search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரும்பாக்கம் உத்தானாச்சியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நடந்தபோது எடுத்த படம்.
    X
    அரும்பாக்கம் உத்தானாச்சியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நடந்தபோது எடுத்த படம்.

    ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையில் களை கட்டியது அம்மன் கோவில்கள்

    ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னையில் உள்ள அம்மன் கோவில்களில் கூழ்வார்த்தல் நடந்தது.
    இறை வழிப்பாட்டுக்கு முன்னோர்கள் வகுத்து தந்த மாதங்களில் ஆடி மாதம் மிக முக்கியமானது. பெண் தெய்வ வழிப்பாட்டை முன் எடுத்து செல்வதில் ஆடி மாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பக்தி பரவசமூட்டும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என ‘களை’ கட்டும். அதிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் வீடுகளில் கூழ் ஊற்றுதல் மிகவும் சிறப்புக்குரியது.

    நேற்று ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னையில் பல இடங்களில் கூழ்வார்த்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் திரளாக காணப்பட்டது. கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடந்தது. அதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.

    அரும்பாக்கம் உத்தானாச்சியம்மன் கோவிலில் நேற்று காலை அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு கூழ்வார்த்தலும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்து கூழ் வாங்கி சென்றனர்.

    இதேபோல், சென்னையில் பல கோவில்களில் கூழ்வார்த்தல் நடந்தது. இதனால் அம்மன் கோவில்கள் ‘களை’ கட்டியது. கோவில்களை தவிர பல இடங்களில் பொது மக்கள் தங்கள் வீடுகள் முன்பு கூழ்வார்த்து அதனை வழங்கிய காட்சிகளையும் பார்க்க முடிந்தது.

    ஆடி செவ்வாய்க்கிழமை மற்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டு இருக்கும். ஆகஸ்டு 2-ந்தேதி ஆடி பெருக்கு, அமாவாசை, ஆகஸ்டு 12-ந்தேதி வரலட்சுமி விரதமும் முக்கிய ஆடி மாத நிகழ்வாகும்.
    Next Story
    ×