search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் படையெடுக்கும் அமர்நாத் பனிலிங்கம் கோவில்
    X

    பக்தர்கள் படையெடுக்கும் அமர்நாத் பனிலிங்கம் கோவில்

    இந்தியாவில் நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. அவற்றில் முதன்மை இடத்தில் இருக்கும் கோவில்களில் ஒன்று அமர்நாத் பனிலிங்கம் கோவில்.
    இந்தியாவில் நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. அவற்றில் முதன்மை இடத்தில் இருக்கும் கோவில்களில் ஒன்று அமர்நாத் பனிலிங்கம் கோவில். இந்த கோவில் காஷ்மீர் மாநிலத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது. காஷ்மீர் தலைநகரம் ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரத்து 756 அடி உயரத்தில் மலை உச்சி பகுதியில் கோவில் அமைந்துள்ளது. இது, மனிதனால் உருவாக்கப்பட்ட கோவில் அல்ல, இயற்கையாகவே உருவானது. கோவில் அமைந்துள்ள இடத்தில் மலை முகடு ஒன்றில் 130 அடி உயரத்துக்கு ராட்சத குகை ஒன்று உள்ளது. அதில், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் உள்பகுதியில் லிங்கம் போன்ற வடிவத்தில் பனிக்கட்டி உருவாகி விடுகிறது. இதையே பனிலிங்கம் என்று அழைக்கின்றனர்.

    குகையின் ஒரு பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டு கீழ்நோக்கி தண்ணீர் விழுகிறது. அதிக குளிர் ஏற்படும் நேரத்தில் இந்த தண்ணீர் கீழிருந்து மேலாக முற்றிலும் உறைந்து பனிக்கட்டியாக மாறி விடுகிறது. கீழ்பகுதியில் விரிந்து பின்னர் மேல் பகுதிக்கு செல்ல, செல்ல கொஞ்சம் குறுகியும், பனிக்கட்டி அமைகிறது. இதை பார்ப்பதற்கு அச்சு அசல் லிங்கம் போலவே இருக்கிறது.

    இந்த லிங்கம் 12 அடி உயரத்துக்கு உருவாகிறது. இதனை ஒட்டி இடப்பக்கத்தில் ஒரு பனி வடிவமும், வலது பக்கத்தில் 2 பனி வடிவங்களும் உருவாகின்றன. இடது பக்கத்தில் உருவாகும் பனி வடிவம் விநாயகர் என்றும், வலது பக்கத்தில் உருவாகும் 2 பனி வடிவங்கள் பார்வதி மற்றும் பைரவர் என்றும் நம்புகின்றனர்.
    இந்த பனி வடிவங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் உருவாகி பின்னர் தானாக உருகி விடுகிறது. அதாவது மே மாதம் வாக்கில் பனிலிங்கம் உருவாகி ஆகஸ்டு இறுதி வரை நீடிக்கிறது. பின்னர் உருகி விடுகிறது.

    பனிலிங்கம் உருவாகி இருக்கும் நேரத்தில் மட்டும் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபடும் பழக்கம் உள்ளது.  இவ்வாறு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் சுமார் 45 நாட்கள் வரை பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர்.

    இப்படி ஒரு பனிலிங்கம் குகைக்குள் இருப்பது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? என்ற விவரங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை. ஆனால், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பனிலிங்கம் இருந்ததாகவும், அந்த கால கட்டத்திலேயே வழிபாடு நடந்ததாகவும் நம்புகின்றனர். ரிக் வேதத்திலும் இந்த பனிலிங்கம் கோவில் தொடர்பான சில குறிப்புகள் இருக்கின்றன.

    11-ம் நூற்றாண்டில் அந்த பகுதியை ஆண்ட மன்னரின் மனைவி ராணி சூரியமதி திரிசூலத்தை தயாரித்து காணிக்கையாக வழங்கியதாக குறிப்பு உள்ளது. பரிகு முனி என்ற முனிவர்தான் இப்படி ஒரு பனிலிங்கம் இருந்ததை கண்டுபிடித்து கூறியதாகவும் இன்னொரு தகவல் சொல்கிறது. அந்த முனிவர் கோவிலை கண்டுபிடித்த கால கட்டத்தில் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து இருந்துள்ளது. பின்னர் அங்கிருந்த தண்ணீர் அனைத்தும் வற்றி குகை தென்பட்டது. அந்த குகையில் பனிலிங்கம் உருவாகி இருந்ததை அவர் கண்டதாகவும் கூறுகின்றனர்.

    இந்த பகுதியில் கடாரியா என்ற பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வேறு மாதிரி ஒரு கதை சொல்கின்றார்கள். ஒரு தடவை இந்த குகை அருகே புடா மாலிக் என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆடு மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு சாமியார் அவரிடம் நிலக்கரிகள் கொண்ட பொட்டலம் ஒன்றை கொடுத்தார்.

    அந்த பொட்டலத்தை தொழிலாளி பிரித்து பார்த்த போது, உள்ளே இருந்த நிலக் கரிகள் அனைத்தும் தங்கமாக மாறிவிட்டன. உடனே தொழிலாளி சாமியாரை திரும்பி பார்த்தார். ஆனால், சாமியார் மாயமாகி விட்டார். அவர் குகைக்குள் நுழைந்து மாயமாகியதாக கருதி அங்கு அவர் சென்று பார்த்தபோது, பனிலிங்கத்தை கண்டதாகவும் கூறுகின்றனர்.



    ஆடு மேய்க்கும் தொழிலாளி பனிலிங்கத்தை கண்டபிறகு அந்த பகுதி பழங்குடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் குகைக்கு புனித யாத்திரை சென்று பனிலிங்கத்தை வழிபட்டதாகவும் கூறுகிறார்கள். முகலாய மன்னர் அவுரங்கசீப் 1663-ம் ஆண்டு காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவருடன் பிரான்சு நாட்டை சேர்ந்த டாக்டர் பிரான்காய்ஸ் பெர்னியர் என்பவரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர், தனது பயண குறிப்புகளை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அதில், அவர் அமர்நாத் குகையை பார்த்ததாகவும் எழுதி இருக்கிறார்.

    இப்படி பல தகவல்கள் பனிலிங்கம் கோவிலை பற்றி இருந்தாலும், தெளிவான வரலாற்று குறிப்புகள் எதுவும் இல்லை. எனவே, எப்போது கோவில் கண்டுபிடிக்கப்பட்டது? பக்தர்கள் எந்த காலகட்டத்தில் இருந்து கோவிலுக்கு யாத்திரை செல்கிறார்கள் என்ற விவரம் சரியாக தெரியவில்லை. பல ஆண்டுக்கு முன்பெல்லாம் ஒவ்வொரு வருடமும் சில ஆயிரம் பேர் மட்டுமே யாத்திரை சென்று இருக்கிறார்கள். 1989-ம் ஆண்டுகூட 12 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே யாத்திரை சென்று இருக்கிறார்கள். ஆனால், இப்போது 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத்துக்கு செல்கிறார்கள்.

    இத்தனைக்கும் 45 நாட்கள் மட்டுமே யாத்திரை நடக்கிறது. ஆனாலும், பக்தர்கள் அளவுக்கு அதிகமாக குவிகின்றனர். அதிகபட்சமாக 2011-ம் ஆண்டு 6 லட்சத்து 34 ஆயிரம் பேர் யாத்திரை சென்றுள்ளனர். இத்தனைக்கும் இந்த கோவிலுக்கு செல்வது என்பது எளிதான காரியம் அல்ல. குறிப்பிட்ட தூரம் வரை மட்டும் தான் வாகனங் களில் செல்ல முடியும். அதன்பிறகு கால் நடையாக மட்டுமே கரடு முரடான மலை பாறைகளில் ஏறி கோவிலை சென்றடைய வேண்டும்.

    கோவிலுக்கு செல்வதற்கு 2 பாதை கள் உள்ளன. ஒரு பாதை பகல்காம் என்ற இடத்தில் தொடங்குகிறது. இந்த பாதையின் தூரம் 41 கிலோ மீட்டர். மற்றொரு பாதை பல்டால் என்ற இடத்தில் இருந்து தொடங்குகிறது. இதன் மொத்த தூரமே 14 கிலோ மீட்டர்தான். ஆனால், பல்டால் பாதை மிக ஆபத்தானது. உயர்ந்த மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும் ஏறி, இறங்கி செல்ல வேண்டும். மிகவும் திடகாத்திரமான நபர்களால் மட்டும்தான் இந்த பாதையில் பயணம் செய்ய முடியும்.

    பகல்காம் பாதையில் பெரும்பாலான பக்தர்கள் பயணம் செய்வார்கள். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து பகல்காம் வரை வருவதற்கு வாகன வசதி உள்ளது. இங்கு வந்ததும் கால்நடையாக செல்ல வேண்டும். குதிரைகளிலும் சவாரி செய் யலாம். ஹெலி காப்டர்களிலும் செல்ல வசதி உள்ளது. வழியில் ஆங்காங்கே தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தனியார்கள் கூடாரங்களை அமைத்து இருப்பார்கள். அவற்றுக்கு உரிய கட்டணம் செலுத்தி தங்கி கொள்ளலாம்.

    இந்த பகுதியில் மைனஸ் 5 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். அடிக்கடி மழையும் பெய்யும். உயரமான இடங்களை கடந்து பயணம் செய்ய வேண்டும். இதையெல்லாம் தாங்கக்கூடிய உடல்திறன் கொண்டவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

    Next Story
    ×