந்து 9.45 மணிக்கு புறப்பட்டு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார். 9-ம் திருநாளான 26-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திருமஞ்சனம் கண்டருளி மாலை 6.30 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ரத்தினவேலு, அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தமநம்பி மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×