search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சங்கடங்கள் தீர்க்கும் சப்த சிவ தலங்கள்
    X

    சங்கடங்கள் தீர்க்கும் சப்த சிவ தலங்கள்

    சென்னை மயிலாப்பூர் பகுதியில் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பழமையான 7 சிவாலயங்கள் அமைந்துள்ளன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்பவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    சென்னை மயிலாப்பூர் பகுதியில் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பழமையான 7 சிவாலயங்கள் அமைந்துள்ளன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்பவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அந்த ஏழு சிவாலயங்களையும் ‘சப்த சிவ ஸ்தலங்கள்’ என்று அழைக்கிறார்கள். இந்த ஆலயங்களை முறையே காரணீஸ்வரர் கோவில், தீர்த்த பாலீஸ்வரர் கோவில், வெள்ளீஸ்வரர் கோவில், விருபாட்சீஸ்வரர் கோவில், வாலீஸ்வரர் கோவில், மல்லீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் என்ற முறையில் வரிசையாக வழிபாடு செய்ய வேண்டும்.

    இந்த ஆலயங்கள் அனைத்தும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ராமபிரான் இந்த 7 தலங்களையும் வழிபாடு செய்ததாகவும், அந்த முறையிலேயே இன்றும் இந்த ஆலயத்தை வரிசையாக வழிபடும் மரபு உள்ளதாகவும் ஆன்மிக அன்பர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    காரணீஸ்வரர் கோவில்

    சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையில் இருந்து வரும் காரணீஸ்வரர் கோவில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இதன் அருகில் மாதவப் பெருமாள் திருக்கோவிலும் உள்ளது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஆலயத்திற்கு, பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப் பணிகள் செய்யப்பட்டதாக தெரிகிறது. உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்பதால் இத்தல இறைவனுக்கு ‘காரணீஸ்வரர்’ என்று பெயர் வந்துள்ளது. அம்பாளின் திருநாமம் சொர்ணாம்பிகை என்பதாகும். இந்த ஆலயம் வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது. இங்குள்ள சொர்ணாம்பிகையை வழி படுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும், பொருளும் செழிக்கும்.

    தீர்த்தபாலீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் இருக்கிறது, தீர்த்த பாலீஸ்வரர் ஆலயம். மாசி மாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத் தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். இதனாலேயே இத்தல இறைவனுக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திரு நாமம் ஏற்பட்டது. அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் இதுவாகும். சப்த சிவாலயங்களில் இந்தக் கோவில் இரண்டாவதாக வழிபட வேண்டிய ஆலயம். பழங்காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக் குளங்கள் அருகருகே இருந்ததாக கூறப்படுகிறது. தெய்வீ சக்தி வாய்ந்த அந்த தீர்த்த குளங்களில் தான், முன் காலத்தில் இறைவனுக்கு தீர்த்தவாரி நடைபெற்றிருக்கிறது.

    வெள்ளீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே இருக்கிறது, வெள்ளீஸ்வரர் கோவில். சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக இது அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி செய்த யாகத்தின் போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டார். வந்திருப்பது மகா விஷ்ணு என்றும், தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்ராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்ராச்சாரியார் வண்டாக மாறி, கமண்டலத்தில் நீர் வரும் பாதையை அடைத்தார். வாமனராக வந்த விஷ்ணு, தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். இதில் சுக்ராச்சாரியாரின் கண்பார்வை பறிபோனது. இதையடுத்து இத்தல இறைவனை வழிபட்டு தனது கண்பார்வையை சுக்ராச்சாரியார் திரும்பப் பெற்றார். சுக்ர பகவானுக்கு வெள்ளி என்ற பெயரும் உண்டு. எனவே இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படலானார். இத்தல இறைவனை வழிபட்டால், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    விருபாட்சீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூர் கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும், காரணீஸ்வரர் கோவிலுக்கு அருகில் தான் விருபாட்சீஸ்வரர் ஆலயமும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் நான்காவதாக வழிபட வேண்டிய கோவில் இதுவாகும். விசாலாட்சி அம்பாள் சமேதராக விருபாட்சீஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. பைரவர் சன்னிதியும், சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது, இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த ஈசன் இங்கு அருள்கிறார். இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால், நமது மனம், உடல், இதயம் மூன்றையும் இணைக்கும் ஆத்ம பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    வாலீஸ்வரர் கோவில்

    ‘மயிலாப்பூரின் காவல் தெய்வம்’ என்று கூறப்படும், கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது வாலீஸ்வரர் கோவில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் பெரியநாயகி சமேதராக வாலீஸ்வரர் வீற்றிருக்கிறார். இந்தக் கோவில் 2 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. கவுதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோவில். ராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான் என்று கூறப்படுகிறது. எனவேதான் இத்தல இறைவன் ‘வாலீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள், இந்தக் கோவிலின் சிறப்பம்சமாகும். சப்த சிவ ஸ்தலங்களில் 5-வதாக வழிபடவேண்டிய கோவில் இது.

    மல்லீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலை)யில் உள்ள காரணீஸ்வரர் கோவிலுக்குப் பின்புறம் மல்லீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோவில் கொண்ட இறைவனுக்கும் ‘மல்லீஸ்வரர்’ என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இதுவாகும். சப்த சிவ ஸ்தலங்களில் 6-வது தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர் களின் நம்பிக்கை.

    கபாலீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூரின் அடையாளமாக திகழ்வது தான் கற்பகாம்பிகை சமேத கபாலீஸ்வரர் கோவில். இதுவே சப்த சிவ ஸ்தலங்களில் நாம் நிறைவாக வழிபட வேண்டிய ஆலயம். காசியப முனிவர் வழிபட்ட சிறப்புக்குரியது இந்தக் கோவில். திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இதுவாகும். சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய ஆலயம் அமைக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

    புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு ‘மயிலாப்பூர்’ என்று பெயர் ஏற்பட்டது.
    Next Story
    ×