search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தை வரம் அருளும் குற்றம் பொறுத்த நாதர் கோவில்
    X

    குழந்தை வரம் அருளும் குற்றம் பொறுத்த நாதர் கோவில்

    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் இருக்கிறது குற்றம் பொறுத்த நாதர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் இருக்கிறது குற்றம் பொறுத்த நாதர் கோவில். கருப்பறியலூர், கர்மநாசபுரம், மேலைக்காழி போன்றவை தலைஞாயிறு ஊரின் புராண காலப் பெயர்களாகும். இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் குற்றம் பொறுத்தநாதர் என்றும், வடமொழியில் அபராதசமேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் கோல்வளை நாயகி என்பதாகும். வடமொழியில் விஜித்ர வலையாம்பிகை.

    திருஞானசம்பந்தராலும், சுந்தரராலும் தேவாரம் பாடப்பெற்ற ஆலயம் இது. காவிரியின் வடகரையில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 27-வது ஆலயமாக இது திகழ்கிறது.

    தல வரலாறு :

    இலங்கையை ஆட்சி செய்து வந்த ராவணனின் மகன் மேகநாதன். இந்திரனுடன் போரிட்டு அவனை வென்றதால், ‘இந்திரஜித்’ என்ற பெயர் வந்தது. ஒரு முறை மேகநாதன், புஷ்பக விமானத்தில் பறந்து சென்று கொண்டிருந்தான். ஓரிடத்தில் அவனது விமானம் தடைபட்டு நின்றது. அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, விமானத்தின் கீழ் பகுதியில் ஒரு சிவாலயம் இருப்பது தெரியவந்தது.

    இதனால் வருந்திய மேகநாதன், அந்த ஆலயத்திற்குச் சென்று, ஆலய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து வழிபட்டான். இதையடுத்து விமானத்திற்கு ஏற்பட்ட தடை நீங்கி, மீண்டும் புஷ்பக விமானம் பறக்கத் தொடங்கியது.

    அப்படிப்பட்ட அற்புத சிவலிங்கம் உள்ள ஆலயத்தினை நினைத்து மேகநாதனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவன் அந்த ஆலயத்தில் இருந்த லிங்கத்தை, இலங்கைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தான். மறுநொடியே தன் உடல் வலிமைையக் கொண்டு, சிவலிங்கத்தை தூக்க முயற்சித்தான். ஆனால் அவனால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் மூர்ச்சையடைந்து விழுந்தான்.

    மகனின் நிலையை அறிந்த ராவணன், அந்த ஆலயத்திற்குச் சென்று, சிவபெருமானிடம் ‘தன் மகனின் குற்றத்தைப் பொறுத்தருளும்படி’ வேண்டினான். இறைவனும் மயங்கிக் கிடந்த மேகநாதனுக்கு, சுயநினைவு வரச் செய்து அருளினார். இதனால் இந்த ஆலய இறைவனுக்கு ‘குற்றம் பொறுத்த நாதர்’ என்று பெயர் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது.

    விசித்திராங்கன் என்ற மன்னன், தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனை வழிபட்டான். இறையருளால் அவர்களுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ச்சியுற்ற மன்னன், இந்த ஆலயத்தை அழகாக வடிவமைத்துக் கட்டினான் என்று சொல்லப்படுகிறது. சூரிய பகவான் வழிபாடு செய்த திருத்தலம் என்பதால், இந்தப் பகுதிக்கு ‘தலைஞாயிறு’ என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் செய்யப்படும் அறச் செயல்கள், ஒன்றுக்கு பத்தாக பெருகும் என்ற சூட்சுமத்தை பிரம்மதேவன், வசிஷ்டருக்கு கூறியிருக்கிறார். அதனால் வசிஷ்டர் இங்கு வந்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்து மெய்ஞானம் பெற்றதாக தல புராணம் சொல்கிறது. வசிஷ்டரைப் போலவே, 72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்றும் சொல்கிறார்கள். அவர்கள் சிவன் பாதம் சென்றடைவர் என்பது ஐதீகம். இதனால்தான் இந்த திருத்தலம் இருக்கும் பகுதி ‘கருப்பறியலூர்’ என்றும் வழங்கப்படுகிறது.



    அனுமனுக்கு ஏற்பட்ட தோஷம் :

    சீதையை கடத்திச் சென்றதால், இலங்கையில் உள்ள ராவணனுடன் ராமபிரான் போர் புரிந்தார். அந்தப் போரில் ராமனால், ராவணன் கொல்லப்பட்டான். ராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதனைப் போக்க சிவ பூஜை செய்ய வேண்டும் என்று நினைத்தார் ராமபிரான். அதற்காக இரண்டு நாழிகைக்குள் ஒரு சிவலிங்கம் கொண்டு வரும்படி அனுமனுக்கு உத்தரவிட்டார்.

    அனுமனும் சிவலிங்கம் கொண்டு வருவதற்காக வடதிசை நோக்கிச் சென்றார். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமனால் வர இயலவில்லை. ஆகையால் ராமர், மணலில் சிவலிங்கம் செய்து வைத்து சிவபூஜையை முடித்து விட்டார். அவரது பிரம்மஹத்தி தோஷமும் விலகியது. ராமர் மணல் லிங்கம் அமைத்து வழிபட்ட தலமே ‘ராமேஸ்வரம்.’

    தான் வருவதற்குள் லிங்கம் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன், வருத்தம் அடைந்தார். மேலும் மணல் லிங்கத்தை வாலால் கட்டி இழுத்தார். ஆனால் அனுமனால் லிங்கத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படுத்த முடியவில்லை. அத்துடன் அனுமனுக்கு சிவ தோஷம் ஏற்பட்டது.

    ‘சிவனை நினைத்து தவம் இருந்தால், சிவ தோஷம் நீங்கும்’ என்று ராமபிரான் அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய, அனுமன் முன்பாக தோன்றிய சிவபெருமான், ‘அனுமனே! நீ கன்மபுரம் எனப்படும் தலைஞாயிறு சென்று வழிபாடு செய். உன்னுடைய தோஷம் விலகும்’ என்று அருளினார்.

    அதன்படி தலைஞாயிறு வந்து வழிபாடு செய்த அனுமனின் தோஷம் நீங்கியது. தனக்கு கருணை பொழிந்த, சிவனை நினைத்து வடகிழக்கில் ஒரு லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார், அனுமன். இந்த சிவலிங்கம் உள்ள ஆலயம் அமைந்த பகுதி ‘திருக்குரக்கா’ என்று வழங்கப்படுகிறது.

    குற்றம் பொறுத்தநாதர் ஆலயத்தில் சூரிய புஷ்கரணி, பொற்றாமரை குளம், இந்திர தீர்த்தம் ஆகியவை தல தீர்த்தமாக விளங்குகின்றன. கொடி முல்லை தலவிருட்சமாக உள்ளது. இந்த ஆலயத்தில் திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இங்கு சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இத்தல விநாயகர் ‘சித்தி விநாயகர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சீர்காழி சட்டை நாதர் கோவிலைப் போலவே, இந்த ஆலயமும் மலைக்கோவில் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. எனவே தான் இந்த ஆலயம் அமைந்த இடத்தை ‘மேலைக்காழி’ என்றும் அழைத்திருக்கிறார்கள். கோவிலின் முதல் தளத்தில் உமா மகேஸ்வரரும், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் மனைவியுடன் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், குழந்தை பிறந்து இறந்து விடும் தோஷம் உள்ளவர்களும், இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்களின் வேண்டுதல் நிறைவேறியதுடன், இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :


    நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் தலைஞாயிறு பகுதி அமைந்திருக்கிறது.
    Next Story
    ×