search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமகிருஷ்ணரின் அனுபூதி நிலை
    X

    ராமகிருஷ்ணரின் அனுபூதி நிலை

    ராமகிருஷ்ணர் ஒரு அவதார புருஷர் என்பது இரு வெவ்வேறு சம்பவம் மூலம் வெளிப்பட்டது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பகவான் ராமகிருஷ்ணர் கூறுகிறார். “சாதாரண மக்கள் இந்நிலையை அடைவதில்லை. எனக்கு ஏற்பட்ட ஆன்மீக வேகத்தில் கால்பங்கே மற்றவர்களின் உடலையும், உள்ளத்தையும் அழித்துவிடப் போதுமானது. இரவு பகலாக அன்னையின் ஏதாவது ஒரு காட்சி கிடைத்துக் கொண்டே இருந்தது. அப்பொழுது அன்னையின் காட்சி மட்டும் இல்லாதிருந்தால் இவ்வுடல் அழிந்து போயிருக்கும்.

    ஆறு வருடங்கள் எனக்கு தூக்கமே இல்லை. கண்கள் இமைப்பதே இல்லை. எவ்வளவு முயன்றும் கண்களை மூடவே முடியவில்லை. நேரம் போவதே தெரியாது. உடல் உணர்வுகள் அறவே இல்லை. அன்னையின் நினைவுகளிலிருந்து சிறிது நேரம் மீண்டாலும் பைத்தியம் பிடித்த நிலைக்கு வந்து விடுவேன். பயம் கவ்விக் கொள்ளும். ‘அம்மா’ என்று அலறுவேன். என்னை மட்டும் புறக்கணித்துவிடாதே, உன்னுடைய தரிசனத்தை எனக்குக் கொடு.

    உன் கருணையை என் மீது காட்டு, உன் திருப்பாதங்களைச் சரண் அடைந்த எனக்கு வேறு கதி இல்லை என்று வேண்டுவேன். இவ்வாறு கதறிக் கதறி அழுத பிறகு என்னுடைய மனம் மறுபடியும் பரவச நிலை அடைந்துவிடும். இந்த உலகமும் உடலும் எனக்கு அற்பமாகத் தோன்றும். அன்னையின் தரிசனம் மட்டுமே ஆறுதல் அளிக்கும் என்றார்.

    இதனால் ராமகிருஷ்ணருக்குச் சித்த பிரம்மை பிடித்து விட்டதாகவே எல்லோரும் கருதினார்கள். தாயார் சந்திராதேவி மிகவும் கவலை அடைந்தார். பிரபல ஆயுர்வேத வைத்தியர் கங்கா பிரசாத் சென் சிகிச்சை அளித்தார். சிகிச்சையினால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

    கடைசியாக ராமகிருஷ்ணரின் முதல் குருவாகிய பைரவி பிராம்மணி அம்மையார் உலகத்தாரால் பைத்தியக்காரத்தனம் என்று கருதப்பட்ட செயல்கள் மிக உன்னத பக்தியாகிய மகா பாவத்தின் அறிகுறிகள் என்று நிரூபித்தார். இத்தகைய அறிகுறிகள் அவதார புருஷர்களிடம் மட்டும்தான் காணப்படும் என்று கூறினார்.



    ராமகிருஷ்ணர் ஒரு அவதார புருஷர் என்பது பின்பு வேறொரு சம்பவம் மூலம் வெளிப்பட்டது. ஒரு நாள் ராமகிருஷ்ணர் தன் அறைக்கு முன் உள்ள வராந்தாவில் உலாவிக் கொண்டிருந்தார். மதுர்பாபு, கோவிலை ஒட்டிய தனது அறையில் இருந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்.

    ராமகிருஷ்ணர் நடப்பது அவரது கண்களுக்குத் தென்பட்டது. மதுர்பாபு பார்த்துக் கொண்டிருக்கும் போதே ராமகிருஷ்ணரின் உடல் மறைந்து அன்னை காளிதேவியின் உருவம் தெரிந்தது. கண்களை அகலத்திறந்து மதுர்பாபு நன்கு பார்த்தார். அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை. ராமகிருஷ்ணர்தான் காளியாக மாறி காட்சி அளித்தார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.

    மற்றொரு சம்பவமும் ராமகிருஷ்ணர் ஒரு அவதாரப் புருஷர் என்பதை உறுதிப்படுத்தியது. ஒரு நாள் மதுர்பாபு ராமகிருஷ்ணருடன் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார். அப்போது மதுர்பாபு “இயற்கையைப் படைத்த இறைவனாலேயே இயற்கையின் திட்டத்தை மாற்ற முடியாது” என்று கூறினார். “இறைவன் நினைத்தால் எதையும் செய்ய முடியும்“ என்று ராமகிருஷ்ணர் பதில் கூறினார்.

    செந்நிறப்பூ பூக்கும் செடி வெண்ணிறப் பூக்களை உண்டாக்குவதில்லை. அப்படி வெண்ணிறப்பூக்களை உண்டாக்கினால் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று மதுர்பாபு பதில் சொன்னார். பிறகு சில நாட்கள் சென்றன.

    அதே செடியில் ஒரே கிளையில் வெள்ளை நிறப்பூவும், சிவப்பு நிறப்பூவும் பூத்திருப்பதை ராமகிருஷ்ணர் மதுர்பாபுவுக்குச் சுட்டிக்காட்டினார். இந்த அதிசயத்தைப் பார்த்த மதுர்பாபு ஆச்சரியத்தில் உறைந்து போனார். பகவான் ராமகிருஷ்ணர் காளியின் அவதாரமே என்பது அவருக்கு நன்கு புலனாகியது.

    Next Story
    ×