search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    12 ராசிகளில் நின்ற சூரிய தசை
    X

    12 ராசிகளில் நின்ற சூரிய தசை

    பன்னிரு ராசிகள் ஒவ்வொன்றிலும் சூரியன் நின்றிருந்து தசை நடத்தினால் அளிக்கவல்ல பலன்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
    பன்னிரு ராசிகள் ஒவ்வொன்றிலும் சூரியன் நின்றிருந்து தசை நடத்தினால் அளிக்கவல்ல பலன்களை காண்போம்.

    மேஷம் ராசியில் சூரியன் உச்சம் பெற்றிருந்து தசை நடத்துமானால் நற்பலன்களை அளிக்கும் மனத்தெளிவும் துணிச்சலும் உண்டாகும். எக்காரியங்களில் ஈடுபட்டாலும் வெற்றி உண்டாகும். அரசியல் ஈடுபாடு அல்லது அரசு தொடர்பான பணிகளில் மேன்மையும், வருமான அதிகரிப்பும் உண்டாகும். வேலை கிடைத்தல், புதிய தொழில் தொடங்குதல் கூடும். கால்நடை விவசாயத் துறையில் மேன்மையுண்டாகும். அத்துடன் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும். தந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருப்பதோடு அவரால் நன்மைகள் உண்டாகும். இருப்பினும் உற்றார் உறவினர்களுடன் சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு.

    ரிஷப ராசியில் இருந்து தசை நடத்தினால் செய்தொழிலில் மேன்மையும், வருமானமும் அதிகமாகும். பொன் பொருள் சேர்க்கையும் வீடு, நிலம், வாங்கவும் கூடும். இருப்பினும் தகப்பனார் இருப்பின் அவரது ஆரோக்கியத்திற்கு கேடாகும். அல்லது அவருடன் கருத்து வேற்றுமை கொண்டு பிரிய நேரும்.
    மிதுன ராசியில் சூரியன் இருந்து தசையும் நடைமுறைக்கு வருமானால, அறிவு தெளிவு பெறும். கல்வியில் ஆர்வமும், தேர்ச்சிப் பெறுதலும் கூடும். பட்டம் பதவி கிடைக்கும். கலைத்துறையில் ஈடுபாடும் அதனால் வருமானம் பெருகும். பொன், பொருள், வீடு, நிலம் போன்று அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புக் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.

    கடக ராசியில் நின்றிருந்து சூரிய தசை நடைமுறைக்கு வந்தால் சொந்த இடத்தை விட்டு வேறிடத்தில் வாசம் புரியக்கூடும். அரசு சார்பின் உதவியும் பணியும் கிடைக்கும். அரசியலில் ஈடுபாடு கொள்ளுதலும் தேர்தலில் வெற்றி பெற்று நகரமன்ற, சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினராக கூடும். பெரும் பதவி வகிக்கவும் வாய்ப்புண்டு. வருமானம் பெருகும். வண்டி வாகன வசதி ஏற்படும். வீடு நிலம் சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும்.

    சிம்ம ராசியில் சூரியன் ஆட்சியும் மூலதிரிகோண பலமும் பெறுகிறது,. இந்த ராசியில் சூரிய்ன நின்றிருந்து தசை நடக்குமானால் பொதுவாகவே சிறப்பான பலன்களையே அளிக்கும். கல்வியில் ஆர்வமும், தேர்ச்சியும் பட்டம் பதவி பெறுதலும் கூடும். அரசு சார்பான வேலை கிடைத்தல், பணி உயர்வு, வருமானம் அதிகரிப்பு இருக்கும். அரசியலில் ஈடுபாடு கொள்ளவும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று பதவி பெறவும் கூடும். வீடு, நிலம் சொத்து சம்பாதிக்கக் கூடும். கால்நடையால் நன்மையும் வாகன யோகமும் உண்டாகும். குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகையும் குதூகல சூழ்நிலையும் இருக்கும். தகப்பனார் இருப்பின் அவரின் ஆதரவும் அவரால் நன்மைகளும் உண்டாகும். தந்தை வழி சொத்து கிடைக்கவும் வாய்ப்பு கிட்டும்.

    சூரியன் சிம்ம ராசியில் முதல் 20 பாகை வரை மூலத்திரிகோண பலம் பெறுகிறது. இதர 10 பாகை வரை ஆட்சி பலன் பெறுகிறது. அந்நிலையில் சூரியன் ஆட்சி பலத்தில் அளிக்கவல்ல பலன்களை விட மூலத்திரிகோணத்தின் இருக்க நேரின் உயர்வான பலன்களையே தரும்.

    அடுத்து கன்னி ராசி. இந்த ராசி சூரியனின் ஆட்சி வீட்டுக்கு இரண்டாமிடம் இந்த இடத்தில் நின்று தசை நடத்த நேரிட்டால்-செய்தொழிலில் தடை உண்டாகும். வருமானம் குறையும். அல்லது தொழிலை விட்டே விலக நேரும். கடன் தொல்லைகள் உண்டாகும். பொன், பொருள் போன்றன நஷ்டமாகும். விவசாயம், கால்நடைகளால் கூட நற்பலன்கள் இருக்காது. குடும்பத்தில் சண்டைச் சச்சரவு மிகும். ஜாதகர் மன வேதனையோடு இருக்க நேரிடும். 



    சூரியன் துலாம் ராசியில் நீசமடைகிறது. அந்த ராசியில் நின்றிருந்து தசையும் நடைமுறைக்கு வருமாயின் தாய், தந்தை இருப்பின் அவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு உண்டாகும். அல்லது அவர்களை பிரிய நேரும். உடன் பிறந்தவர்களுடனும் சுமூக உறவு இருக்காது. தொழிலில் பின்னடைவும் வருமான இழப்பும் உண்டாகும். திருடர்களாலோ தீ விபத்தினாலோ பொருள்கள் நஷ்டமடையும் வண்டி வாகனங்களினால் விபத்துக்குள்ளாகவும் நேரும், பகைவர்களுடன் சண்டை சச்சரவு ஏற்படுதலும் அதனால் உடைமைக்கும் உடலுக்கும் சேதமுறுதலும் கூடும். வேலையில் தொந்தரவுகள் மிகுந்திருக்கும். வேலை பறிபோதலும் கூடும். மனத்தில் எப்போதும் பயம் குடிகொண்டிருக்கும் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நிலைகுலைய வைக்கும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படுதலும் மனவேதனையோடு வாழவும் கூடும். பிறரின் அவமதிப்புக்குள்ளாக நேரும்.

    சூரியன் விருச்சிக ராசியில் இருந்து தசை நடக்குமாயின் மனத்தில் துணிவு உண்டாகும். செய்தொழிலில் மாற்றம் ஏற்படவும் அதனால் வருமானம் அதிகரிப்பும் உண்டாகும். புதிதாக தொழில் தொடங்குதல், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைத்தல் கூடும். நினைக்கும் காரியங்கள் சுலபமாக முடியும். வருமானம் அதிகரிப்பும் பொன் பொருள் சேர்க்கையும் உண்டாகும். சொந்த இடத்தை விட்டு மலைப்பிரதேசங்களில் இடம் மாறக்கூடும். பந்தயங்கள் போன்ற ஈடுபாட்டில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.

    தனுசு ராசியில் இருந்து தசை, நடக்க நேரிட்டால் அரசு சார்பில்-உதவி கிடைக்கும். அரசியல் துறை ஆதாயமாக இருக்கும். முயற்சிப்பது யாவும் நிறைவேறும். தொழில் தொடங்குதல், தொழில் விருத்தி, வருமான பெருக்கம் உண்டாகும். ஆடை, ஆபரணம், வீடு, நிலம் போன்றன சேர்க்கை உண்டாகும். பதவியிலிருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படக்கூடும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை மிகும். கவுரவப்பட்டம் பெறுதல், வெகுமதி பெறுதல் கூடும்.

    மகர ராசியில் சூரியன் நின்று தசை நடத்துமாயின் ஜாதகரின் தகப்பனார் இருப்பின் அவரது ஆரோக்கியத்திற்கு கேடு உண்டாகும். தந்தை வழி உறவினர்களாலும் கஷ்டங்களே உண்டாகும். தொழிலில் பின்னடைவும் வருமான இழப்பும் உண்டாகும். விவசாயம் கால்நடைத் துறையில் கூட சரிவே ஏற்படும். வீடு, நிலம், சொத்து இருப்பின் வில்லங்கமும் வருமான இழப்பும் ஏற்படும். குடும்பத்தில் சுமூக உறவு இருக்காது. உற்றார் உறவினர்களுடன் சண்டை சச்சரவு பிரிவு உண்டாகும். மனைவி குழந்தைகளாலும் சங்கடங்களை மேற்கொள்ள நேரும்.

    கும்ப ராசியில் இருந்து தசை நடத்துமாயின் செய்தொழிலில் தேக்கம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில்-மனக்கசப்பும், அதனால் வேலை பறிபோகும் நிலையும் உண்டாகும். அரசு தொடர்பில் அச்சுறுத்தலும் அதனால் நஷ்டமும் உண்டாகும்.-பொருள் களவு போதல், தீ விபத்துக்குள்ளாதல், வண்டி வாகனங்களால் விபத்து போன்று அதிர்ச்சி தரும் சம்பவஙகள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும். விவசாயம் கால்நடைகளாலும் இழப்பே உண்டாகும். குடும்பத்தில் போராட்டம் மிகுந்து காணப்படும்.

    மீன ராசியில் நின்றிருந்து தசையும் நடைமுறைக்கு வருமானால் தொழிலில் மேன்மையும் வருமான பெருக்கமும் உண்டாகும். பணி உயர்வு கிடைக்கும். வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை இருக்கும். கரு உற்பத்தியாதலும் குழந்தை பெறுதலும் நேரும். புத்திரர் புத்திரிகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உற்றார் உறவினர்கள் வருதலும் அதனால் மகிழ்ச்சியான சூழ்நிலையும் இருக்கும்.
    Next Story
    ×