search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குருப்பெயர்ச்சி: ஆடி 18 முதல் தேடி வரும் யோகம்
    X

    குருப்பெயர்ச்சி: ஆடி 18 முதல் தேடி வரும் யோகம்

    துன்முகி வருடம் ஆடிமாதம் 18-ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை காலை 9.27 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார்.
     (2-8-2016 முதல் 1-9-2017 வரை)

    துன்முகி வருடம் ஆடிமாதம் 18-ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை காலை 9.27 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். நவக்கிரகங்களில் சுப கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குருபகவான். அவரது அருள் நமக்கு எப்பொழுதும் தேவை. அதனால் தான் நமது சான்றோர்கள் ‘குருவருள் இருந்தால் தான் நமக்கு திருவருள்’ கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அப்படிப்பட்ட குருவின் பார்வையை பெறும் ராசிகள் மகரம், மீனம், ரிஷபம் ஆகியவையாகும். குரு தனாதிபதியாக விளங்கி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதன் மூலம், பணமழையில் நனைந்து பார்போற்றும் ராசியாக விளங்குவது விருச்சிகம். கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குருபார்வை தன ஸ்தானத்தில் பதியும் ராசிகள் தனுசு, கும்பம், மேஷம். மேற்கண்ட ராசிகள் அனைத்திலும் இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலன்களை அள்ளி வழங்கப்போகிறது. புதிய பாதை புலப்படும்! பொருள் வரவு பெருகும்! புகழ் கூடும்.

    மற்ற ராசிகளான மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் குரு பார்வை பதியும் இடங்களில் எல்லாம் நல்ல பலன்களைப் பெற்று ஆரோக்கியமான உடல்நிலையும், அனைவரும் பாராட்டும் வாழ்க்கையும் அமைத்துக் கொள்ள இயலும். மேலும் அந்த ராசிக்காரர்கள் யோகபலம் பெற்ற நாளில் குருவிற்குரிய வழிபாடுகளை முறையாகச் செய்து கொள்வதன் மூலம் முன்னேற்றத்தின் முதல் படிக்கு செல்ல இயலும்.

    இப்பொழுது கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் இடையில் வக்ரம் பெறுகிறார். பிறகு அதிசாரமாக துலாம் ராசிக்குச் செல்கிறார். மீண்டும் கன்னி ராசிக்கு வந்து பலன் கொடுக்கிறார். அடுத்த குருப்பெயர்ச்சி 2.9.2017-ல் நிகழ உள்ளது. அப்பொழுது தான் குருபகவான் முறையாக துலாம் ராசிக்குச் செல்கிறார்.

    இதற்கிடையில் 27.2.2017-ல் ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவுமாக அப்பொழுது மாற்றம் பெறுவார்கள். அதுவரை ராகு-கேதுக்களின் ஆதிக்கம் ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு அதிகமாக இருக்கின்றது. மேற்கண்ட ராசிக்காரர்கள் சுய ஜாதகத்திற்கு ஏற்ப அனுகூலம் தரும் ஸ்தலங்களில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வதன் மூலம் முன்னேற்றம் கூடுதலாகக் கிடைக்கும்.

    நமது வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமானதாகும். ஆணும், பெண்ணும் இணைந்து வாழத் தொடங்கும் திருமண உறவை குருபலம் இருந்தால் தான் ஏற்க முடியும். குருபகவான் பச்சைக் கொடி காட்டினால் தான் மணக்கோலம் காண முடியும். வெற்றிகரமான வாழ்க்கைக்கு ‘வியாழநோக்கம்’ தான் வேண்டும்.

    இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக ஆன்மிகம் தழைக்கும். அரசாங்கத்தால் மக்களுக்கு நன்மை கிடைக்கும். கன்னிராசியில் குரு வருவதால் குடங்களைச் சுமந்த பெண்கள் இனி மகுடங் களைச் சுமக்கப் போகிறார்கள். சாதம் படைத்த கைகள் வேதம் படைக்கப் போகின்றது. அம்மியில் அரைத்த கரங்கள் எல்லாம் இனி செம்மையாக அரசாளும் யோகத்தைப் பெறப் போகின்றன.

    எழுத்துத் துறை, பத்திரிகைத் துறை, ஜோதிடத் துறை, கலைத்துறை, இலக்கியத்துறை, சின்னத்திரை, வண்ணத்திரை, ஜவுளித்துறை, காகிதத் துறை ஆகிய அனைத்துத் துறைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் ஜாதகப்படி குரு இருக்கும் பாதசார பலம் அறிந்து அதற்குரிய ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து யோக பலம் பெற்ற நாளில் சிறப்புப் பரிகாரங்களைச் செய்வது நல்லது.

    கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குருவின் வக்ரகாலம்:

    16.1.2017-ல் குருபகவான் சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசிக்குச் செல்கின்றார். (அதிசாரம்)

    22.2.2017-ல் குரு துலாத்தில் வக்ரம் பெறுகின்றார்.

    அதிசாரம் முடிந்து மீண்டும் 10.3.2017-ல் குரு கன்னி ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கின்றார்.

    1.6.2017-ல் குரு வக்ர நிவர்த்தியாகிறார்.

    2.9.2017-ல் துலாம் ராசிக்கு குருப்பெயர்ச்சியாகிச் செல்கிறார்.

    வழிபாட்டு ஸ்தலங்கள்!

    உள்ளூரில் உள்ள சிவாலயத்தில் உள்ள குருவையும், குருபீடமாக விளங்கும் திருச்செந்தூர், சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம், மடப்புரம் தட்சிணாமூர்த்தி, குருவித்துறை, ஆலங்குடி, திட்டை ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள்.
    Next Story
    ×