search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகத்துவம் நிறைந்த மார்கழி வழிபாடு
    X

    மகத்துவம் நிறைந்த மார்கழி வழிபாடு

    மார்கழி மாதத்தில் வாசலில் மிகப்பெரிய கோலங்கள் இடுவதும் அதில் வண்ண பொடி தூவுவதும், பூசணி பூவினை சாணம் வைத்து வைப்பதும் சம்பிரதாயமாக பின்பற்றப்படுகின்றது.
    மாதங்களில் மார்கழி அழகு. பகவான் கிருஷ்ணன் ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கூறியுள்ளார். அப்படியானால் அதன் புனிதமும், அழகும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒன்று. இந்த மாதத்தில் அனைத்து கோவில்களும் விடியற்காலையிலேயே இறைவழி பாட்டினை மேற்கொள்ளும்.

    மார்கழி என்றாலே ஆண்டாளின் திருப்பாவையும், நோன்பும் தான் முன் நிற்கும். குறிப்பாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் இந்த நோன்பினை கடைபிடிப்பர். ஆண்டாள் நோன்பிருந்து மகா விஷ்ணுவினை அடைந்தது போல் தாமும் நல்ல கணவனை பெற வேண்டி நோன்பு இருப்பர்.

    மாணிக்க வாசகர் சிவபிரானை போற்றி திருவெம்பாவை இயற்றி மார்கழி மாத விடியற்காலையில் பாடியுள்ளார்.

    அனைத்து நோன்பு முறைகளும் விடியற்காலையிலேயே நடைபெறும்.

    ஆண்கள் நாம சங்கீர்த்தனம் பாடி நகர் வலம் வருவர்.

    பெண்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிடுவர். விஞ்ஞான ரீதியாக மார்கழி மாதத்தில் ஆக்ஸிஜன் நிறைந்த ஓசோன் படிவம் பூமிக்கு மிக அருகில் இருக்கும் என்பதால் அனைவரும் நல்ல ஆக்ஸிஜன் பெற்று உடல் ஆரோக்கியம் அடைகின்றனர்.

    ஆக தெய்வங்களை ஆராதிப்பதற்கென்றே உள்ள மாதம் மார்கழி. மனிதர்களாகிய நம்மின் ஒரு வருட காலம் தேவ உலகின் ஒரு நாள் எனப்படுகின்றது. அதில் மார்கழி மாதம் விடியற்காலை பிரம்ம முகூர்த்தம் ஆகின்றது.

    இந்த காலம் வழிபாடு, தியானம் இவற்றுக்கு மட்டுமே உகந்த காலம் எனப்படுகின்றது. எனவே தான் இம்மாத மாலை நேரங்களில் இறை வழிபாட்டின் ஒரு பிரிவான பாட்டு, நடனம், கச்சேரிகள் நடைபெறுகின்றன.

    இந்த மாத காலத்தில்தான் ஸ்ரீரங்கம் கோவிலில் இராப் பத்து, பகல் பத்து விழாவாகி ஸ்ரீரங்க நாதர் வழிபாடு 21 நாட்கள் நடக்கின்றன. பாவை நோன்பு, வைகுந்த ஏகாதசி, ஸ்ரீஹனுமந்த் ஜெயந்தி, சிவபிரானின் ஆருத்ரா தரிசனம் என அனைத்து இறைவழிபாடு களும் நடைபெறுகின்றன.

    இம்மாதத்தில் அதிக தவம் இருப்பவர்களும் உண்டு. பிறப்பு, இறப்பு எனும் வாழ்க்கை சக்கரத்தில் இருந்து விடுபட இம்மாதத்தில் அநேகர் நீண்ட நேர தவத்தில் ஈடுபடுவர்.

    அதே போன்று வைகுந்த ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது அனைத்து ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்த பலனைத் தருகின்றது. வைகுந்த ஏகாதசி அன்று அரிசி உணவு எடுத்துக் கொள்ளாமல் பால், பழம் போன்று உண்ண வேண்டும். மறுநாள் காலை பெருமாள் கோவில் சொர்க்க வாசல் தரிசனம் செய்து பின் 21 காய்கறிகள் சேர்த்து சமைத்து பிறருக்கும் கொடுத்து உண்ண வேண்டும்.

    இம்மாதத்தில் திருவாதிரை அன்று சிவபெருமான் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். திருவெம்பாவை அனைத்து சிவன் கோவில்களிலும் பாடப்படும்.

    சபரி மலை விரதம், பூஜை, வழிபாடு இவை அனைத்தும் மார்கழி முழுவதுமே உள்ளன.

    இவ்வாறு நாம் மேற்கொள்ளும் வழிபாடுகளின் மூலம் மனிதன் பெறும் நன்மைகளை விஞ்ஞானம் ஆய்ந்து கூறும். கடவுளுக்கு நன்றி கூறி, வேண்டி வழிபடுவதன் மூலம்.

    * மனிதன் மன்னிக்கும் குணம் பெறுகின்றான்.

    * நோயின்றி நீண்ட காலம் வாழ்கின்றான்.

    * மனநோய் இன்றி இருக்கின்றான்.

    * முறையான பாதையில் வழி நடத்தப்படுகின்றான்.

    * சக்தி உடையவனாய் இருக்கின்றான்.

    * மகிழ்ச்சியாய் இருக்கின்றான்.

    * தெளிவான முடிவுகளை எடுக்கின்றான்.

    * வாய்ப்புகள் அவனுக்கு கதவுகளை திறக்கின்றன.

    * கவனச் சிதறல் ஏற்படுவதில்லை.

    * முழு தன்னம்பிக்கையோடு இருக்கின்றான்.

    * இறைவனுக்கு நன்றி கூறி வேண்டி வழிபடுங்கள். அதனை விட்டு வாழ்வில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு இறைவனே காரணம் என்று பேசாதீர்கள். இதனைத் தவிர்க்கத்தான் வழிபாட்டு முறைகள் பல மாதங்களிலும் எவ்வாறு ஆக்கப் பூர்வமாக செய்ய வேண்டும் என நடத்திக் காட்டப்படுகின்றது.



    மார்கழி என்று சொன்னாலே ஆண்டாளைப் பற்றி பேசாமல், நினைக்காமல் இருக்க முடியுமா? 12 ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படுபவள் ஆண்டாள். கி.மு. 2000 வருட காலத்தில் இவரது அவதாரம் நிகழ்ந்தது. ஆண்டாளின் பிறப்பிடம் ஸ்ரீவில்லிப்புத்தூர் துளசி தோட்டத்தில் பெரியாழ்வார் குழந்தையை கண்டு தானே வளர்த்தார். ஆன்மீக, தெய்வீக சூழலிலேயே ஆண்டாள் வளர்ந்தாள். 

    வேதங்களும், புராணங்களும், கிருஷ்ண பஜனைகளும், உபதேசங்களும் ஆண்டாளின் மூச்சில் கலந்தன. கிருஷ்ணனே நினைவு என கொண்டாள். அன்றாடம் பூமாலை கட்டி தான் போட்டு அழகு பார்த்து இறைவனுக்கு அணிவித்தாள். பெரியாழ்வார் தன் பெண்ணின் இச்செயலினைக் கண்டு பகவானுக்கு தவறு இழைத்து விட்டோமே எனக் கோபம் கொண்டார். 

    அன்றிரவு பெருமாள் பெரியாழ்வார் கனவில் தோன்றி ஆண்டாள் அணிந்த மாலையே தனக்குச் சிறப்பானது எனக்கூறி, பெரியாழ்வார் தன் பெண் சாதாரண மானிடப் பெண் அல்ல என்பதனை புரிந்து கொண்டார். அதுவரை கோதை என்று அழைக்கப்பட்டவள் பிறகு ஆண்டாள் என அழைக்கப்பட்டாள். இறைவனையே ஆள்பவள் என்று பொருள் படும். சூடிக் கொடுத்த சுடர்கொடி என்றும் அழைக்கப்பட்டாள். முறைப்படி ஆண்டாள் இறைவனை அடைய மார்கழி விரமமிருக்க அன்றைய மாபெரும் பெரியோர்கள் அறிவுறுத்தினர்.

    அதிகாலை தன் தோழியர்களுடன் ஆண்டாள் யமுனையில் நீராடி இறைவனை பூஜித்து ஆடி பாடினாள். திருப்பாவை, நாச்சியார், திருமொழி பாடல்கள் இன்று வரை மட்டுமல்ல என்றென்றும் நிலைத்து இருக்கக்கூடிய ஆண்டாள் பாடல்கள்.

    ரங்கநாதர் பெரியாழ்வாரின் கனவில் ஆண்டாளை மணமகளாய் அலங்கரித்து ஸ்ரீரங்கம் அழைத்து வரச் சொன்னார். அரசர் வல்லவதேவரின் கண்காணிப்பில் மிக அழகான பல்லக்கில் மேள தாள ஊர்வலங்களோடு ஆண்டாள் ஸ்ரீரங்கநாதர் சன்னதிக்கு அழைத்து வரப்பட்டாள். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் இருந்தனர்.

    ஸ்ரீரங்கநாதரின் சன்னதியில் இறைவனை வணங்கிய ஆண்டாள் ஒளியாய் ஸ்ரீ ரங்கநாதனுள் ஐக்கியமானாள்.

    எப்பேர்பட்ட பக்தி! எப்பேர்பட்ட அதிசயம்! ஆண்டாள் பக்திக்கு ஒரு மாபெரும் உதாரணம். ஆகவேதான் கன்னிப் பெண்கள் மார்கழி நோன்பு இருக்க அறிவுறுத்தப் படுகின்றனர். நோன்பு என்பது சாதாரண வி‌ஷயமல்ல. ஐம்புலன்களை அடக்கும் ஒரு தவம்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆண்டாளின் ஆடிப்பூரத் திருவிழா மிக விமரிசையாக 10 நாட்கள் கொண்டாடப்படும். அன்றைய தேரோட்டம் மிகப் பிரபல்யமானது. மிகப்பெரிய தேர் திருவாரூரிலும் அதற்கடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரிலும் உள்ளது. பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் 10 நாள்நடைபெறும். ஆனி மாதத்தில் பெரியாழ்வார் விழா 10 நாள் நடைபெறும். மார்கழி மாதம் என்றாலே அது ஆண்டாளை மையப்படுத்தி தானே. முதல் பகல் பத்து விழாவில் ஆண்டாளுக்கு அளிக்கப்படும் சீர்வரிசை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். வயதில் மிகக் குறைவாய் இருந்த பொழுதே மனித குலத்திற்கு அர்த்தமுள்ள வாழ்க்கை முறையினை கற்றுக் கொடுத்த தெய்வம் ஆண்டாள்.

    இந்த பக்தி வழிபாடு அபரிமிதமான சுயகட்டுப்பாட்டினைத் தரும். தெய்வத்தினை அடையச் செய்யும். தெய்வமாகவே மாற்றி விடும் என்று கூறுவதற்கு அன்றே முன் மாதிரி ஆண்டாள் தான்.

    அவரது பக்தி மார்க்கத்தினை அனைவரும் பின்பற்றி பயன் பெறுவோம்.

    மார்கழி மாதத்தில் வாசலில் மிகப்பெரிய கோலங்கள் இடுவதும் அதில் வண்ண பொடி தூவுவதும், பூசணி பூவினை சாணம் வைத்து வைப்பதும் சம்பிரதாயமாக பின்பற்றப்படுகின்றது. இது பார்க்க அத்தனை ரம்மியமாக பார்ப்போர் மனதிற்கு இருக்கும். உண்மை மங்களகரம். ஆனால் இதற்குள் நம் முன்னோர்கள் புதைத்து வைத்திருக்கும் விஞ்ஞான உண்மையினை பாருங்கள். அநேக புள்ளி வைத்த கோலங்கள் இந்த காலத்தில் (அ) எந்த பண்டிகை காலத்திலும் பார்க்க முடியும். 

    அத்தனை புள்ளி வைத்த தவறில்லாத கோலம் மிகப் பெரிய கணக்கு மனக் கணக்கு ஆற்றலினை வளர்த்து விடும். கோலங்களில் அதிக ஙீ, சீ போன்று நுனிகள் வளைந்த வட்ட வடிவில் காண முடியும். ஜியோமெட்ரி போன்ற இந்த தோற்றம் மூளையிலும், உடலிலும் மிக நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது என இன்று விஞ்ஞான ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மேலும் கோலம் போடுவது சில யோகாசன பயிற்சிகளை உட் கொண்டது. கோலம் இடும் பெண்களின் சிந்திக்கும் திறன் சிறப்பாக இருக்குமாம். நல்ல மனநிலையோடு இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பசும் சாணம் கிருமி நாசினி. சுத்தமான காற்றினை ஈர்க்க வல்லது. தேவையற்ற பூச்சிகளை வரவிடாது. முன் காலத்தில் கோயில்கள் கோலத்தில் பூசணிப் பூ வைத்து கிருஷ்ணனை வரவேற்றதாக ஐதீகம். அதுவே இன்றும் தொடரப்படுகின்றது.
    Next Story
    ×