search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிதைந்த நிலையில் சிவலிங்கம், கோவில் தோற்றம்
    X
    சிதைந்த நிலையில் சிவலிங்கம், கோவில் தோற்றம்

    எம பயம் நீக்கும் ஓமநல்லூர் பிரணவேஸ்வரர் கோவில்

    திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் தருவை என்னும் ஊருக்கு அருகே உள்ளது மேலஓமநல்லூா் பிரணவேஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு எந்த அளவுக்கு சிறப்பு மிக்கதோ, அதுபோலவே அதன் துணை நதிகளும் சிறப்பு பெற்றவை. சித்தாறும், கடனா நதியும், பச்சையாறும் பெருமை பல பெற்றவை. இவற்றுள் பச்சையாற்றை ‘சியமளா நதி’ என்று போற்றி புகழ்கிறார்கள். கங்கையே, சியமளா நதியாக ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

    திருநெல்வேலி தல புராணத்தில் மந்திரேசுரச் சருக்கம் என்னும் பகுதியில் பச்சையாற்று பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த நதி தோன்றும் முன்பு, இப்பகுதியில் இருந்த கந்தர்ப்ப நகரத்தில் பெரும் தவசியான ரேணு என்ற முனிவர், சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தார். ‘கங்கை தேவியே, தனக்கு மகளாக பிறக்க வேண்டும்’ என்ற வேண்டுதலோடு, அவர் சிவனை நோக்கி தவம் இருந்தார்.

    ஒரு முறை கயிலை மலையில் வீற்றிருந்த சிவபெருமானை நோக்கி வந்த கங்கை, அவரது ஆதரவு வேண்டி நின்றாள். பின்னர், தன்னை அவரோடு இணைத்துக் கொள்ளும்படி பிரார்த்தித்தாள். சிவபெருமானும், கங்கை மீது அன்பு கொண்டு அவளது வேண்டுகோளுக்கு தலையசைத்தார்.

    ஆனால் இதைக் கண்டு பார்வதி தேவி ஆவேசம் அடைந்தாள். தன் கணவனை, கங்கை அபகரித்து செல்வதா? என்று நினைத்தவள், “நீ பூலோகத்தில் மானிடராய் பிறப்பாய்” என்று கங்கைக்கு சாபம் கொடுத்தாள்.

    தெய்வ காரியங்கள் ஒவ்வொன்றும், காரண காரியத்துடனேயே நடைபெறுகின்றன. அது போலவே கங்கையின் மானிட பிறப்பும் ஒரு காரியமாகவே நடைபெற்றது.

    அதன்படி ரேணு முனிவர் தன்னிடம் வேண்டிக்கொண்ட வேண்டுதலை நிறைவேற்ற, கங்கையை பயன்படுத்திக் கொண்டார், சிவபெருமான். ஒரு நாள் ரேணு முனிவர் தனது தர்மபத்தினியுடன் துயிலும் போது, அவர்கள் இருவரின் நடுவே குழந்தையாக வந்து விழுந்தாள், கங்கை தேவி. அழகு மிளிரும் அந்தப் பெண் குழந்தையைக் கண்டு, ரேணு முனிவர் தம்பதியர் மகிழ்ச்சியில் திளைத்தனர். தங்களுக்கு மகளாக கிடைத்திருப்பது, சந்தேகமே இல்லாமல் கங்கை தாய்தான் என்று நினைத்து மகிழ்ந்த அந்த தம்பதியர், அந்தக் குழந்தையை அன்பொழுக வளர்த்து வந்தனர்.

    குழந்தைக்கு ‘ஆதிரை’ என்று பெயரிட்டனர். அந்தப் பெண் குழந்தை, பிறை நிலவு போல, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள். அவளுக்கு எட்டு வயதை எட்டியபோது, ஒரு சம்பவம் நடந்தது.

    களந்தை (தற்போதைய களக்காடு) பகுதியை தலைநகராகக் கொண்டு, ஒரு அரசன் ஆட்சி செய்து வந்தான். அவர் ஒரு முறை ரேணு முனிவரை சந்தித்தான். அப்போது அவரது கையில் ஒரு அழகிய பெண் குழந்தை இருப்பதைக் கண்டான். புத்திர பாக்கியம் இல்லாத அந்த அரசனுக்கு, ஆதிரையை பார்த்ததும் மிகவும் பிடித்துப் போயிற்று. அவன் முனிவரிடம், “எனக்கு தங்கள் மகளை, தத்து தந்து என் வாழ்வை முழுமை அடையச் செய்ய வேண்டும்” என்று வேண்டினான்.

    குழந்தை இல்லாத தவிப்பை ஏற்கனவே உணர்ந்திருந்த ரேணு முனிவர், அரசனின் கவலையை புரிந்து கொண்டார். அவனுக்கு தன்னுடைய மகளை தத்து கொடுக்க சம்மதித்தார். அரசனும், அரசியும் ஆதிரையை முறையாக தத்து பெற்று, அரச மாளிகைக்கு கொண்டு சென்று நல்ல முறையில் வளர்த்து வந்தனர். ஆதிரை பருவ மங்கை ஆனாள்.

    அவளது பிறப்பு சிவனுக்காகவே நிகழ்ந்தது அல்லவா? அதனால் அவள் அனுதினமும் சிவனையே வேண்டி நின்றாள். ஆதிரைக்கு அரசின் மீதோ, பொன், பொருள் மீதோ கொஞ்சமும் பற்று இல்லை. அவள் எப்போதும் தன் சிந்தனையால், சிவபெருமானையே பற்றிக் கொண்டிருந்தாள். தினமும் நறுமண மலர் கொண்டு சிவபெருமானை பூஜித்து வந்தாள். ஆயிரம் பூக்களைக் கொண்டு மாலை தொடுத்து, ஈசனுக்கு அணிவித்து வணங்கினாள்.

    அவளது வழிபாட்டால் மகிழ்ந்த ஈசன், அவளுக்கு காட்சி தர முடிவு செய்தார். ஒரு நன்னாளில் தேவர்கள் படைசூழ, அரம்பையர்கள் முன் ஆடி வர, ஆயிரம் கோடி சூரியர்கள் பிரகாசிப்பது போல், வெள்ளி ரிஷபத்தின் மேல் சிவபெருமான் தோன்றி, ஆதிரைக்கு காட்சி கொடுத்தார்.

    சிவபெருமானைக் கண்டதும், ஆதிரையின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்தது. ஈசனைத் துதித்தபடி ஆடிப்பாடி ஆனந்தப் பரவசமானாள். அதைக் கண்ட ஈசன், “ஆதிரையே உனக்கு என்மேல் இருக்கும் அன்பால் உன்னை அழைத்துச் செல்ல வந்தேன்” என்று கூறி அவளை மந்திரேசுரம் அழைத்து வந்து, அங்கே இருவரும் அன்பாய் வீற்றிருந்தனர்.

    இந்த நிலையில் மகளைக் காணாமல், பல இடங்களிலும் தேடினான், அரசன். அப்போது சிவபெருமான், அவளைக் கூட்டிச் சென்றது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த மன்னன், “சிவபெருமான் எனது மகளை முறைப்படி மணம் முடித்து அழைத்துச் சென்றிருக்க வேண்டும். எப்படி அபகரித்து செல்லலாம். என் மகளை என்னிடம் காட்டாவிட்டால், என் உயிரை விட்டு விடுவேன்” என்று, அதற்கான செயலில் ஈடுபட முயன்றான்.

    அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “மன்னா, பொருநை நதிக்கரை அருகே மந்திரேசுரத்தில் சிவன் ஆதிரையோடு வீற்றிருக்கிறார். நீ அங்கு சென்று யாகம் ஒன்று செய். உன் மகள் உனக்கு தெரிவாள்” என்றது அந்தக் குரல்.

    மன்னனும் அந்த இடத்திற்குச் சென்று, அங்கு மிகப்பெரிய யாகம் ஒன்றைச் செய்தான். அப்போது தூய ஓமகுண்டத்தில் இருந்து ஓங்கி ஒலித்த பிரணவ மந்திரத்தோடு விரிசடை பரமன், ஆதிரையுடன் தோன்றினார்.

    அரசன், அந்தக் காட்சியைக் கண்டு அசையாது நின்றான். பின்னர் இறைவனை துதித்து பல மந்திரங்களைச் சொல்லி, “இறைவா, ஆதிரையை என் முன்பு கரம் பிடியுங்கள்” என்று கேட்டுக் கொண்டான். இறைவனும் அப்படியே வரம் தந்தார்.

    அதன்படி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வானவர்களின் தச்சனான மயன் அங்கு தோன்றினான். அவர் அழகிய பிரமாண்ட ஆலயம் ஒன்றை அமைத்தான். திருமால், பிரம்மன், தேவர்கள் தங்குவதற்கான இடங்களையும் வடிவமைத்தான். குறிப்பிட்ட நாளில் திருமணம் நடந்தது. ஆதிரையின் கரத்தை, சிவபெருமானின் கையில் அரசனே பிடித்துக் கொடுத்தான்.

    எல்லாம் முடிந்து அனைவரும் விண்ணுலகம் செல்ல தயாரான நிலையிலும், அரசனால் தன்னுடைய மகளைப் பிரிய மனம் இல்லை. அவன் தேம்பி நின்றான். அதைக் கண்ட சிவபெருமான், ஆதிரையை பாதியாக பிரித்து ஒரு பாகத்தை தன் தலையில் வைத்துக் கொண்டார். மற்றொரு பாகத்தை அரசன் ஆட்சிக்குட்பட்ட வயிரமலையில் விட்டார். அங்கிருந்து புறப்பட்ட கங்கை, தாமிரபரணி நதியில் கலந்து, மந்திரேசுர ஆலயத்தின் அருகே வந்து சேர்ந்தது.

    ஆதிரை நதியாய் ஓடிய காரணத்தால் அந்த நதிக்கு ‘ஆத்திரா நதி’ என்று பெயர் வந்தது. இந்த நதியைத்தான் ‘பச்சை ஆறு’ என்றும் அழைக்கிறார்கள்.

    சிவனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடக்க தேவதச்சனால் கட்டப்பட்ட ஆலயம், திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் தருவை என்னும் ஊருக்கு அருகே உள்ள மேலஓமநல்லூா் என்ற இடத்தில் இருக்கிறது. இக்கோவிலில் தற்போதும் சித்தர்கள் வந்து சிவனை பூஜிப்பதாக நம்பப்படுகிறது.

    லட்சுமணன், இந்திரஜித்தை கொன்ற பாவத்தைப் போக்க இங்கு கருநாகமாக இருந்து சிவனை வழிபட்டு வருவதாக ஐதீகம். இங்குள்ள பனங்காட்டு கீற்றுகள் இசைக்கும் இசை பிரணவ மந்திரத்தை நினைவு படுத்துவதுபோல் இருக்கிறது.

    இந்த ஆலயத்தில் அகத்திய பெருமான், உரோமச மகரிஷி போன்றவர்கள் தங்கி யாகம் செய்து சிவனருள் பெற்றுள்ளனர். இத்தல இறைவனின் பெயர் ‘பிரணவேஸ்வரர்.’ அம்பாளின் திருநாமம் ‘செண்பகவல்லி.’ தற்போது உள்ள ஆலயத்தில் சிவலிங்கம், மேல் பகுதி சிதைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த நிலையிலேயே இறைவனுக்கு அபிஷேகம் அலங்காரம் அனைத்தும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    இந்த ஆலயத்தை 16 முறை வலம் வந்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால், வேண்டிய வரம் கிடைக்கும். மேலும் இந்த ஆலயம் எம பயம் நீக்கும் ஆலயமாகவும் திகழ்கிறது.

    மேலஓமநல்லூர் செல்ல திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் தருவை என்னும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆலயம் அமைந்த பகுதிக்குச் செல்ல ஆட்டோ வசதி இருக்கிறது.
    Next Story
    ×