search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    2018 புத்தாண்டு கிரிவலத்துடன் தொடங்குங்கள்
    X

    2018 புத்தாண்டு கிரிவலத்துடன் தொடங்குங்கள்

    2018ம் ஆண்டின் தொடக்கமே கிரிவலமாக அமைந்துள்ளது. இது எந்த ஆண்டின் தொடக்கத்துக்கும் கிடைக்காத மகிமையாகும். எனவே புத்தாண்டு தினத்தை கிரிவலத்துடன் தொடங்குங்கள்.
    இன்று 2018ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும், நம்மில் பலர் புதிய திட்டங்கள், புதிய சபதங்கள், புதிய இலக்குகளை மனதில் நினைத்துக் கொள்வது உண்டு.

    பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு தீய-தேவையற்ற பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் புத்தாண்டு தினத்தன்று நினைக்கும் அந்த ஆரம்ப சூரத்தனம் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து, பிறகு மறந்தும் போகும்.

    2018ஆம் ஆண்டையும் அப்படி ஒரு வழக்கமான, சராசரி ஆண்டாக நாம் கடைப்பிடிக்கக்கூடாது. அதிரடி மாற்றங்களை, நினைத்தபடி, திட்டமிட்டபடி தொடங்குவோம் என்று நாம் மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    உங்கள் மன உறுதிக்கு 2018ஆம் ஆண்டு மிக, மிக எளிதாக கைகொடுக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் 2018ஆம் ஆண்டானது முந்தைய ஆண்டுகளைப் போன்றது அல்ல. அது சற்று தனித்துவம் கொண்டது.

    திங்கட்கிழமை, தட்சிணாயனம், ஹேமந்தருது, வளர்பிறை, சதுர்த்தி திதி, சம நோக்கு கொண்ட மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்னம், சுப்பிரம் நாமயோகம், வணிசை நாம கரணம், நேத்திரம், சித்தயோகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் 2018 புத்தாண்டு பிறக்க உள்ளது.

    எண் ஜோதிடப்படி பார்த்தால், 2018 என்ற எண்ணை கூட்டினால் 11 வரும். இதில் ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் கூட்டுத்தொகை 2 வரும். இரண்டு என்பது சந்திரனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாகும்.

    இதன் மூலம் சந்திரன் ஆதிக்கம் நிறைந்த நல்ல நாளில், அதுவும் சந்திரனுக்குரிய திங்கட்கிழமை புத்தாண்டு மலர்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அது மட்டுமின்றி புத்தாண்டு தினத்தன்று காலை 10.53 மணிக்கு பவுர்ணமி திதி தொடங்குகிறது.

    பவுர்ணமியானது, மறுநாள் காலை (2-ந் தேதி) 9 மணி வரை உள்ளது. எனவே ஜனவரி 1-ந் தேதி இரவு திருவண்ணாமலை தலம் சென்று கிரிவல வழிபாட்டை மேற்கொள்ளலாம். 2018ம் ஆண்டின் தொடக்கமே கிரிவலமாக அமைந்துள்ளது. இது எந்த ஆண்டின் தொடக்கத்துக்கும் கிடைக்காத மகிமையாகும். எனவே புத்தாண்டு தினத்தை கிரிவலத்துடன் தொடங்குங்கள்.

    இந்த ஆண்டு முழுவதும் திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்து வழிபட்டால் மகத்தான வாழ்வைப் பெறலாம். ஒவ்வொரு மாத பவுர்ணமி கிரிவல வழிபாட்டுக்கும் ஒரு பலன் கிடைக்கும். அந்த வகையில் மார்கழி மாத கிரிவலத்துக்கு பகையை வெல்லும் ஆற்றல் உண்டு. இதை உறுதிப்படுத்த புராணத்தில் ஒரு கதை இடம் பெற்றுள்ளது.

    தாருகாவனத்தின் முனிவர்கள் தாங்கள் நடத்தும் யாகங்களால் நன்மைகள் பல அடைந்து ஆணவம் கொண்டிருந்தார்கள். இதனால் அவர்கள் மகேஸ்வரனை இழிவாகப் பேசினார்கள்.

    இந்த முனியவர்களுக்குப் பாடம் புகட்ட இறைவன் பிட்சாடனர் வடிவத்தில் வந்தார். முனிவர்களின் பத்தினிமார்கள் பரமேஸ்வரனின் அழகில் மயங்கி அவருடனே இருந்தார்கள். இதனால் கோபம் அடைந்த முனிவர்கள் மாபெரும் யாகம் ஒன்றைச் செய்து அதன் மூலம் கொடிய விலங்குகளை உண்டாக்கி சிவபெருமானை அழிக்க ஏற்பாடு செய்தனர்.

    தன்னைத் தாக்க வந்த புலியை அழித்து சிவபெருமான் அதன் தோலை ஆடையாக உடுத்திக் கொண்டார். அதை அடுத்து எதிர்த்து வந்த யானையைக் கொன்று அதன் தோலை மேலாடையாக அணிந்தார். இதன்பின் வந்த விஷப்பாம்புகளை அணிகளாகவும் பூதங்களைக் காவல் கணங்களாகவும் மாற்றி எதிர்த்துத் தாக்கிய அசுரன் முயலகனை வென்று வலக்காலால் மிதித்து ஜூவாலை மிகுந்த நெருப்பை இடக்கையில் ஏந்தினார். 

    மேலும் முனிவர்களின் கெட்ட மந்திரங்களை அவரது திருவடிகளில் சிலம்புகளாக அணிந்து உடுக்கையும், மானும் தன் கைகளில் பிடித்துக் கொண்டார். இப்படி முனிவர்கள் தன்னை அழிப்பதற்காக உண்டாக்கிய அனைத்தையும் தன்னை அலங்கரிக்கும் அழகுப் பொருளாக்கி பனி பொழியும் மார்கழி பவுர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய இரவில் ஆடிய சிவனின் தாண்டமே ஆனந்த தாண்டவமாகும்.

    எனவே மார்கழி பவுர்ணமியில் விரதம் இருந்து கிரிவலம் வந்து இறைவனுக்கு நடக்கும் ஆருத்ரா அபிஷேகத்தை கண்ணாரக் கண்டு தரிசனம் செய்தால் சகல நன்மைகளும் ஏற்படுவதுடன் நமக்கு எதிரிகளே இல்லாமல் போவார்கள். 
    Next Story
    ×