search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காவிரி ஆற்றில் 8 ஊர் சிவாலயங்களின் சாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    காவிரி ஆற்றில் 8 ஊர் சிவாலயங்களின் சாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

    கடம்பந்துறை காவிரி ஆற்றில் 8 சிவாலயங்களின் உற்சவர்களுக்கு தீர்த்தவாரி

    கடம்பந்துறை காவிரி ஆற்றில் 8 சிவாலயங்களின் உற்சவர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    தைப்பூசத்தன்று கரூர் மாவட்டம் குளித்தலை, ராஜேந்திரம், அய்யர்மலை, கருப்பத்தூர், திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை, திருஈங்கோய்மலை, முசிறி, வெள்ளுர் ஆகிய 8 ஊர்களில் உள்ள சிவாலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள், அம்பாள் சுவாமிகள் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் எதிரே உள்ள கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூசத்தையொட்டி குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

    குளித்தலை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேசுவரர், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியார்சுனேசுவரர், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியார்சுனேசுவரர், அய்யர்மலை சுரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாசலேஸ்வரர், கருப்பத்தூர் சுகந்த குந்தாளம்மன் உடனுறை சிம்மபுரீஸ்வரர், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீசுவரர், வெள்ளுர் சிவகாமி உடனுறை திருக்காமேசுவரர் ஆகிய 8 கோவில்களின் சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    அதன் பின்னர் இந்த 8 கோவில்களின் உற்சவமூர்த்திகள் ஊர்வலமாக குளித்தலைக்கு கொண்டு வரப்பட்டனர். சாமிகள் வரும் வழியெங்கும் பொதுமக்கள் பூக்கள் வழங்கி வழிபட்டனர். கடம்பவனேசுவரர் கோவில் அருகே ஒவ்வொரு ஊர் சாமிக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டு அஸ்டமூர்த்திகள் சந்திப்பு நடைபெற்றது.

    அங்கிருந்து 8 ஊர் சாமிகள் கடம்பவனேசுவரர் கோவில் எதிரே உள்ள கடம்பந்துறை காவிரி கரைக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் மாலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காவிரி ஆற்றில் கூடியிருந்த பக்தர்கள் புனித நீராடி, பின்னர் தங்கள் விரதத்தை முடித்தனர்.

    இதையடுத்து சாமிகளுக்கென அமைக்கப்பட்டிருந்த பந்தலில் 8 ஊர் கோவில்களின் சோமாஸ்கந்தர் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 8 சிவாலயங்களின் சாமிகளை ஒரே இடத்தில் பார்த்ததால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) அந்தந்த கோவில்களுக்கு சாமிகள் ஊர்வலமாக புறப்பட்டு செல்லும். தீர்த்தவாரி நிகழ்ச்சியையொட்டி காவிரி ஆற்றங்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
    Next Story
    ×