search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் அழகிய முருகன் கோவில்
    X

    பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் அழகிய முருகன் கோவில்

    துறையூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது அழகிய முருகன் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    துறையூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது அழகிய முருகன் ஆலயம். இந்த ஆலயத்தின் பெயர் ‘சுயம்பு கோலோச்சும் முருகன் கோவில்’ என்பதாகும். ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. அழகிய முகப்புடன் கூடிய நுழைவுவாசல். அடுத்துள்ள மகா மண்டபத்தை அடுத்து விலாசமான அர்த்த மண்டபம் உள்ளது.

    அதை அடுத்த கருவறையில், இறைவன் கோலோச்சும் முருகன் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகனுக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் வேலையும் கொடியையும் தாங்கி நிற்கும் முருகனின் கீழ் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளை காட்டுகின்றன. முருகன் தனது வலது புறம் சக்தி சூரியனுடனும் இடது புறம் பக்தி சண்டிகேஸ்வரருடனும் கட்சி தருகிறார். தவிர முருகனுக்கு முன் அவரது தந்தை சிவபெருமானும், தாய் பார்வதியும், சகோதரர் வலம்புரி விநாயகரும் அமர்ந்துள்ளனர்.

    தனது குடும்ப சகிதமாய் பக்தர்களுக்கு முருகப் பெருமான் கோலோச்சும் அமைப்பு மிகவும் சிறப்பானது என்பதுடன் எங்கும் காண இயலாது என்கின்றனர் பக்தர்கள். முருகப்பெருமானின் கோஷ்டத்தில் அறுபடை வீடுகளும் மிக அழகாக வண்ணத்தில், சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. தவிர கருவறையின் முன் மயில், குதிரை, நந்தி, மூஞ்சுறு, பலி பீடம் ஆகியவையும் காணப்படுகின்றன. ஆலயத்தின் திருச்சுற்றில் தெற்கில் விநாயகர், வலம்புரி விநாயகர், ராகு-கேதுவும், மேற்கில் உற்சவ மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தின் வலது புறம் கொல்லிமலை அருள்வாக்கு சித்தர் ஜானகிராம் சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. இந்த ஆலயத்தை கட்டியவரும் இவர் தான்.

    இந்த ஆலயத்திற்கு மேலே ஒரு தளம் உள்ளது. இறைவனின் கருவறைக்கு மேலே கோபுர கலசம் உள்ளது. இது முற்றிலும் தண்ணீரால் நிரம்பியிருக்கிறது. கருவறையில் மூன்று ஷவர் பைப்புகள் உள்ளன. முருகனுக்கும், சண்டிகேஸ்வரருக்கும், சூரியனுக்கும் காலையில் அபிஷேகம் செய்யும் முன், இந்த ஷவரை திறந்து விடுவார்கள். தலை மேல் உள்ள ஷவரில் இருந்து தண்ணீர் பூப் பூவாய் பொழிய, முருகன் ஷவரில் நீராடுவது போன்ற அந்த நிகழ்வு, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அற்புத அமைப்பு வேறு எங்கும் உள்ளதா? என்பது சந்தேகமே!

    கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை தினத்தன்று, ஆலயம் முன்பு பிரமாண்டமான முறையில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் விழா, பக்தர்கள் முன்னிலையில் ஒளிமயமாக நடைபெறும். கந்தசஷ்டியின் போது ஆலயத்தின் முன், முருகன் வேல் வாங்கி சூரனை சம்ஹாரம் செய்யும் போது கருவறை முருகன் முகத்தில் வெள்ளி பணித் துளிகளாய் வியர்வை துளிகள் காணப்படுவது நம்மை சிலிர்க்க வைக்கும் அதிசயமாகும்.

    இந்த ஆலயம் செவி (காது) வடிவத்தில் இருப்பதால், பக்தர்களின் அனைத்து விதமான பிரார்த்தனையையும், தன்னுடைய காதில் ஏற்று முருகப்பெருமான் அவற்றை நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    தினசரி மூன்று கால ஆராதனை நடக்கும் இந்த ஆலயத்தின் தல விருட்சம், நாவல் மற்றும் வன்னி மரமாகும். இந்த ஆலயத்தில் வழிபடும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், இட்லி, உப்புமா, தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் என தினசரி விதம் விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

    கால பைரவர், குடும்ப சகிதமாக முருகப்பெருமான்

    ஆலயத்தின் வடக்குப் பகுதியில், பைரவரின் தனிச் சன்னிதி உள்ளது. இந்த கால பைரவருக்கு ‘கலியுக குபேர காலச் சக்கர பைரவர்’ என்று பெயர். இந்த பைரவர் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக மலை குகை உள்ளே இருந்தார். இவரது அடி பீடத்தில் 6,646 ஸ்ரீசக்கரங்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

    கோவிலின் மேல் தளத்தில் குமார குரு பகவானின் சன்னிதி உள்ளது. இங்கு முருகப்பெருமானே குமார குருவாக அருள்பாலிக்கிறார். குருப்பெயர்ச்சியின் போது ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். அன்றைய தினம் 5008 பால்குடம் சுமந்தும், 1000 காவடி சுமந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு வருவது பரவசத்தை கொடுக்கும் நிகழ்வாகும். அன்றைய தினம் ஆலயத்தில் மட்டுமின்றி, நகரில் உள்ள பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்படும்.

    இங்கு குருஷேத்திர சனி பகவானாக காட்சி தரும், சனீஸ்வரர், ஆலயத்தின் மேல் தளத்தில் தனிச் சன்னிதியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். வேறு எந்த ஆலயத்திலும் சனி பகவான் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. ஏழரைச் சனி, ஜென்ம சனி, கண்டகச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சனீஸ்வரரை வழிபாடு செய்தால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    மேல் தளத்தில் குபேர மூலையில் குபேர காளி, வடக்கு நோக்கி அருள்புரிகிறார். ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும், காலை வேளையில் இந்த குபேர காளிக்கு விசேஷ அபிஷேக ஆராதைனகள் நடைபெறும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ஆலயத்தில் முருகப்பெருமானின் முக்கிய திருவிழாவான தைப்பூசம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    நினைத்ததை நடத்தி தந்து அருள்புரியும், கோலோச்சும் முருகப்பெருமானை, நாமும் ஒரு முறை தரிசித்து வரலாமே!

    திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது கோலோச்சும் முருகன் ஆலயம்.

    தத்து கொடுக்கும் நிகழ்வு


    இந்த ஆலயத்தில் புதுமையான சம்பிரதாயம் ஒன்று உள்ளது, ‘தத்து கொடுக்கும் நிகழ்வு. தீராத வியாதி களால் அவதிப்படுபவர்கள், இந்த ஆலயத்தில் உள்ள முருகன் சன்னிதிக்கு வந்து, இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து, மாலை சாத்தி, புதிய வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள். பின்னர் தங்களின் நோய் தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, தன்னைத் தானே முருகப்பெருமானுக்கு தத்துக் கொடுத்து விடுவார்கள். அதன்பிறகு அந்த நபர் தன்னுடைய பழைய உடைகளை தானம் அளித்து விட்டு, புதிய உடை அணிந்து 10 பேருக்கு அன்னதானம் அளிக்கிறார்.

    அன்னதான நிகழ்வு முடிந்ததும், மூன்று பெயர்களை எழுதி, குலுக்கிப் போட்டு அதில் ஒன்றை எடுத்து, தன்னுடைய பெயராக சூட்டிக்கொண்டு இல்லம் திரும்புவார். அப்படி அந்த தத்துக் கொடுக்கும் நிகழ்வைச் செய்யும் நபருக்கு, அவரது நோய்களும், வந்த இன்னல்களும் அகல்வது கண்கூடான உண்மை என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள்.
    Next Story
    ×