search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கதை
    X

    ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கதை

    இந்தியாவில் தோன்றி வாழ்ந்த மகான்களுள் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தனி இடம் பெறுகிறார். இத்தகைய சிறப்புடைய ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்....
    இந்தியாவில் தோன்றி வாழ்ந்த மகான்களுள் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தனி இடம் பெறுகிறார். அவர் வாழ்ந்த காலத்தில் அவரை அறிந்தவர்கள், ஒரு வேளை, சில நூறு பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். ஆனால் இன்றோ, அவர் உலக நாடுகளில் எல்லாம் போற்றப்படுகிறார்.

    மறைந்தும் மறையாமல் நின்று மக்களைக் காத்துவரும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் ஈடிணையற்ற அவதார புருஷர். ஸ்ரீராமகிருஷணர் மறைந்த பிறகும், அவரது பக்தர்களும், சீடர்களும் அவரது சான்னித்தியத்தை உணர்ந்தனர். அவர் அருகில் நின்று காத்து வருவதை அறிந்தனர். சிலர் நேரடி தரிசனம் பெற்றனர். சிலர் சில நிகழ்ச்சிகளின் வாயிலாக அவரது அருளை உணர்ந்தனர். அவர் எப்படி அவர்களை ஆட்கொண்டாரோ அந்த நிகழ்ச்சிகளை படிக்கும்போது, அவர் இன்னும் வாழ்ந்து வருகிறார். நம்மையும் காப்பார் என்கின்ற நம்பிக்கை நம்மில் உருவாகும். மேலும் மேலும் வலுப்படும்.

    அது மட்டுமல்ல, அவதார புருஷர்கள் தங்கள் செய்தியை மனிதகுலம் முழுமைக்கும் பரப்புவதற்காக ஒரு புதிய பரம்பரையை உருவாக்கி விட்டுச்செல்கின்றனர். இன்று உலகெங்கும் அறியப்படுகின்ற ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் என்னும் இரட்டை இயக்கங்கள் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சுமார் 16 இளைஞர்களைத் துறவிகளாக்கி, அவர்கள் மூலம் ஆரம்பித்து வைத்த புதியதோர் ஆன்மீக பரம்பரையின் தொடர்ச்சிகளே.

    ஸ்ரீராமகிருஷ்ணரை, ‘அவதார வரிஷ்டர்’ அதாவது, ‘அவதாரங்களுள் தலை சிறந்தவர்’ என்று போற்றுகிறார் சுவாமி விவேகானந்தர். இத்தகைய சிறப்புடைய ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்....

    மேற்கு வங்காளத்தில் கமார்புகூர் என்று ஒரு சிறிய கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு சுதிராம் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பெயர் சந்திரமணி தேவி. கணவன், மனைவி இருவருமே கடவுளிடம் பெரும் பக்தி கொண்டவர்கள். கடவுளை நம்பி, கடவுளுக்காகவே அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

    வடஇந்தியாவில் கயை என்ற புண்ணியத் தலம் இருக்கிறது. அங்குள்ள புகழ்பெற்ற கோயிலில் மகா விஷ்ணுவை கதாதரர் என்ற பெயரில் மக்கள் வழிபடுகிறார்கள்.

    சுதிராம் ஒருமுறை கயைக்கு யாத்திரை போனார். அங்கு அவர் தங்கியிருந்தபோது, அருமையான ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அந்த ஊர் இறைவனாகிய கதாதரர் தோன்றி, “உன் பக்தியால் அகம் மகிழ்ந்தேன். உனக்கு நான் குழந்தையாகப் பிறக்கப் போகிறேன்” என்று சொன்னார்.

    அதே சமயத்தில் கமார்புகூரில் இருந்த சந்திரமணி தேவிக்கும் ஒரு புதுமையான தெய்வீக அனுபவம் ஏற்பட்டது. அந்த ஊரில் சிவபெருமான் கோயில் ஒன்று இருந்தது. அங்கே சந்திரமணி வழிபடச் சென்றிருந்தபோது அந்தக் கோயிலில் இருந்த சிவலிங்கத்தில் இருந்து ஓர் ஒளி புறப்பட்டு அவரது உடலில் புகுந்து மறைந்தது.

    சுதிராம் ஊர் திரும்பினார். தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர் மனைவியிடம் சொன்னார். சந்திர மணி தேவி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கணவரிடம் சொன்னார். இந்த நிலையில் சந்திரமணி கருவுற்றாள். அப்போது அவளுக்குப் பல தெய்வீக அனுபவங்கள் ஏற்பட்டன. சில சமயங்களில் தன் வீட்டிற்குத் தெய்வங்கள் வருவதும் போவதும் பேசுவதும் சிரிப்பதும் சந்திரமணிக்குத் தெரிந்தது. இதனால் ஆண்டவனே வந்து தங்கள் வீட்டில் குழந்தையாகப் பிறக்கப் போகிறார் என்பதைத் தாயும், தந்தையும் முன்னதாகவே தெரிந்து கொண்டார்கள்.

    இப்படிப்பட்ட ஓர் ஆனந்தமான சூழ்நிலையில் 1836-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி அதிகாலையில் ஸ்ரீராமகிருஷ்ணர் பிறந்தார்.



    பிள்ளைப் பருவம் :

    கயையில் உள்ள கதாதரன் தானே குழந்தையாக வந்து பிறக்கப் போவதாகச் சொன்னதை சுதிராம் நினைத்துப் பார்த்தார். ஆதலால் குழந்தை பிறந்த போது, அதற்குக் கதாதரன் என்ற பெயரையே சுதிராம் வைத்தார். இந்தக் கதாதரன்தான் பிற்காலத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஆனார். பாரத நாட்டிற்கு மங்காத வான் புகழை வாங்கித் தந்தார். இன்று இவரை உலகம் முழுவதும் கோடிக் கணக்கானவர்கள் தினமும் வணங்கி வருகிறார்கள்.

    கதாதரன்தான் வீட்டில் செல்லப்பிள்ளை. வீட்டுக்கு மட்டுமல்ல, தெருவிலே, ஊரிலே, எல்லார் வீட்டுக்குமே கதாதரன்தான் செல்லப்பிள்ளை. கதாதரன் இருக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும்.

    கதாதரனாகிய குழந்தை வளர ஆரம்பித்தான். படுசுட்டி என்றால் பையன் படுசுட்டிதான். துருதுரு என்று இருப்பான். எதையாவது செய்து கொண்டே இருப்பான். கொள்ளை அழகு அவனுடையது. இதைப் பார்த்தவர்கள் அவனை அப்படியே அள்ளித் தூக்கி வைத்துக் கொள்வார்கள். ஊரில் அவனுடைய கவர்ச்சிக்கு ஆட்படாதவர்களே கிடையாது.

    எல்லாக் குழந்தைகளையும் போல கதாதரனையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். ஆனால் அவனுக்குப் படிப்பில் நாட்டம் இல்லை. இயல்பாகவே புத்திசாலியான கதாதரனுக்குப் பள்ளிப் படிப்பைவிட, ஆடல், பாடல் கலைகளில் கவனம் விழுந்தது. பள்ளிக்கூடப் படிப்பில் அக்கறை காட்டவில்லையே தவிர, மற்றபடி கதாதரன் சோம்பேறியாக இருக்கவில்லை.

    ஊருக்கு வெளியே ஒரு மாந்தோப்பு இருந்தது. அங்கேதான் நண்பர்களுடன் கதாதரன் விளையாடுவான். அந்த விளையாட்டில் தெருக்கூத்துக் கதாபாத்திரங்களின் வசனங்கள், உணர்ச்சி பாவங்கள், நடிப்புத் திறமை, நடையுடை பாவனைகள் அத்தனையும் கதாதரனிடம் வெளிப்படும். அவன், தான் தெருக்கூத்தில் கண்ட புராணப் பாத்திரங்களைப் போலவே தோழர்களின் முன்னால் நடிப்பான், பேசுவான். வசனங்களை மறந்து போகாமல், வரிக்குவரி அப்படியே அவன் பேசுவதையும் தத்ரூபமாக நடிப்பதையும் பார்த்தவர்கள் எல்லோரும் அதிசயித்துப் போவார்கள்.

    ஒரு சிவராத்திரி நாளின்போது, கிராமத்தில் நாடகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சிவபெருமானாக நடிக்க வேண்டியிருந்தவனுக்குத் திடீரென்று ஏதோ நோய் வந்துவிட்டது. ஆகையால் கதாதரனுக்குச் சிவபெருமான் வேடம் போடுவது என்று முடிவு செய்தார்கள். அதன்படியே அவனுக்கு ஜடையை வைத்தார்கள். இடையில் புலித்தோலைக் கட்டினார்கள். உடல் முழுவதும் சாம்பலைப் பூசிவிட்டார்கள்.

    இப்படி நன்றாக வேடம் எல்லாம் அணிந்து கொண்டு, கையில் ஒரு திரிசூலத்தையும் பிடித்தபடி கதாதரன் மெதுவாக மேடையின் மீது ஏறினான். மேடையின் மீது ஏறி நின்றவன், நின்றவன்தான். அசையவே இல்லை, பேசவும் இல்லை. பேச்சுமூச்சு இல்லாமல் சிவபெருமான் யோகசமாதியில் ஆழ்ந்திருப்பதைப் போல் நின்றுவிட்டான்.

    ஆனால் அவனது கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. கதாதரனுக்கு என்ன ஆயிற்றோ, ஏது ஆயிற்றோ என்று நாடகம் நடத்தியவர்கள் பயந்து விட்டார்கள். உண்மையில் விஷயம் என்னவென்றால், கதாதரனுக்கு சிவபெருமானின் நினைவு ஏற்பட்டு, தெய்வீக நிலையில் அவனது மனம் ஆழ்ந்து போயிருந்தது. மறுநாள் பொழுதுவிடியும் வரையிலும் அதே பரவச நிலையில் கதாதரன் சுயநினைவு திரும்பாமல் இருந்தான்.



    தட்சிணேசுவரத்தில் :

    கதாதரனுக்கு வயது பதினேழு ஆகியது. அப்போது அவன் கல்கத்தாவிற்குப் போக வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. கதாதரனுடைய பெரிய அண்ணாவின் பெயர் ராம்குமார். அவர் கல்கத்தாவில் சமஸ்கிருதப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். அந்தப் பள்ளியில் தனக்கு உதவியாக இருந்து கவனிப்பதற்காகவும் அவனைப் படிக்க வைப்பதற்காகவும் அவர் கதாதரனைக் கல்கத்தாவிற்கு அழைத்து வந்தார்.

    ஆனால், கல்கத்தா வந்த பிறகும் கதாதரனுக்குப் படிப்பில் என்னமோ ஈடுபாடு வரவில்லை. படிப்பிலே அக்கறை காட்டாமல் இருப்பதற்காக ஒரு சமயம் ராம்குமார் கதாதரனைக் கோபித்துக் கொண்டார். தன்னைக் கோபித்துக் கொண்ட பெரிய அண்ணாவுக்கு, அமைதியாகவும் பணிவாகவும் கதாதரன் பதில் சொன்னான். ‘அண்ணா, வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காகப் படிக்கிற படிப்பு எனக்கு வேண்டாம். கடவுளைக் காட்டுகிற படிப்பைத்தான் நான் படிக்கப் போகிறேன்.’ தம்பியின் இந்தப் பதிலைக் கேட்ட ராம்குமாரால் பதில் ஒன்றுமே பேச முடியவில்லை.

    சிறிது காலம் சென்றது. கல்கத்தாவின் அருகில் உள்ள தட்சிணேசுவரம் என்ற இடத்தில் புதிதாகக் காளி கோவில் ஒன்றைக் கட்டினார்கள். தெய்வத்தின் செயலாக, அற்புதமான வகையில் ஸ்ரீராமகிருஷ்ணரே அந்தக் கோவிலில் பூசாரியாகப் பணி ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை வந்தது. தட்சிணேசுவரத்தில்தான் கதாதரன், ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற மகிமை பொருந்திய பெயரைப் பெற்றான். தெய்வீக வாழ்க்கையிலேயே மலர்ந்து மணம் வீசி, ஆன்மீக நறுமணத்தை உலகம் முழுவதும் பாய்ச்சினான். இனி கதாதரனை நாமும் ஸ்ரீராமகிருஷ்ணர் என்றே அழைக்கலாம்.

    ஸ்ரீராமகிருஷ்ணர் காளி தேவிக்குப் பூஜை செய்ய ஆரம்பித்தார். பூஜை என்றால் சாதாரண பூஜை இல்லை. உடலை மறந்து, உலகத்தை மறந்து, தன்னையே மறந்து, உள்ளம் தோய்ந்து காளி பூஜையை அவர் செய்தார்.

    எந்த பவதாரிணி தேவியைத் திருவுருவில் வழிபட்டாரோ, அதே தேவியை நேரில் காண வேண்டும், அவளோடு பேச வேண்டும் என்ற ஆவல் விரைவில் ஸ்ரீராமகிருஷ்ணரின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியலாயிற்று.



    தேவியின் தரிசனம் :

    காளி தேவியின் சன்னிதியில் மணிக்கணக்கில் தொடர்ந்து பூஜை செய்வார் ஸ்ரீராமகிருஷ்ணர். எப்போதும் அவர் ‘அம்மா, நீ உனது தரிசனத்தை எனக்குக் கொடு’ என்று சொல்லிப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பார். பிரார்த்தனை, தேவியைக் காணாமல் இருக்கிறோமே என்று அழுகையாக மாறியது. குமுறலாக மாறியது. அந்தக் குமுறல் பொங்கி வெடித்தது அது அவரை எல்லாவிதமான சித்திரவதைகளுக்கும் ஆளாக்கியது.

    அந்தத் துன்பமே அவரது உள்ளத்தில் நிறைந்து நின்று, அவரை வாட்டி எடுத்துக் கசக்கிப் பிழிந்து துடிதுடிக்க வைத்தது. மணிக்கணக்காக தேவியின் சன்னிதியில் ஆடாமல் அசையாமல் ஒரு கல்சிலையைப் போல உட்கார்ந்து தியானம் செய்வார். தேவியை இன்னும் காணவில்லையே என்று கதறிக் கதறிக் கண்ணீர் விடுவார். கடவுளுக்காக உலகத்திலேயே இப்படி ஒருவர் அழுதிருக்க மாட்டார். கண்ணீர் மாலை மாலையாக, வெள்ளம் வெள்ளமாக, பிரார்த்தனையோடு கலந்து அவரிடமிருந்து ஆறாகப் பெருகிக் கொண்டேயிருந்தது.

    இந்நிலையில் ஒருநாள், தேவியைக் காணாமல் இனிமேல் உயிர் வாழ்வதில் பயனில்லை என்ற முடிவிற்கு வந்தார். காளி தேவியின் சன்னிதியிலேயே ஒரு பெரிய வாள் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த வாளை எடுத்து, தேவியின் திருவுருவின் முன்னாலேயே தமது கழுத்தை வெட்டிக் கொள்ளப் போனார். அப்போது ஒளி மயமாகக் காளி தேவியே அவர் கண் முன்னால் தோன்றினாள்.

    காளி, காளி என்று தம்மை மறந்து வாழ்ந்த ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று எண்ணிய பெற்றோர் அதைத் தெளிவிக்க அவருக்குத் திருமணம் செய்து வைப்பதே வழி என்று நினைத்தார்கள். தமக்குத் திருமணம் நடைபெறப் போகிறது என்பது தெய்வ சங்கல்பத்தால் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு முன்னதாகவே தெரிந்து விட்டது. ஆகையால் அவர் மறுப்புச் சொல்லவில்லை. மாறாக, மணமகள் சாரதாதேவி இருக்கும் இடத்தை அவரே தெரிவித்தார். ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் சாரதா தேவி என்னும் சிறுமிக்கும் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்ததும் ஸ்ரீராமகிருஷ்ணர் பழையபடியே தட்சிணேசுவரத்திற்கு வந்து சேர்ந்தார். சாரதாதேவி தன் தாய்வீட்டிற்குப் போய்விட்டாள்.



    தெய்வீக அனுபவங்கள் :
     
    திருமாலை வழிபடுபவர்களை வைணவர்கள் என்று நாம் சொல்கிறோம். அவர்கள் சாந்தம், தாஸ்யம், வாத்சல்யம், சக்யம், மதுரம் என்னும் ஐந்து முறைகளில் கடவுள் பக்தியில் ஈடுபடுகிறார்கள். இந்த ஐந்து முறைகளையும் ஸ்ரீராமகிருஷ்ணர் பின்பற்றிக் கடவுளிடம் பக்தி செலுத்தினார்.

    ஸ்ரீராமபிரானையும் ஸ்ரீராமகிருஷ்ணர் வழிபட்டார். அப்போது அவர் ஆஞ்சநேயரைப் போலவே நடந்து கொண்டார். அப்படி ஸ்ரீராமபிரானை வழிபட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீராமபிரானின் துணைவியாகிய சீதையை அவர் பட்டப்பகலிலே ஒரு நாள் பார்த்தார். புன்முறுவலுடனும் அருளே வடிவெடுத்தது போலும் வந்த சீதாப் பிராட்டி தம்மை மறந்து நின்ற ஸ்ரீராமகிருஷ்ணரின் உடலிலேயே கலந்து மறைந்து போய்விட்டாள்.

    ஸ்ரீராமகிருஷ்ணர் சில காலம் பலராமர் சிலையை வைத்தும் வணங்கினார். அப்போது குழந்தை வடிவத்தில் ஸ்ரீராமபிரானே அவர் முன் தோன்றினார். அப்படிக் குழந்தை வடிவத்தில் வந்த ஸ்ரீராமபிரானுடன் ஸ்ரீராமகிருஷ்ணர் கொஞ்சி விளையாடிய பல நிகழ்ச்சிகளும் நடந்தன.

    ஸ்ரீராமனின் காட்சிக்குப் பிறகும் அவரது பக்தி வாழ்க்கை தொடர்ந்தது. அப்போது அவருக்கு ஸ்ரீகிருஷ்ணர், ராதை, ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் ஆகியவர்களின் காட்சியும் கிடைத்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு தடவை காசிக்கு யாத்திரையாகப் போயிருந்தார். அப்போது சிவபெருமானின் தரிசனமும் அவருக்குக் கிடைத்தது.

    ஒருமுறை பைரவி பிராம்மணி என்ற பெயரை உடைய ஒரு சன்னியாசினி தட்சிணேசுவரத்திற்கு வந்திருந்தார். அந்தப் பெண்மணியை ஸ்ரீராமகிருஷ்ணர் தமது குருவாக ஏற்றுக் கொண்டார். வங்காள சாக்தர்களுக்கு அறுபத்து நான்கு வகையான தந்திர சாதனைகள் மிக முக்கியமானவை. இந்த அறுபத்து நான்கு வகை சாதனைகளையும் ஸ்ரீராமகிருஷ்ணர், பைரவி பிராம்மணியின் துணையுடன் செய்து, தேவியைப் பல வடிவங்களில் தரிசித்து மகிழ்ந்தார். சாதனைக் காலத்தில், மேலும் மேலும் பல அரிய தெய்வீகக் காட்சிகள் அவருக்குக் கிடைத்தன.

    மற்றொரு முறை, அத்வைத ஞானத்தில் நிறைநிலையைப் பெற்றிருந்த ஒரு மகான் தட்சிணேசுவரத்திற்கு வந்தார். அந்த மகானுடைய பெயர் தோதாபுரி என்பதாகும். அவரையும் ஸ்ரீராமகிருஷ்ணர் தமது குருவாக ஏற்றுக் கொண்டார். தோதாபுரி நாற்பதாண்டு காலம் நர்மதை நதிக்கரையிலேயே தங்கியிருந்தவர். அப்போது கடுமையான தவங்களை அவர் செய்து உயர்ந்த ஞானநிலையை அடைந்திருந்தார். தோதாபுரி நாற்பதாண்டுகள் கடுந்தவம் செய்து பெற்றிருந்த மேலான அந்த ஞானத்தை ஒரே நாளில் ஸ்ரீராமகிருஷ்ணரும் அடைந்தார்.

    தமது இருபத்தெட்டாம் வயதில் ஸ்ரீராமகிருஷ்ணர் தோதாபுரியிடம் சன்னியாசம் வாங்கிக் கொண்டார். அப்படி சன்னியாசியாகிவிட்ட பிறகு, மிக மிக உயர்ந்த நிலையாகிய நிர்விகற்ப சமாதியில் ஸ்ரீராமகிருஷ்ணர் ஆறுமாத காலம் ஆழ்ந்திருந்தார்.

    எல்லா மதங்கள் வழியாகவும் இறைவனை அடைய முடியும் என்பதைத் தம் வாழ்விலேயே கண்டறிந்த ஸ்ரீராமகிருஷ்ணர் பிற மதங்களின் நெறி நின்றும் சாதனைகள் புரிந்து அனுபூதி பெற்றார்.

    ஸ்ரீராமகிருஷ்ணருக்கு எவ்வளவோ தெய்வீக அனுபவங்கள் கிடைத்தன. ‘தாம் கண்ட உண்மைகளை எல்லாம் உலக மக்களுக்குத் தந்து, அவர்களையும் நன்றாக வாழச் செய்ய வேண்டும். தான் ஒருவன் மட்டும் உயர்ந்தால் போதாது. மற்றவர்களையும் உயர்வடையச் செய்ய வேண்டும்’ என்று ஸ்ரீராமகிருஷ்ணரின் கருணையுள்ளம் நினைத்தது.

    ஸ்ரீராமகிருஷ்ணரை நாடிப் பல பக்தர்கள் வந்தார்கள், சில தூய இளைஞர்களும் வந்தார்கள். பக்தர்களிடம் ஸ்ரீராமகிருஷ்ணர் அன்பை அள்ளிச் சொரிந்தார். தூய இளைஞர்களைத் தனியாகப் பிரித்து, உலகின் தலையெழுத்தையே மாற்றவும் நிர்ணயிக்கவும் வல்ல ஆன்மீக பலத்தை அவர்களிடம் செலுத்தினார். தாம் கண்ட உயர்ந்த ஆன்மீக உண்மைகளை இந்த இளைஞர்கள் அப்படியே கிரகித்துக் கொள்ளும்படிச் செய்தார். இவ்விதம் ஸ்ரீராமகிருஷ்ணர் இளைஞர்கள் அடங்கிய சிறு குழு ஒன்றை உருவாக்கி, அவர்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும் விளங்கி அவர்களை மிக மிகக் கவனத்தோடு பாதுகாத்தார்.

    எப்போதும் பாடல்கள், ஆனந்த நடனம், தெய்வீக உரையாடல்கள் என்று நாட்கள் வெகு வேகமாகச் சென்றன. இந்நிலையில், தமது அந்திம காலம் நெருங்குவதை ஸ்ரீராமகிருஷ்ணர் உணர்ந்து கொண்டார். அந்த இளைஞர்களில், தமது உயிருக்குயிரான நரேந்திரன் என்பவரைத் தேர்ந்தெடுத்தார். தமக்குப் பிறகு இளைஞர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொள்ளும்படி நரேந்திரனுக்குக் கட்டளையிட்டார்.

    ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர், உலக நன்மையின் பொருட்டு, தமது ஆற்றல்களை எல்லாம் நரேந்திரனிடம் தந்து விடுவது என்று முடிவு செய்தார். நரேந்திரரும் ஸ்ரீராமகிருஷ்ணரும் அன்று தனிமையில் இருந்தார்கள். நரேந்திரர் ஒரு சூட்சுமமான சக்தி பலமாகவும் வேகமாகவும் தம்முள் புகுந்து ஆக்கிரமிப்பதை உணர்ந்தார். அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் தாம் அரும்பாடுபட்டுச் சேகரித்த ஆன்மீக சக்திகளை நரேந்திரனிடம் கொடுத்தார்.

    ஸ்ரீராமகிருஷ்ணருடைய உடல் தளர்ந்து கொண்டே வந்தது. உடல் நலம் சரியில்லாமல் போனதால் பேச முடியாத நிலைமைக்கு அவர் வந்து விட்டார். அப்போது அவர் பக்தர்களுக்கு, ‘நரேந்திரன் உலகிற்குப் போதிப்பான்’ என்று காகிதத்தில் எழுதிக் காட்டினார். தமது குரல் நரேந்திரரின் வெண்கலக் குரலாக உலகின் நான்கு திசைகளிலும், மூலைமுடுக்குகள் எல்லாம் ஒலிக்கப் போவதை ஸ்ரீராமகிருஷ்ணர் குறிப்பாக அடிக்கடி பக்தர்களுக்கு உணர்த்தினார்.

    ஸ்ரீராமகிருஷ்ணர் 1886-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ம் நாள் மகா சமாதி அடைந்தார். அவரது தூப உடல் அன்றைய தினம் மண்ணுலகில் இருந்து மறைந்து போயிற்று. எனினும் அவர் போதித்த உண்மைகள் மறையவில்லை. அவை என்றும் இருந்து உலக மக்களை நல்வழிப்படுத்தும்.

    பிற்காலத்தில் நரேந்திரர், துறவு பூண்டு ஸ்ரீராமகிருஷ்ணர் காட்டிய வழியில் சுவாமி விவேகானந்தராகி ஆற்றிய பணிகள் வரலாற்றுப் புகழ் பெற்றவை.
    Next Story
    ×