search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலயம் - மயிலாடுதுறை
    X

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலயம் - மயிலாடுதுறை

    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்திருக்கும் இந்த தலத்தில் உள்ளது அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் சோழ நாட்டை ஆண்டு வந்த, சோழ மன்னரான மூன்றாம் குலோத்துங்கனின் பட்டப்பெயர் ‘ஜெயசிம்மகுல காலன்’ என்பதாகும். அந்த மன்னரின் பெயரைத் தாங்கி ‘ஜெயம்சிம்ம குல கால நல்லூர்’ என்ற பெயருடன் அழைக்கப்பட்ட ஒரு கிராமத்தின் பெயர், நாளடைவில் ‘ஜெயம்சிம்ம நல்லூர்’ என்றும், பின்னர் ‘ஜெயசிம்மன்’ என்றும் மருவி அழைக்கப்பட்டது. அந்த ஊர் தற்போது ‘கேசிங்கன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்திருக்கும் இந்த தலத்தில் உள்ளது அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலயம். இந்தக் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லாத நுழைவு வாசலைக் கடந்ததும், வெளிப் பிரகாரத்தில் நந்தியையும், பலி பீடத்தையும் காணலாம்.

    அதையடுத்து உள்ள அலங்கார மண்டபத்தைக் கடந்ததும் வரும் மகா மண்டபத்தில், அர்த்த மண்டபத்திற்குச் செல்லும் வாசலின் வலது புறம் சனிபகவானுக்கு தனி மண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலதுபுறம் இறைவி சவுந்திரநாயகி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அடுத்துள்ள அர்த்த மண்டபத்தைக் கடந்ததும் உள்ள கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

    மகாமண்டபத்தின் கீழ் திசையில் பைரவர், சூரியன், நாகர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. இறைவனின் கருவறை தேவக்கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி, மேல்புறம் மகாவிஷ்ணு, வடபுறம் துர்க்காதேவி ஆகியோர் வீற்றிருந்து அருள்புரிகின்றனர். பிரகாரத்தின் தென் திசையில் நால்வர் உள்ளனர். மேற்கில் பிள்ளையார், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, வடக்கில் சண்டி கேசுவரர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. தினசரி நான்கு கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.

    இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் சிறிய உருவமுடைய பிள்ளையார் ‘சின்ன பிள்ளையார்’ என பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

    பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், புத்தாண்டு பிறப்பு, கார்த்திகை, சோமவாரம் போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாத பவுர்ணமி அன்று இங்கு இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இங்குள்ள இறைவனையும் இறைவியையும் வழிபடுவதால், வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் உடனடியாக குணமாகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. மகாமண்டபத்தில் தனி மண்டபத்தில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கும் சனி பகவானுக்கு சனிக்கிழமைகளிலும், கிரக மாற்றம் ஏற்படும் நாட்களிலும் விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. சனிக்கிரக பாதிப்பு உள்ளவர்கள் இந்த சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வந்தால், சனிதோஷ பாதிப்பின் வீரியம் கணிசமாக குறையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பனந்தாளில் இருந்து மணல்மேடு பேருந்து தடத்தில் கடலங்குடியில் இருந்து தெற்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கேசிங்கன் என்ற திருத்தலம்.

    மல்லிகா சுந்தர்
    Next Story
    ×