search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆலயத்தின் முகப்புத் தோற்றம்
    X
    ஆலயத்தின் முகப்புத் தோற்றம்

    சின்ன வேடம்பட்டி தண்டபாணித் திருக்கோவில்

    இறைவனைத் தொட்டு வணங்க பக்தர்கள் அனுமதிக்கப்படும் ஆலயம், தமிழில் மட்டுமே அர்ச்சனை வழிபாடு செய்யப்படும் திருத்தலம், என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சின்ன வேடம்பட்டி தண்டபாணித் திருக்கோவில்.
    ஆறு வகை சமயங்கள் சங்கமிக்கும் திருக்கோவில், இறைவனைத் தொட்டு வணங்க பக்தர்கள் அனுமதிக்கப்படும் ஆலயம், தமிழில் மட்டுமே அர்ச்சனை வழிபாடு செய்யப்படும் திருத்தலம், தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு தனி சன்னிதி கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சின்ன வேடம்பட்டி தண்டபாணித் திருக்கோவில்.

    கி.பி. 1908-ம் ஆண்டில் கவுமார மடாலயத்தின் நிறுவனரான ராமானந்த சுவாமிகளால் விநாயகருக்கும், தண்டபாணிக்கும் தனித்தனி சிறு கோவில்கள், செங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டன. இதன்பின் கஜபூஜை சுந்தர சுவாமிகளால், இந்த ஆலயம் கருங்கல் திருப்பணியாக மாற்றப்பட்டது.

    கிழக்கு நோக்கிய நிலையில் ஆலயம் திகழ்கிறது. கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியோர் அபிநாசியப்பருக்கு முன்பாக உள்ளன. உள்ளே நுழைந்ததும், மயில் வாகனத்தை நோக்கியபடி, மூலவர் தண்டபாணி நின்ற கோலத்தில் அருளாசி வழங்குகின்றார். மூலஸ்தான விமானம், தஞ்சாவூர் ராஜராஜேஸ்வரம் கோவிலைப் போன்ற அமைப்பில் உள்ளது.

    கவுமார சாஸ்த்திரத்தில் கூறியுள்ளபடி, தண்டபாணி சன்னிதி நடுநாயகமாக விளங்குகின்றது. இவரை மையமாக வைத்து, சித்தி மகோற்கட விநாயகர் சன்னிதி, மேற்கு நோக்கிய அவிநாசியப்பர் சன்னிதி அமைந்துள்ளன. அருகே வைணவத்தை போற்றும் விதமாக பாண்டுரங்கர் சன்னிதியும் இருக்கிறது. அடுத்ததாக பைரவர் சன்னிதி, வடகிழக்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கே அனுமன் சன்னிதி உள்ளன.

    திருவள்ளுவருக்கும் தனிச் சன்னிதி இங்கு உள்ளது. இதேபோல அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், ராமானந்த சுவாமிகள், கந்த சுவாமிகள், சுந்தரசுவாமிகள், திருமுருக கிருபானந்த சுவாமிகள் ஆகியோரின் திருவுருவச் சிலை வடிவங்களும் காணப்படுகின்றன. கவுமார மடாலயத்தின் வளாகத்தில் பதினாயிரம் சதுர அடியில் அமைந்த பிரமாண்ட கோவிலாக இந்தத் திருக்கோவில் விளங்குகிறது.

    தண்டபாணி கருவறையின் பின்புறம் மேற்கு நோக்கியபடி, பழமையான அவிநாசியப்பர் சன்னிதி அமைந்துள்ளது. வேறு தலத்தில் இருந்து அச்சு பிசகாமல் இங்கு இடம் பெயர்ந்த அபிநாசியப்பரின் இதன் வரலாறு குறித்து அறியலாம்.

    காங்கேயத்தை அடுத்துள்ள சிலம்பக் கவுண்டன் வலசு என்ற ஊரில், பல்லவர் கால பாணியிலான மிகவும் பழமையான அவிநாசியப்பர் ஆலயம் அமைந்திருந்தது. இவ்வாலயம் மிகவும் சிதிலமடைந்திருந்தது. கோவிலைப் பராமரிக்க இயலாததால், இங்குள்ள மூல மூர்த்தங்களை வேறு ஏதேனும் பெரிய கோவிலுக்குள் வைத்துவிடலாம் என்ற எண்ணம் கோவில் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டது. அதன்படி அந்த ஆலயத்தின் கற்கள், மூல மூர்த்திகள் அனைத்தும் அச்சு பிசகாமல், தண்டபாணி ஆலயத்தின் அருகே நூறு நாட்களில் அமைத்து முடிக்கப்பட்டது. அவி நாசியப்பர் ஆலயத்தில் கருணாம்பிகை அம்பாளும் எழுந்தருளி இருக்கிறார்.


    அவிநாசியப்பர், தண்டபாணி

    கருவறைக் கோட்டத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மன், உமா மகேஸ்வரி, விஷ்ணு துர்க்கை, விசாலாட்சி ஆகிய திருமேனிகள் அமைந்துள்ளன. காசியில் விசுவநாதரை, பக்தர்களே தொட்டு வணங்குவது போல, இங்கும் அடியார்கள் அவிநாசியப்பரை தொட்டு, அபிஷேக, அர்ச்சனை, ஆராதனை செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.

    இவ்வாலயத்தின் சிறப்பே, தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெறும் கோவில் என்பது தான். சித்திரை வருடப் பிறப்பில் தொடங்கி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, கந்தசஷ்டி, நவராத்திரி, தைப்பூசம், மகா சிவராத்திரி என மாதந்தோறும் விழாக்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கின்றது. தைப்பூசத்தன்று தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆலயத்தின் தல விருட்சமாக, முருகப் பெருமானுக்கு உகந்த கடம்ப மரம் அமைந் துள்ளது. தலத் தீர்த்தமாக சரவணப் பொய்கை திகழ்கின்றது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    ஆறு சமயக் கோவில்கள் :

    ஆதிசங்கரர் வடிவமைத்துத் தந்த ஆறு வகை சமயங்களைப் போற்றும் விதமாக சூரியன், சிவன், சக்தி, திருமால், கணபதி, முருகன் என ஆறு தெய்வங்களுக்கும் இடம் தந்த திருக்கோவிலாக, இது அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் தண்டபாணி நடுநாயகமாக விளங்க, தென்கிழக்கில் சூரியன், வடகிழக்கில் அவிநாசியப்பர், வடக்கே குபேரன் திசையில் கருணாம்பிகை, வடமேற்கே பாண்டுரங்கன், நிருதி திசையில் சித்தி மகோற்கட விநாயகர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

    சித்திரத் தேர் :

    திருப்பதி கோவிலின் தேரை உருவாக்கிய ஸ்தபதி கோவிந்தராஜ் தலைமையில், அழகிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அடியில் பூதகணங்கள், மேலே ஆமை தாங்கிட, அதன் மீது பூதேவி, ஆதிசேஷன் ஆகியோர் தாங்கும் விதமாக இந்தத் தேர் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆறு பொறிகளில் முருகப்பெருமான் தோற்றம், நாரதரின் வேள்வியில் தோன்றிய முரட்டு ஆட்டை அடக்கும் முருகன், பிரம்மனை சிறை பிடித்தல், சிவனுக்கு உபதேசம் செய்யும் முருகன், பழத்திற்காக ஆண்டிக் கோலம் பூண்டது என பல்வேறு வரலாற்றுக் காட்சிகள் மரச் சிற்பங்களாக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெறும்.

    அமைவிடம் :

    கோயம்புத்தூருக்கு வடக்கே 9 கிலோமீட்டர் தொலைவில் சின்னவேடம் பட்டியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
    Next Story
    ×