search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேண்டுதல்களை நிறைவேற்றும் அழகு முத்தையனார் கோவில்
    X

    வேண்டுதல்களை நிறைவேற்றும் அழகு முத்தையனார் கோவில்

    கடலூரை அடுத்த தென்னம்பாக்கம் கிராமத்தில் உள்ளது ‘அழகு முத்தையனார் கோவில்’. இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கோவில்’. வேண்டிய வரங்களை அருளும் அழகு முத்தையனாரை, திங்கட்கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும். கம்பீரமான கலைநயமிக்க கோபுரங்களுக்கு மாறாக, இந்தக் கோவிலில் பல வண்ணங்களால் ஆன சிலைகள் கைகூப்பி பக்தர்களை வரவேற்பது தனிச் சிறப்பு.

    தல வரலாறு :

    சுமார் 366 ஆண்டுகளுக்கு முன்பு அய்யனார் எனும் குழந்தையை, ஒரு முனிவர் வளர்த்து வந்தார். சிவனும், விஷ்ணுவும் தான், முனிவரிடம் அய்யனாரை வளர்ப்பதற்காக ஒப்படைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த அய்யனார் குழந்தை பருவத்தில் ‘அழகர்’ என்று அழைக்கப்பட்டார். அய்யனார் வளர்ந்த பகுதி தான் தென்னம்பாக்கம். முனிவரும் அய்யனாரை திறம்பட, மாவீரனாக வளர்த்து வந்தார். முனிவருக்கு பூரணி, புஷ்கலை (பொற்கலை) என்னும் 2 மகள்கள் இருந்தனர்.

    அப்போது ஒரு மந்திரவாதி மந்திரக்கட்டு என்னும் வித்தை மூலம், அந்தப் பகுதியின் சுற்றுப்புறத்தில் இருந்து சில சிற்றரசர்களை சிறை பிடித்து வசப்படுத்தி வைத்திருந்தான். அவனது மந்திர வித்தை மக்களுக்கு துன்பத்தை அளித்து வந்தது. இதனால் மக்கள் முனிவரிடம் முறையிட்டனர். அவர் அய்யனாரை அழைத்து “மந்திரவாதியை அடக்கி மக்களை காப்பற்று” என்றார். இதையடுத்து அய்யனார், அந்த மந்திரவாதியை அழித்து சிறையில் இருந்த சிற்றரசர்களை மீட்டார். இதனால் ஊர் மக்களுக்கு பயம் நீங்கியது.

    அய்யனாரின் வீரத்தை பார்த்து வியந்த முனிவர், அவரிடம் “உனக்கு என்ன பரிசு வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு பூரணி, புஷ்கலை ஆகியோரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறும், என்னைவிட பலசாலியான, வயதில் பெரியவரான ஒருவரை எனக்கு காவலாளியாக நியமிக்க வேண்டும் என்று அய்யனார் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு சம்மதம் தெரிவித்த முனிவர், அய்யனாரிடம் “என் மகள்கள் இருவரது கண்களிலும் கண்ணீர் வரக்கூடாது” என்று நிபந்தனை விதித்தார். இதை அய்யனாரும் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அய்யனாருக்கு முனிவர் தனது 2 மகள்களையும் திருமணம் செய்து வைத்து, வீரபத்திரரை காவலாளியாக நியமித்தார்.

    பின்னாளில் ஒரு சமயம், முனிவரின் ஒரு மகள் தலைமுடியை விரித்து உலர வைத்துக் கொண்டிருந்தார். இதனை தூரத்தில் இருந்து முனிவர் பார்த்தபோது, தனது மகள் அழுவது போல தெரிந்தது. தனது மகள் அழுவதால் கோபம் கொண்ட முனிவர், அய்யனாருக்கு அடுத்த பிறவியில் பிரம்மச்சாரியாக பிறக்க சாபம் விட்டார். அதன்படி, அவர் மணிகண்டனாக (ஐயப்பன்) பிறந்தார் என்று இந்த ஆலயத்தில் தல வரலாறு கூறுகிறது.



    ஆலய அமைப்பு :

    இக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் பெரிய அளவில் யானை, குதிரை சிலைகள் உள்ளன. இதைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் பூரணி அம்மாள், பொற்கலை அம்பாள் சமேத அழகு முத்தையனார் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மேலும், அய்யனாரின் வலப்புறம் வீரபத்திரர் காட்சி அளிக்கிறார்.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அய்யனாருக்கு, சிலை வைத்து நேர்த்திக்கடன் செய்வது மரபாக இருந்து வருகிறது. அதாவது இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குழந்தை பாக்கியம், வீடு கட்டுதல், கார் வாங்குதல், கை, கால் போன்ற உடல்பகுதி பாதிப்புகள் சீராகுதல் போன்ற குறைகளை நிறைவேற்றித் தரக் கோரி, அழகுமுத்து அய்யனாரிடம் வேண்டுகிறார்கள். அப்படி வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதும், அந்த வேண்டுதலுக்கு ஏற்ப சிலைகளைச் செய்து கோவிலில் வைத்து வழிபட்டு செல்கிறார்கள். இங்குள்ள சிலைகளே, இங்கு வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதற்கு சான்றாக காட்சி தந்து கொண்டிருக்கின்றன.

    அழகு முத்து அய்யனார் சன்னிதிக்கு பின்புறம், அழகர் சித்தருக்கு தனி சன்னிதி உள்ளது. இந்த கோவிலின் பின்புறமும் அழகர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இவர் இங்குள்ள கிணற்றுக்குள் ஜீவசமாதி அடைந்தார். அந்த கிணற்றை மூடி ஜீவசமாதியாக பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    சித்தரின் சமாதி அருகே விநாயகர் சிலை உள்ளது. முத்தையனார் கோவிலின் பின்பக்கம் உள்ள இந்த ஜீவசமாதியை தரிசித்து வேண்டினால் முத்தையனாரின் அருளோடு அழகர் சித்தரும் அருள்புரிவார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. ஜலத்தில் (நீர்) சித்தர் சமாதியான இடம் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் சுந்தரேஸ்வரர், நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன.

    வருடந்தோறும் சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமை அன்று சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாணம் விழா நடைபெறுவது வழக்கம். அன்று 108 நாதஸ்வரம், தவில் கலைஞர்களின் இசைநிகழ்ச்சியுடன் அழகு முத்து அய்யனாருக்கும், பூரணி- பொற்கலை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதில் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பக்தர்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.

    பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை ஒரு காகிதத்தில் எழுதி அதை மடித்து முத்தையனாரின் கையில் உள்ள அரிவாளில் கட்டி வழிபாடு செய்வது வழக்கம். அதில் உள்ள கோரிக்கைகளை முத்தையனார் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.

    சிலைகள் சொல்லும் கதை :

    ஒவ்வொரு கோவிலும் கலைநயமிக்க கோபுரங்களில் உள்ள சிலைகளும், கோவில் சுவர்களில் உள்ள பல ஓவியங்களும் புராண கதைகளை விளக்கும். ஆனால் அழகு முத்தையனார் கோவிலில், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிமெண்டு சிலைகள் உள்ளன. டாக்டர், வக்கீல், போலீஸ், திருமண ஜோடிகள், வீடு, கார் போன்ற பலவிதமான சிலைகள் அவை. ஒவ்வொரு சிலையும் ஒரு பக்தரின் கோரிக்கை நிறைவேறியதற்கு சான்றாக அமைந்து, அந்த பக்தரின் கதையை சொல்லியபடி ஆலயத்தின் ஒரு பகுதியில் நிரம்பியிருக்கிறது.

    அமைவிடம் :

    கடலூரில் இருந்து தூக்கணாம்பாக்கம் வழியாகவும், புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் தென்னம்பாக்கம் அழகுமுத்தையனார் கோவிலுக்குச் செல்லலாம்.
    Next Story
    ×