search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழா 22-ந் தேதி தொடங்குகிறது
    X

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழா 22-ந் தேதி தொடங்குகிறது

    பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
    திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஒரே நேரத்தில் இந்த கோவிலில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது, உலக சாதனையாகி ‘கின்னஸ்‘ புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கிறது.

    எனவே இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்புக்குரியதாகும். 1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி நடந்த பொங்கல் வழிபாட்டில் 15 லட்சம் பெண்களும், 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதி நடந்த பொங்கல் வழிபாட்டில் 25 லட்சம் பெண்களும் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழா வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி வரை திருவிழா நடைபெறும்.

    சிகர நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு மார்ச் 2- ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 10.15 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்குகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் நடைபெறும்

    பொங்கல் விழா குறித்து ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அறக்கட்டளை தலைவர் ஆர்.ரவீந்திரன் நாயர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் 22-ந் தேதி மாலை 5.45 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டி விழா தொடங்குகிறது. மார்ச் 2- ந் தேதி பொங்கல் வழிபாடு நடக்கிறது. இந்த ஆண்டின் பொங்கல் வழிபாட்டில் முன்பைவிட ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும், அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு கணபதி ஹோமம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 6.40 மணிக்கு உஷ பூஜை, 7.15 மணிக்கு களபாபிஷேகம், 8.30 மணிக்கு பந்தீரடி பூஜை, 11.30 மணிக்கு உச்ச பூஜை, 12.30 மணிக்கு உச்ச ஸ்ரீபலி மற்றும் நடை அடைப்பு ஆகியவை நடக்கிறது.

    பிற்பகல் 3.30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, மாலை 6.45 மணிக்கு தீபாராதனை நடைபெறும். 7.15 மணிக்கு பகவதி சேவை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பின் இரவில் நடை அடைக்கப்படும்.

    விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள 3 கலையரங்குகளிலும் தினமும் கலை நிகழ்ச்சிகள், பக்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 22- ந் தேதியன்று மாலை 6.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளை நடிகர் சூர்யா தொடங்கி வைக்கிறார்.

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கேரள அரசு சார்பில் ரூ.10 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×