search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறைகளை நீக்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில்
    X

    குறைகளை நீக்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில்

    விழுப்புரம் மாவட்டம் கூவாகம் என்ற இடத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், அரவான் பலியிடும் விழா சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
    மகா விஷ்ணு பல சமயங்களில் மோகினி அவதாரம் எடுத்திருப்பதை புராணங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அமிர்தத்தை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் வழங்குவதற்காக மோகினி அவதாரம் எடுத்தார். அதே போல் மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரவானை களப்பலியிடும் முன்பு, மோகினியாக அவனை மணம் செய்து கொண்டார் என்று புராணங்கள் சொல்கின்றன.

    மகாபாரதப் போரின்போது பாண்டவர்களின் வெற்றிக்காக சர்வ வல்லமை படைத்த ஒருவரைப் பலியிட முடிவு செய்யப்பட்டது. யாரும் உயிரை விட முன்வராத நிலையில், அர்ச்சுனனின் மகன் அரவான் ஒப்புக்கொண்டான். ஆனால் அதற்கு முன்பாக தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். ஆனால் ஒரே நாளில் இறப்பைத் தழுவப் போகிறவனுக்கு யார் தான் பெண் தர முன்வருவார்கள். எனவே மகாவிஷ்ணுவே, மோகினியாக அவதரித்து, அரவானை மணம் புரிந்தார்.

    மறுநாள் யுத்த களத்தில் அரவான் பலியிடப்பட்டான். கணவனை இழந்த மோகினி, விதவைக் கோலம் தரித்து கணவனின் இழப்பை நினைத்து கதறி அழுதார் என்பது வரலாறு.

    விழுப்புரம் மாவட்டம் கூவாகம் என்ற இடத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், அரவான் பலியிடும் விழா சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மகாவிஷ்ணுவின் அம்சமாக பாவிக்கப்படும் திருநங்கைகளின் திருவிழாவாகவும் இது திகழ்கிறது. இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள் இங்கு வந்து சேர்வார்கள். இந்த விழாவில் அரவானை, தங்களுடைய கணவனாக ஏற்றுக்கொண்டு திருநங்கைகள் திருமணம் செய்து கொள்வார்கள். மறுநாள் அதிகாலையில் அரவான் களப்பலி நடந்து, திருநங்கைகள் விதவைக் கோலம் பூணும் காட்சி நடத்தப்படும்.

    கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து, அரவானை வழிபாடு செய்தால் உடல் நோய்கள் குணமாகும். ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் பிணிகள் மறையும். திருநங்கை கள் தங்கள் வாழ்வில் அனைத்து வகையான பேறுகளும் பெற்று மகிழ்வார்கள். மரண பயம் விலகும் என்று சொல்லப்படுகிறது.

    சித்ரா பவுர்ணமி அன்று இந்த ஆலயத்தில் சித்திரை தேரோட்டம் நடைபெறும். அப்போது விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவான் மீது வீசி வணங்குவார்கள்.

    விழுப்புரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    Next Story
    ×