search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை 31-ந்தேதி நடக்கிறது
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை 31-ந்தேதி நடக்கிறது

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தை நிறை புத்தரிசி பூஜை வருகிற 31-ந்தேதி நடக்கிறது.
    கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    அதே போல இந்த ஆண்டுக்கான தை நிறைபுத்தரிசி பூஜை வருகிற 31-ந் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக் கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின்ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலில் கொண்டு வந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    அதன் பிறகு அந்த நெல்மணிக் கதிர்கள் அங்கு இருந்து மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அதன்பிறகு அந்த நெல்மணிக் கதிர்களை பகவதிஅம்மன் முன் மூலஸ்தான மண்டபத்தில் படைத்து சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

    இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் ராதாகிருஷ்ணன்போற்றி, மணிகண்டன்போற்றி, விட்டல் போற்றி, பத்மநாபன்போற்றி, கீழ்சாந்திகள் சீனிவாசன்போற்றி, ராமகிருஷ்ணன்போற்றி, ஸ்ரீதர் போற்றி ஆகியோர் நடத்துகிறார்கள். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இந்த நெற்கதிர்களை தங்கள் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வைத்தால் இல்லத்தில் செல்வசெழிப்பு ஏற்படும் என்பதும் விளை நிலங்களில் அந்த நெல்மணிகளை தூவினால் அந்த ஆண்டு பயிர்கள் செழித்து வளரும் என்பதும் ஐதீகம் ஆகும்.

    நிறைபுத்தரிசி சிறப்பு வழிபாடுடன் கோவிலில் அதிகாலையில் நிர்மாலய பூஜை, விசுவரூப தரிசனம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மதியம் அன்னதானம், மாலையில் சாயராட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

    இதையொட்டி பகவதிஅம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் அன்புமணி, கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×