search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவனின் ஆனந்த நடன தரிசனம்
    X

    சிவனின் ஆனந்த நடன தரிசனம்

    பயபக்தியில் பரமனின் திருநடனத்தை தரிசித்து கொண்டு இருந்த தேவாதி தேவர்கள் யாவரும், வெம்மையால் துடிதுடித்து போனார்கள்.
    காலவ முனிவர் எதற்காக திருப்பேரூரில் வந்து தவம் இருந்தாரோ..?, எந்த திருநடனத்தை கண்டுகளிக்க வேண்டும் என்று திருமால் கோமுனியாக வந்து திருப்பேரூரில் வந்து தவம் இருந்தாரா? அந்த திருநடன காட்சி அரங்கேறும் காலம் நெருங்கியது.

    ‘என் அப்பனே! முழுமூர்த்தியே! ஆதிலிங்கமே! உன் திருநடனத்தை தரிசிக்கும் பேறு எப்போது கிடைக்கும்’ என்று மனம் உருகி தியானித்தபடி இருந்தார் கோமுனியாகிய திருமால்.

    அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “பழைய அம்பலத்தை பரமன் மறைத்தப்படியால் இவ்விடத்தில் ஒரு சபை அமைத்து நடராஜர் திருஉருவம் அமைத்து வழிபடுவாயாக” என்றது அந்தக் குரல்.

    இதைத் தொடர்ந்து கோமுனி, தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து, சபை நிர்மாணிக்கும் பொறுப்பைக் கொடுத்தார். ஆனால் அதற்கான இடத்தைத் தேர்வு செய்வதில் விஸ்வகர்மாவுக்கும், ஏன்? கோமுனியான திருமாலுக்குமே தடுமாற்றம் இருந்தது.

    இதையறிந்த பரமன், சித்தர் உருவம் கொண்டு அங்கு எழுந்தருளினார். கோமுனியிடம், ‘ஆதிலிங்க மூர்த்திக்கு வடகிழக்கில் திரிமூர்த்தி உருவான அரசமர நிழலில் வந்து வெள்ளியம்பலம் எழுக’ என்று கூறினார். அப்போது வெள்ளியம்பலம் எழுந்தது. இதை பார்த்த தேவர்கள் வானில் இருந்து கற்பக மலர்களைத் தூவி தரிசித்தனர்.

    வெள்ளியம்பலத்தை தரிசித்த கோமுனி, ‘தேவரீர்... தாங்கள் செய்வித்த வெள்ளியம்பலத்துக்கு திருவுருவம் செய்து அருள வேண்டும்’ என்று சித்தரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    சித்தர் மனம் மகிழ்ந்து, ஒரு திரை அமைத்து, ஒரு முகூர்த்தம் அங்கு அமர்ந்து, 2-வது முகூர்த்தத்தில் மறைந்து இருந்தார். அந்த வேளையில் அங்கு நடராஜர், சிவகாமியம்மன் திருவுருவம் எழுந்தருளி இருந்தது. அப்போது தான் வந்த சித்தர் யார்? என்பது கோமுனிக்கு புலப்பட்டது. இறைவனே தான் அமர விரும்பும் இடத்தைச் சொல்லிச் சென்றதை நினைத்து மகிழ்ந்த திருமால், தினமும் 6 கால வேளையும் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்தார்.

    இதையடுத்து அங்கு ஆலயம் நிர்மாணிக்கும் பணியில் விஸ்வகர்மா ஈடுபட்டார். பின்னர் அங்கு பஞ்சமூர்த்திகளையும், பரிவார தேவதைகளையும் பிரதிஷ்டை செய்தார். பங்குனி மாதத்தில் வளர்பிறை சஷ்டியுடன் கூடிய கார்த்திகை மாதத்தில் திருக்கொடியேற்றி 9 நாட்கள் திருவிழா நடத்தினார்கள். 10-வது நாள் உத்திரத்தன்று வெள்ளியம்பலத்துக்கு எதிரே உள்ள மண்டபத்தில் சிவபெருமானின் திருநடன தரிசனத்தை காண கோமுனிவராகிய திருமாலும், பட்டி முனியாக பிரம்மனும், காலவ முனிவரும் அருகேருகே நின்றிருந்தனர். நாரத முனிவரும், புரு முனிவரும் தங்கள் கையில் வீணை வைத்து இசைத்தபடி இருந்தனர். அகத்திய மாமுனிவரும், நந்திபெருமானும் மத்தளம் முழக்க, திரண்டு இருந்த திருத்தொண்டர்கள் தங்கள் தலை மீது கரங் களைக் குவித்து, ‘சிவ..சிவ.. சங்கரா..சங்கரா’ என்று பக்தியை படரச் செய்தனர்.

    அனைவரின் கண்களும் ஏக்கத்தோடு காத்திருக்க, பரம்பொருள் உமாதேவியுடன் அங்கே எழுந்தருளினார். தமது திருமேனியின் ஒரு பாகத்தில் உமாதேவி அமர்ந்திருக்க.. ஒரு கையில் உடுக்கை ஒலிக்க.. மற்றொரு கையில் அக்னி தீப்பற்றி எரிய.. வேறொரு கை வரதமாக, பிறிதொரு கை அபயமாக, ஒரு திருவடி முயலகன் முதுகில் பதிந்திருக்க, மற்றொரு திருவடி அந்தரத்தில் தவிழ, ஆனந்த தாண்டவம் எடுத்து திருநடனம் புரிந்தார் நடராஜர்.

    அப்போது எழுந்த சிலம்பொலியானது, பூமாதேவியே சலங்கை கட்டி ஆடியது போன்ற சத்தத்தை உண்டாக்கியது. உடுக்கை சத்தம் அனைத்தும் என்னுள் அடக்கம் என்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. தனது திருவடி கொண்டு திருநடனம் புரிந்த வேகத்தில் அவர் அணிந்து இருந்த ஆபரணங்களான பாம்புகள் உடலில் இருந்து கழன்று விடாமல் இருக்க மிகவும் பிராயத்தனம் செய்தன. தனது வாலால் நடராஜரின் திருவுருவத்தை பற்றி கொண்டன. அவர் ஆடிய வேகத்தில், அவரது திருவுருவில் இருந்து வெளிப்பட்ட பாம்புகள் விஷத்தை உமிழ்ந்தன. ஆயிரமாயிரம் பாம்புகளின் விஷத்தால் அவ்விடத்தில் சூரியன் தகிப்பதைப் போன்ற வெப்பம் உண்டானது. அந்த வெப்பத்தால், புலித்தோல் போர்த்திய பரமனின் திருமேனி வரி, வரியாக வியர்வையால் ஒழுகியது.

    பயபக்தியில் பரமனின் திருநடனத்தை தரிசித்து கொண்டு இருந்த தேவாதி தேவர்கள் யாவரும், வெம்மையால் துடிதுடித்து போனார்கள். பசி எடுத்து வாடினார்கள். உடனே உமாதேவியார், அன்னபூரணியாக மாறி அனைவரின் பசியையும் தணித்தார். முருகன் அனைவரின் தாகத்தையும் தணித்து இருந்தார். விநாயகரோ அந்த வெப்பத்தை தணிக்க தனது துதிக்கையால் அங்கும், இங்கும் வீசினார். அந்த காற்றில் விஷம் கரைந்து போய் இருந்தது.

    அற்புதமான அந்தத் திருநடன காட்சியை கண்டு தரிசித்த தேவாதி தேவர்கள் அனைவரும், ‘சங்கரா.. சங்கரா..’ என்று மகிழ்ச்சி பெருக்கில் ஆரவாரம் செய்தனர். தனது திருக்கூத்தை கண்டு தரிசித்த காலவ முனிவருக்கு அவர் விரும்பிய வண்ணம் பேரின்ப வாழ்வை அளித்தார் சிவபெருமான். பிரம்மனை அழைத்து, ‘நீவிர்! மீண்டும் படைக்கும் தொழிலை மேற்கொள்வீர்’ என்று அருள்பாலித்தார்.

    அதன் பிறகு, திருமாலை அழைத்து, ‘பரந்தாமா! என் திருநடன தரிசனத்தை தரிசிக்க கோமுனியாக இவ்விடம் எழுந்தருளினீர்களே! தங்கள் விருப்பத்தை நிறைவேற்றினோம். தாங்களும் பாற்கடலில் எழுந்தருளி காக்கும் தொழிலை மேற்கொள்ளுங்கள்’ என்றார்.

    அதன் பிறகு மற்ற அனைவரிடமும், ‘இந்த திருப்பேரூரில் வசிப்போருக்கும், இந்தத் தலத்தை தரிசிப்போருக்கும், அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நால்வகை பொருட்களும் வழங்குவது எனது கடமை’ என்று திருவாய் மலர்ந்தருளினார். பின்னர் வெள்ளியங்கிரி மலை மீது வெள்ளியம்பலமாகவும், உமாதேவியர் மனம் மகிழும் வண்ணம் திருநடனம் புரிந்தார் பரமன்.
    Next Story
    ×