search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஞானம் அருளும் சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் கோவில்
    X

    ஞானம் அருளும் சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் கோவில்

    சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் தலத்தில் பக்தியும் ஞானமும் ஒருங்கே இணைந்து இருப்பதை உணர முடிகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சிருங்கேரி சிறப்புகள் :

    துங்கா நதியின் இடது கரையில் சிக்மகளூர் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ளது சிருங் கேரி. நெல்வயல்கள், பாக்கு மரங்கள் புடைசூழ அமைந்துள்ளது.

    ராமாயணத்தில் வரும் கலைக் கோட்டு முனிவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? அவர் தான், குழந்தை வேண்டி தசரதன் செய்த புத்திர காமேட்டி யாகத்தை முன்னின்று நடத்தியவர். பெயர் கலைக்கோட்டு முனிவர். இவருடைய வேறு பெயர் ரிஷ்ய சிருங்கர். இவர் பெயரில் அமைந்தது இவ்வூர்.
    அத்வைத தத்துவத்தை உலகறியச் செய்த ஆதி சங்கரருடன் தொடர்புடையது. கல்விக் கடவுளாகக் கருதப்படும் சாரதா தேவிக்கும், ஆதி சங்கரருக்கும் இங்கு கோவில்கள் உள்ளன.

    இவை தவிர சிற்பக்கலைச் சிறப்பு வாய்ந்த வித்யாசங்கரர் கோவிலும் இங்கு உள்ளது. மலைக்குன்றுகளும் நிலமும் நீர்வளமும் அமைதியான சூழ்நிலையை உண்டாக்குகின்றன. ஆதிசங்கரர் ஏற்படுத்திய நான்கு மடங்களில் சிருங்கேரியில் உள்ள சாரதா பீடமே முதன்மையானது. அதாவது முதன்முதலில் நிறுவியது.
    நமது நாட்டில் நிலவிய பல்வேறு சமயங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் ‘அத்வைதம்’ என்னும் தமது கொள்கையை நிலை நாட்டுவதற்காகத் தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் தாம் ஒருவராகவே பயணம் செய்து போதனைகளை செய்தார் ஆதிசங்கரர்.

    பாரத நாட்டின் நான்கு இடங்களில், அதாவது பத்ரிநாத், பூரி, சிருங்கேரி, துவாரகை ஆகியவற்றில் மடங்களை நிறுவினார் ஆதிசங்கரர். ஆதிசங்கரர் வாரணாசிக்குச் சென்று அங்கிருந்த ‘சுரேஸ்வராச் சாரியார்’ என்ப வரைச் சந்தித்து பல சமயக்கருத்துகளைப் பற்றி உரையாடிய பிறகு சிருங்கேரியில் முதலில் சாரதா பீடத்தை நிறுவினார்.

    சாரதா பீடத்திற்கு பல்வேறு மரபைச் சேர்ந்த மன்னர்கள் கொடைகளை வழங்கியுள் ளார்கள். விஜயநகர மன்னர்கள், ஐதராபாத் நவாப்புகள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் உடையார்கள், மராட்டிய பேஸ் வாக்கள், கேரள அரசர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் கள். பிரிட்டிஷ் அரசும் இந்த மடத்திற்கு தனது பங்கை செய்துள்ளது. மிகச்சிறந்த கல்விமான்களாகவும், மதாச்சாரியார் களாகவும் விளங்கிய வித்யா தீர்த்தர், பாபதி தீர்த்தர், வித்யாரணயர், நரசிம்மபாரதி, சந்திர சேகர பாரதி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இந்த மடத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள். இவர்களுக்கெல்லாம் மூலகாரணமாக விளங்கு பவர் ஆதிசங்கரர். இங்குள்ள ‘சார தாம்பாள் கோவில்’ திராவிடக் கலைப்பாணியில் அமைந்துள்ளது. கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜனார்த் தனர் கோவில் விஜயநகர மன்னர்களின் காலத்தை சேர்ந்தது.

    சிருங்கேரியிலுள்ள ஒரு சிறிய மலையின் மீது பழமையான சிவன் கோவிலும் உள்ளது. இந்நகரிலுள்ள மற்றொரு பழமையான கோவில் பார்சுவ நாத தீர்த்தங்கரர் என்றும் சமண முனிவருக்காக எழுப்பப்பட்டது. சிருங்கேரி மடத்திற்கு நாடு முழுவதும் எழுபதுக்கும் மேற்பட்ட கிளை மடங்கள் உள்ளன. அங்கு வேத பாடசாலை களும், ஆன்மீகச் சொற்பொழிவு களும் நடந்து வருகின்றன.

    ஒவ்வொரு கிளையிலும் நன்கு பராமரிக்கப்படும் நூலகம் ஒன்றும் உள்ளது.சிருங்கேரிக்கு வரும் பயணிகள் ‘பயணிகள் விடுதிகளில்’ தங்கலாம். அவை மடத்தின் நிருவாகத் தில் உள்ளன. இலவச உணவும் வழங்கப்படுகிறது. கோவிலின் அன்னசாலையிலும் இரவு 8.30 மணி வரைத்தான் உணவு வழங்கப்படும். அந்த இடம் மிகத் தூய்மையாகக் காணப்படுகிறது. உணவு பரிமாறப்படும் எவர்சில்வர் தட்டுகள் ஆங்காங்கு சிறுசிறு குன்றுகளாகக் காணப்படுகின்றன.

    முதலில் சூடான அரிசிச் சாப்பாடு, பிறகு மிளகு ரசம், சாம்பார், மோர் இந்த முறையில் பரிமாறப்படுகிறது. அளவு கிடையாது. சாரதாம்பிகை கோவில் ஒரு திருச்சுற்றுடன் அமைந்துள்ளது. எளிமையான கட்டமைப்பு. சிருங்கேரி பீடாதிபதி தினமும் இரவு பத்து மணிக்கு சிறப்பு பூஜை நடத்துவார். அந்த சிறப்பு பூஜை தனியாக ஒரு தியான மண்டபத்தில் நடக்கிறது. அந்த இடத்திற்கு செல்ல துங்கா ஆற்றை கடந்து செல்ல வேண்டும். அதற்கு வசதியான பாலம் கட்டப்பட்டுள்ளது. “யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம். சுழல் உள்ளது”.

    கோவில் அமைப்பு :


    சாரதா அன்னை வீற்றிருக்கும் மண்டபத்திற்குக் கீழ்ப்புறமாய் பலிபீடம், உற்சவ மூர்த்திகள், வெள்ளியாலான விக்னேஷ்வரர், இடதுப்புறம் கலைவாணியாம், சரஸ்வதிதேவி ஆகியோர் காட்சியருளுகின்றனர்.

    கருவறையைச் சுற்றி வரும் போது தெற்குப் பிரகாரத்தில் வியாக்யான சிம்மாசனத்தில் ஸ்ரீ சாரதாம்பிகையின் உற்சவ விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது. இம் மடத்தின் பீடாதிபதியாய் பட்டம் ஏற்கும் ஒவ்வொரு சன்னிதானமும் இச்சிம்மாசனத்தில் தான் முதலில் அமர்வார்களாம். இச்சிம்மாசனத்தின் அருகே வெள்ளி சிம்மாசனம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

    மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ சக்தி கணபதி பத்து கரங்களுடன் காட்சியளித்திடுகின்றார். இவைத் தவிர வீடுகளில் விக்கிரகங்களை வைத்து பூஜை செய்திட இயலாதவர்கள் கொண்டு வந்து வைத்துச் சென்ற பலதரப்பட்ட விக்கிரகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. அன்னையின் சன்னிதிக்கு நேர் மேற்குப் புறமாய் ஸ்ரீ புவனேஸ்வரியின் பஞ்சலோக விக்கிரகம் உள்ளது. இதனை அடுத்து வெள்ளிரதம் உள்ளது.

    பிரதி வெள்ளிக்கிழமையும் அன்னையை இத்திருத்தேரில் அமரச் செய்து பிரகாரத்தைச் சுற்றி வருகிறார்கள். நவராத்திரி தினங்களில் தினமும் இந்த ரதோற்சவம் நடைபெறும். முன் மண்டபத்தில் காணப்படும் இரு தூண்களில் ஸ்ரீராஜ ராஜேஸ்வரியும், ஸ்ரீ மகிஷாசுர மர்த்தனியும் அபய, வரத கரங்களுடன் எழுந்து அருளியுள்ளனர். இம்மண்டபத்தில் இரு துவார பாலகர்களும் உள்ளனர்.

    சிருங்கேரி கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வடக்கிலும், தெற்கிலும் நுழை வாயில்கள் உள்ளன. கோபுரத்திற்கு வெளியே முப்பத்து ஐந்தடி உயரமுடன் கூடிய தீபஸ்தம்பம் காணப்படுகிறது. சாரதா கோவிலுக்கு இடபுறமாய் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் திருக்கோவில் கொண்டுள்ளார். இரண்டு அடி உயரத்துடன் கூடிய பீடத்தில் யோகாசனத்தில் ஆச்சாரியார் அமர்ந் திருக்கிறார். ஆதிசங்கரர் வலப்பக்கமும் தண்டமுடன் இடப்பக்கம் கமண்டலமும் வைக்கப்பட்டுள்ளன. பீடத்தின் கீழே நான்கு சீடர்கள் காணப்படுவதுடன் பீடத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் வைக்கப்பட்டுள்ளன.

    அம்மாளின் திருக்கோவிலுக்கு தென்புறம் ஆதிசங்கரரின் சீடர்களின் ஒருவரும் இம் மடத்தின் முதல் ஆச்சாரியாருமான ஸ்ரீ சுரேச்வதாச்சாரியாரின் அதிர்ஷ்டான ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கும் துங்க நதித்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா சங்கர ஆலயத்திற்கும் இடையே ஸ்ரீ ஜனார்த்தனனின் சிறிய அளவிலான கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

    ஸ்ரீ வித்யா சங்கர ஆலயம் ஸ்ரீசக்கரவடிவுடன் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் 600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுப்பப்பட்டது. அக்கால சிற்ப கட்டுமான வேலைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இவ்வாலயம் விளங்குகிறது. கருவறையில் ஸ்ரீ வித்யா சங்கரர் லிங்க உருவாய் எழுந்தருளியுள்ளார். கருவறைக்கு வெளியே உள்ள இரண்டு சிறுமண்டபங்களில் ஸ்ரீ வித்யா கணபதியும் மகிஷாசுர மர்த்தினியும் சன்னிதி கொண்டுள்ளனர்.

    கருறை மண்டப வெளிச் சுவருக்கு தெற்கில் மகா விஷ்ணு, சரஸ்வதி, மேற்கில் உமையவள் மகேஸ்வரர் ஆகியோருக்கான சன்னிதிகள் அமைந்துள்ளன. இவை அல்லாமல் சிவதாண்டவ மூர்த்தி நம்பி நாராயணர், ஸ்ரீநிவாசர், ஹரிகரர் ஆகியோருக்கான வெண்கல திருஉருவங்களும் சிவலிங்கங்களும் சாளக்கிராமங்களும் உள்ளன.

    இத்தலத்தில் பக்தியும் ஞானமும் ஒருங்கே இணைந்து இருப்பதை உணர முடிகிறது. ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை விளக்கிடும் ஒளி விளக்காய் திகழும் இவ்வாலயத்தை தரிசிப்பது பிறவிப்பயன் ஆகும்.

    பக்தர்களுக்கு ஸ்ரீசாரதா பீடத்தினால் செய்யப்பட்டுள்ள வசதிகள் :


    சிருங்கேரிக்கு எண்ணற்ற யாத்ரீகர்களும் பக்தர்களும் வருகை புரிகின்றனர். அவர்கள் தங்க வசதியாக ஸ்ரீமடத்தினால் ஸ்ரீசங்கர கிருபா, ஸ்ரீசாரதா கிருபா, ஸ்ரீபாரதீ தீர்த்த கிருபா, யாத்ரீ நிவாஸ், ஸ்ரீசங்கர சதனம், ஸ்ரீ ஸ்ரீனிவாச நிலையம் முதலிய விடுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன.

    விடுதிகளில் தங்க விரும்புவோர் ஸ்ரீமடத்தின் நுழைவாயிலின் அருகேயுள்ள வரவேற்பு மையத்தை அணுகலாம். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நிம்மதியாக ஆலய தரிசனம் செய்வதற்கு வசதியாக சக்கர நாற்காலிகளை எவ்வித கட்டணமுமின்றி ஸ்ரீமடம் வழங்குகிறது.

    தேவைப்படுவோர் இவற்றை வரவேற்பு மையத்தில் பெற்றுக்கொண்டு, பயன்படுத்திவிட்டு பின்பு மையத்திலேயே திரும்ப ஒப்படைத்துவிடலாம். ஸ்ரீசாரதாம்பாளின் பிரசாதமாக தினமும் மதியம் (12.15 மணி முதல் 2.30 மணி வரை) மற்றும் இரவு (7.15 முதல் 8.30 வரை) வேளைகளில் ஸ்ரீமடத்தின் அன்னக்கூடத்தல் சுவையான உணவு வழங்கப்படுகிறது. ஸ்ரீபாரதீ தீர்த்த பிரசாதா என அழைக்கப்படும் பிரம்மாண்டமான ஸ்ரீமட உணவுக்கூடத்தில் ஒரே சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவு உட்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாகனங்களில் வருகை புரியும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திட ஸ்ரீமடத்தின் அருகே துங்கையின் வடகரையில் இடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பக்தர்களின் அவசர மருத்துவ தேவைகளுக்கு உதவிட ஸ்ரீமடத்தால் நடத்தப்படும் ஸ்ரீசாரதா தன்வந்திரி இலவச மருத்துவனையும் உள்ளது.

    திருவிழாக்களும் சிறப்பு வழிபாடுகளும் :

    ஜனவரி மாத மத்தியில் (தை மாத தொடக்கத்தில்) மகர சங்கராந்தி பூஜை நடைபெறுகிறது. அதே மாதத்தில் லலிதா பஞ்சமி பூஜையும், சூரிய பூஜையான ரதசப்தமியும் நடைபெறுகின்றன.

    பிப்ரவரி- மார்ச் மாத தருணத்தில் சிவராத் திரியின் போது ஜகத் குருநாதர் இரவு முழு வதும் கண் விழித்து இடைவிடாது ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரருக்கு விதவிதமான அபிஷேக ஆராதனை களுடன் கூடிய பூஜை யைச் செய்வார். குருநிவாஸ் என அழைக்கப்படும் பிரம்மாண்டமான பூஜா வளாகம் அன்றைய இரவு எள் விழக்கூட இடமில்லாத வகையில் பக்தர்களால் நிரம்பியிருக்கும் மார்ச், ஏப்ரல் தருணங்களில் உகாதி (கன்னட புதுவருடம்) மற்றும் ஸ்ரீராமநவமி பண்டிகைகள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    ஏப்ரல்,மே மாத தருணத்தில் ஸ்ரீசங்கர ஜெயந்தி விழா ஸ்ரீ பீடத்தில் ஐந்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. விசேஷ ஆராதனைகள் மற்றும் வித்வத் சதஸ் எனப்படும் பண்டிதர்களின் சபைச்கூட்டங்களும் வெகு விமரிசையாக நடைபெறும். இம்மாதங்களின் பொழுது தான் ஸ்ரீகிரிஜா கல்யாணம் மற்றும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி ஆகியவையும் கொண்டாடப்படுகின்றன.

    ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலங் களில் சாதுர்மாஸ்ய விரதத்தை பீடத்தின் ஜகத் குரு கடைப்பிடிக்கிறார். சன்னியாசிகள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதமாக இது கருதப்படுகிறது. இக்கால கட்டத்தில் ஜகத்குருநாதர் இருக்கும் இடத்தை நாடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அவருக்கு தங்கள் மரியாதைகளை சமர்பித்து அவரது ஆசிகளை பெற்றுச் செல்வார்கள்.

    ஸ்ரீவியாஸ் பூஜையுடன் தொடங்கப்படும் இந்த சாதுர்மாஸ்ய காலங்களில் தான் மிக விசேஷமான பூஜைகளான சிராவண சோமவார பூஜை, ஸ்ரீ வரமகாலட்சுமி பூஜை, ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி, ஸ்வர்ண கௌரி விரதம், ஸ்ரீவரசித்தி விநாயக பூஜை, ஸ்ரீ கேதாரீஸ்வர விரதம், ஸ்ரீவாமன ஜெயந்தி, ஸ்ரீ அனந்த பத்மனாப விரதம், ஸ்ரீஉமா மகேஸ்வர விரதம் ஆகியவை ஜகத்குருநாதரால் நடத்தப்படுகின்றன. ஸ்ரீசாரதா பீடத்தின் பிரதான திருவிழா நவராத்திரி விழாவாகும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இவ்விழாவில் கலந்த கொள்ள நாடெங்கி லுமிருந்து ஆயிரக்கணக் கான பக்தர்கள் சிருங்கேரிக்கு வருகை புரிவார்கள்.

    ஸ்ரீசாரதா பீடத்தின் 12-ம் குருவான ஸ்ரீ வித்யாரண்ய சுவாமிகளிடம் விஜய நகர மன்னர்கள் வேண்டிக் கேட்டுக் கொண் டற்கு இணங்க நவராத் திரியின் ஒன்பது தினங்களில் மட்டும் பீடத்திலுள்ள ஆசார்யசுவாமிகள் மன்னர்களால் சமர்பிக்கப்பட்ட இராஜ குக்கள் அணியும் தர்பார் உடைகளை அணிந்து பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம்.

    நவராத்திரியின் அனைத்து நாட்களிலும் ஸ்ரீசாரதாம்பாள் விதவிதமான அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அளிக்கும் தரிசனத்தை காண கண்கோடி வேண்டும் என்றால் அது மிகையாகாது.

    நவம்பர், டிசம்பர் தருணங்களில் கார்த்திகை சோமவார பூஜை, ஸ்ரீவித்யாசங்கர ஆராதனை, சிராப்தி த்வாதசீ, லஷ தீ போத்சவம் மகா பிரதோஷம், ஸ்ரீசுப்மண்ய லஷ்டி, அந்த காசுர வரதம், ஆர்த்ரோத்சவம், ஸ்ரீகாலபைரவ அஷ்டமி போன்ற பூஜைகள் நடத்தப்படுகின்றன. திருக்கார்த்திகை யட்டி நிகழ்த்தப்பெறும் லஷ தீ போத்சவம் மிக பிரசித்தி பெற்ற ஒன்று.

    அன்றைய தினம் இரவு சிருங்கேரி ஊர் முழுவதிலும் ஒரு லஷம் தீபங்கள் ஏற்றுப் படுகின்றன. மலகானிகரேசுவரர் குன்றிலிருந்து பார்த்தோமானால் சிருங்கேரி ஊரே வைர வைடூரியங்கள் நிறைந்த ஓர் ஆடையை தரிதிருப்பது போலவே தோன்றும்.

    மேற் கூறப்பட்டவை தவிர, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதா ரதோத்சவம், ஸ்ரீதுர்காம்பாள் ரதோத்சவம், ஸ்ரீமலகானிகரேசுவரர் ரதோத்சவம், ஸ்ரீவித்யாசங்கரர் ரதோர்சவம் ஆகியவையும் நிகழ்த்தப்படுகின்றன.

    ஸ்ரீசாரதா பீட ஆலய தரிசன நேரங்கள் பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்


    ஸ்ரீஜகத்குருவை தரிசிக்கும் நேரங்கள்

    காலை 10.30மணி, மாலை5.30மணி, இரவு பூஜை 8.30 ( இவை பொதுவாக ஜகத்குரு மகாசுவாமிகள் தரிசனம் அளிக்கும் நேரங்கள். எனினும், திருவிழா சமயங்களிலும், விஜய யாத்திரை செல்லும் இடங்களி லும் இந்நேரங்கள் மாறுபடலாம்.)

    காலை தரிசனத்தின் போது ஜகத்குருநாதர், வந்திருக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர அபிஷேக தீர்த்த பிரசாதத்தை வழங்குகிறார்.
    நாடெங்கி லுமிருந்து வருகை புரியும் பக்தர்கள் ஜகத் குருவிற்கு பிக்சாவந்தனம், வஸ்த்ர காணிக்கை, பாதுகாணிக்கை, பூஜா காணிக்கை முதலியனவற்றைச் சமர்பித்து தங்களது மரியாதைகளைச் செலுத்துகின்றனர்.

    அச்சமயமே பக்தர்கள் முந்தைய ஆசார்யரின் பாதுகைகளுக்கும், ஸ்ரீசாரதாம்பாளின் பாதுகை களுக்கும் பாத பூஜைகளையும் செய்கின்றனர். மாலை தரிசனத்தின் போது ஜகத் குருநாதர் தம்மை நாடு வோரது சந்தேகங்களை தீர்த்து வைத்து, அவர்களது பிரச்சினைகளுக்கு பரிகாரங்களையும் தந்தருள்கிறார்.

    இரவு ஜகத்குரநாதரே ஸ்ரீசந்திரமௌலீஸ்வர பூஜையைச் செய்கிறார். சிருங்கேரிக்கு வரும் பக்தர்கள் இறையருள் நிறைக்கும் இந்த பூஜையைக் காணாது செல்வதில்லை.

    ஆலய தரிசன நேரங்கள் :


    • ஸ்ரீசாரதாம்பாள் ஆலயம்
    காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை.
    மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.

    • ஸ்ரீவித்யாசங்கரர் மற்றும் ஸ்ரீ தோரண கணபதி ஆலயங்கள்
    காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை
    மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை

    • ஸ்ரீமலஹானிகரேசுவரர் ஆலயம்
    காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை
    மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

    • இதர ஆலயங்கள் மற்றும் சன்னதிகள்
    காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை.
    மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை.

    சிருங்கேரி மடத்தின் பணிகள் :

    சிருங்கேரி மடத்தின் சார்பில் சிருங்கேரியில் ‘சத்வித்யா சஞ்சீவினி பாடசாலை’ என்று ஒரு பள்ளி, அரசாங்க உதவி எதுவும் பெறாமல், தனித்து 100-க்கு மேற்பட்ட மாணவர்களுடன் இயங்கி வருகிறது. இந்த மாணவர்கள் வேதங்களையும், சாஸ்திரங்களையும் குருகுல முறையில் பயின்று வருகிறார்கள். பெங்களூருவிலும், ஐதராபாத்திலும், காலடியிலும் தர்க்கம், வேதாந்தம், மீமாம்சம் போன்ற உயர் வகுப்பு வேதக் கல்வி பயிலும் வசதிகள் கொண்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. உணவு மற்றும் தங்குமிட வசதிகளோடு, கல்வியானது உயர் தரத்தில் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்க விஷயம். நஞ்சன்கூடு, கோபிச்செட்டிப்பாளையம், ராமேஸ்வரம் மற்றும் பல இடங்களில் சிறிய அளவிலான வேத பாடசாலைகள் இயங்கி வருகின்றன.

    சிருங்கேரியில் 125 படுக்கை வசதி கொண்ட நவீன இலவச மருத்துவ மனை ஒன்று இயங்கி வருகிறது. பெங்களூருவிலும், சேலத்திலும் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு மருத்துவமனைகள் உள்ளன. காலடி, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் நவீனக் கல்வி பயிற்றுவிக்கும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் சிருங்கேரி மடத்தின் சார்பில் நடத்தப்படுகின்றன. ஆன்மிக பக்தர்கள் திருத்தல யாத்திரை செல்கையில், திருமலை, வாரணாசி, ஹரித்துவார், கயா, ராமேஸ்வரம், ஸ்ரீ சைலம், கோகர்ணா, காலடி போன்ற இடங்களில் தங்குமிட வசதிகளை சிருங்கேரி மடம் செய்து தருகிறது இவை தவிர, பல தர்ம காரியங்களையும் சிருங்கேரி மடம் செய்து வருகிறது.

    சிருங்கேரியை அடையும் பயண மார்க்கங்கள் :

    விமான மார்க்கம்:

    மங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு சுமார் 100 கி.மீ தொலைவில் சிருங்கேரி திருத்தலம் உள்ளது. விமான நிலையத்தில் இருந்து சிருங்கேரிக்கு வாடகை கார்கள் இயக்கப்படுகின்றன.

    ரெயில் மார்க்கம்:

    சிருங்கேரிக்கு அருகில் மங்களூர் (110 கி.மீ), உடுப்பி (80 கி.மீ), ஷிமோகா (105 கி.மீ) ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன.

    பேருந்து மார்க்கம்:

    சென்னை, பெங்களூர், மைசூர், மங்களூர், உடுப்பி, ஷிமோகா போன்ற நகரங்களிலிருந்து சிருங்கேரிக்கு நேரடி பஸ் வசதி உண்டு.

    சிருங்கேரி மடத்தை தொடர்பு கொள்ள....


    நிர்வாக அதிகாரி
    சிருங்கேரி மடம்,
    சிருங்கேரி, சிக்மகளூர் மாவட்டம்
    கர்நாடகா-577 139
    போன்: +91 8265 250123,
    +91 8265 250594, +91 8265 250192
    பேக்ஸ்: +91 8265 250792
    Next Story
    ×