search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆதி லட்சுமி வராகப் பெருமாள் திருக்கோவில் - ராமநாதபுரம்
    X

    ஆதி லட்சுமி வராகப் பெருமாள் திருக்கோவில் - ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் மாறந்தை என்னும் கிராமத்தில் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் மாறந்தை என்னும் கிராமத்தில் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இது 108 திவ்யதேச ஆலயங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் ஆலயத்தின் துணைக் கோவிலாகும். ஆலயத் தில் 9 அடி ராஜகோபுரம் மிகவும் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து செல்கையில் தெற்கு திசையில் விநாயகர் சன்னிதி உள்ளது. இதையடுத்து ஈசான மூலையில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது. தொடர்ந்து பலிபீடம் காணப்படுகிறது.

    அடுத்ததாக கருவறை மண்டபம். இதன் மத்தியில் பெருமாளை வணங்கியபடி கருட பகவான் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். கருவறை மண்டபத்தின் தெற்கு திசையில் ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இவர் நின்ற கோலத்தில் கதாயுதத்தை கையில் தாங்கியவாறு உள்ளார். பக்தர்கள் தங்கள் மனக்குறை விலக, இந்த ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகிறார்கள்.

    ஆஞ்சநேயரைக் கடந்ததும், பெருமாள் சன்னிதியைக் காணலாம். கருவறையில் வராக மூர்த்தியாய் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறார். இரண்டு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடனும், வலது காலை தொங்க விட்டு, மடியில் தாயாரை வைத்தபடி அமர்ந்த கோலத்தில் அற்புத தரிசனம் அது. தாயாரின் ஆனந்த அமர்ந்த கோலம் மற்றும் சவுந்தரியமான பார்வை சேவிக்கும் பொழுது, நம்முள் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

    ஆலயத்தில் அருளும் தாயாரின் திருநாமம் ஆதி லட்சுமி. தாயார் பெருமாளிடம் ஒன்றியே சேவை சாதிப்பதால் அவருக்கென்று தனிச் சன்னிதி இல்லை. பெருமாள், கல்யாண குணம் கொண்டவராக இந்த ஆலயத்தில் திகழ்கிறார். பெருமாளுக்கு வலது புறத்தில் சக்கரத்தாழ்வார் அருள்கிறார்.

    ஆலயத்தின் தல விருட்சம் வில்வ மரமாகும். இந்தக் கோவிலில் முக்கியமான 2 பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. ஒன்று காலசர்ப்ப தோஷம் நிவர்த்தி, மற்றொன்று திருமணம் கைகூட பெருமாள் மற்றும் தாயாருக்கு மாலை சமர்ப்பித்தல். காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டி தோஷ நிவர்த்தியடைகின்றனர். திருமணம் கைகூட வேண்டுபவர்கள், இரண்டு மாலைகளுடன் திருக்கோவிலுக்கு வர வேண்டும். அந்த மாலைகள் பெருமாள் மற்றும் தாயாரிடம் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து ஒரு மாலையைத் திருப்பித் தரப்படும். அதை பத்திரமாக வீட்டில் வைக்க வேண்டும். இந்த பிரார்த் தனையை தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் மேற்கொள்ள வேண்டும். முடிவில் ஆனந்தமான செய்தி உங்களை வந்தடையும்.

    புரட்டாசி மாதம் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் பெருமாளுக்கு அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் வரும் மூல நட்சத்திரத்தன்று வடைமாலை சாத்தப்படுகிறது. ஆவணி மாத மூலமும், அனுமன் ஜெயந்தியும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்- சாயல்குடி இடையில் கடலாடி அமைந்துள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
    Next Story
    ×