search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோபம் பொறாமையை போகியாக எரியுங்கள்
    X

    கோபம் பொறாமையை போகியாக எரியுங்கள்

    போகி என்றால் நமக்குள் அடைந்திருக்கும் தேவையில்லாத சுமைகளான கோபம், வெறுப்பு, பொறாமை, காழ்ப்பு என இவற்றை எல்லாம் எரித்திட வேண்டும்.
    இவ்வாண்டிற்கான பொங்கல் கொண்டாட்டத்தினை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். பொங்கல் என்றால் நாம் உண்ணும் உணவல்ல, பொங்கல் என்றால் நம் வாழ்க்கையே பொங்குவது. நம்வாழ்க்கை பொங்க அடிப்படை தேவை என்ன? ஒரு மனிதனுடைய உயிர் பொங்குவதற்கு என்ன தேவை?

    நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு அம்சம் உள்ளது. பழைய சுமைகளை தலை மீது நாம் சுமக்கிறோம். நேற்று நடந்து முடிந்த வி‌ஷயங்கள் கூட இன்று நமக்குள் நடந்து கொண்டே இருக்கின்றன. பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் கூட இன்று நம்மை பாதிக்கின்றன. இந்தச் சுமைகள் நம் மீது பெரியபாரமாகி நம் உயிரை வாட்டுகின்றன. இந்தச் சுமையுடன் நம்மால் பொங்கிப்பெருக முடியாது. இதனால் தான், பொங்கலின் முதலாவது நாள் போகித் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    போகி என்றால் நமக்குள் அடைந்திருக்கும் தேவையில்லாத சுமைகளை போக்குவது. நம் வீட்டுக்குள் சேர்ந்திருக்கின்ற பழையவை மட்டுமல்ல, அவற்றை எரித்தால் மட்டும் போதாது. நமக்குள் முடங்கியிருக்கும் தேவையில்லாத வி‌ஷயங்களையும் இந்த தினத்தில் நாம் எரித்திட வேண்டும்.

    நமக்குள் இருக்கும் தேவையில்லாதவை என்னென்ன? கோபம், வெறுப்பு, பொறாமை, மக்கள் மீது நாம் கொண்டிருக்கும் முன் முடிவுகள், காழ்ப்பு என இவற்றை எல்லாம் எரித்திட வேண்டும். இதுதான் போகி. தேவையில்லாதவற்றை எரித்து விட்டு வாழ்க்கையை கொண்டாட்டமாக நடத்திக் கொள்வதற்கு தேவையான அடிப்படைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதனைக் கொண்டு வந்தால்தான் நம் உயிர் பொங்கிப் பெருகிவாழ முடியும்.

    உயிர் பொங்கிப் பெருகுவது என்றால் என்ன?

    நாம் சாப்பிடுவதற்கு பொங்கல் வைத்தால், பாத்திரத்தில் அளவாக பதார்த்தங்கள் வைத்து, அதற்குள்ளேயே பொங்கும்படி சமைப்போம். ஆனால், இந்தப் பொங்கல் பெருவிழா தினத்தில் நாம் வைக்கும் பொங்கல், பொங்கி வழியும் படி செய்கிறோம். நம் வாழ்க்கைக் கூட இப்படி ஆக வேண்டும் என்பது தான் நம் நோக்கம். பொங்கி வளம் பெற வேண்டும்.

    இதற்கு முதல் படி, நமக்குள் தேங்கிக் கிடக்கும் பழையவற்றை வெளியே எடுத்து, அதனை போகித் திருநாளன்று எரித்து விட்டால், மறுநாள் நமக்குள்ளும் வெளியேயும் பொங்கல்.
    Next Story
    ×